தேடுதல்

குறும்படப்போட்டி குறும்படப்போட்டி 

இறைவா உமக்கே புகழ் பத்தாம் ஆண்டு நிறைவு குறும்படப் போட்டி

செப்டம்பர் 10, புதனன்று, “ஆசியாவில் Laudato Si திருமடலின் தாக்கம் மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓர் இணைய கருத்தரங்கின் போது, ரேடியோ வெரித்தாஸ் நிறுவன மேலாளர் அருள்பணி ஃபெல்மார் ஃபியல், SVD அவர்களும், இயக்குநர் அருள்பணி ஜான் மிஷன் அவர்களும் இந்த குறும்படப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டார்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஆசிய வெரித்தாஸ் வானொலியானது (RVA), ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பு மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகத்தோடு (FABC–OSC)  இணைந்து பன்னாட்டுக் குறும்படப் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 10, புதனன்று, “ஆசியாவில் Laudato Si திருமடலின் தாக்கம் மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓர் இணைய கருத்தரங்கின் போது, ரேடியோ வெரித்தாஸ் நிறுவன மேலாளர் அருள்பணி ஃபெல்மார் ஃபியல், SVD அவர்களும், இயக்குநர் அருள்பணி ஜான் மிஷன் அவர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.

ஆசிய சுற்றுச்சூழல் குறித்த குறும்படப் போட்டியானது இளம் திரைப்பட தயாரிப்பாளர்களை Laudato Si' பற்றிய உண்மையான மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோக்களை உருவாக்க ஊக்குவிக்கும் என்றும், குறிப்பாக ஆசியாவில் படைப்பைப் பராமரிக்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறினார் வெரித்தாஸ் வானொலியின் (RVA) இயக்குநர் அருள்பணி ஃபெல்மர் ஃபீல்.

போட்டிக்கான கவர்ச்சிகரமான பரிசுகள், பல திரைப்பட தயாரிப்பாளர்களை பங்கேற்க ஊக்குவிக்கும் என்றும், சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்து ஆசியர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் அதன் முயற்சிகளில் ஆதரவளிப்பதே, தங்கள் நோக்கம்" என்றும் கூறினார் வெரித்தாஸ் வானொலியின் செயல்திட்ட இயக்குநரும் FABC சமூக தொடர்பு அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளருமான அருள்பணி. ஜான் மி ஷென்.

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு

தலைப்பு

ஆசியக் கண்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு – நம் பொது வீடு பூமியை காப்பாற்ற Laudato si கற்பிக்கும் பாடங்களை எப்படி செயலாக்குவது?

பரிசுத் தொகை

முதல் பரிசு: USD 1,000 (ஏறக்குறைய ₹88,000)

இரண்டாம் பரிசு: USD 800 (ஏறக்குறைய ₹70,000)

மூன்றாம் பரிசு: USD 500 (ஏறக்குறைய ₹45,000)

இது தவிர, பத்து சிறப்பு படைப்புகளுக்கு தலா USD 100 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பத்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள்

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமயம், நாடு, வயது போன்ற எந்தத் தடையும் இல்லை. தனிப்பட்ட நபர்கள்/அமைப்புகள் இரண்டிற்கும் அனுமதி உண்டு. மாணவர்கள், சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், கன்னியர் இல்லங்கள், துறவற சபைகள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டிக்கான விதிமுறைகள்

•               குறும்படம் ஆசியக் கண்ட சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

•               படைப்புகள் எந்த மொழியிலும் இருக்கலாம். உரையாடல் மற்றும் விவரிப்பிற்கு ஆங்கில subtitle-கள் கட்டாயம்.

•               நீளம்: 3 முதல் 5 நிமிடங்களுக்கு இடையில் இருக்க வேண்டும் (தீவிரமாக அமல்படுத்தப்படும்).

•               குறும்படம் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்; காப்புரிமை சிக்கல்கள் இருக்கக் கூடாது.

•               வடிவம்/அளவு: Full HD (1920x1080), MP4 அல்லது MOV.

•               ஒரு நபர்/ஒரு அமைப்பு, ஒரு படைப்பை மட்டுமே அனுப்பலாம்.

•               AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம்; ஆனால் அது மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தும்.

•               படைப்பை சமர்ப்பிக்க கடைசி நாள்: 10 நவம்பர், இரவு 11:59 (பிலிப்பைன்ஸ் நேரம்).

Google Form  வழியாக, போட்டியில் பங்கேற்பை பதிவு செய்யவும், படைப்புகளை அனுப்பவும் https://forms.gle/sLkjEKJjkbdwQkZK9  என்ற இணைப்பை பயன்படுத்துங்கள். போட்டி பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைத் தெரிந்துக் கொள்ள https://www.rvasia.org/laudato-si-film-making-contest  என்ற கொழுவியை அணுகவும்.

“ஆசிய கிறிஸ்தவத்தின் குரல்” (Voice of Asian Christianity) என அழைக்கப்படும் ரேடியோ வெரித்தாஸ் ஏசியா, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பில் ஈடுபட்டுள்ள ஓர் ஊடக நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய ஆயர்களின் முன்னெடுப்பில், 1969 ஆம் ஆண்டு ஒரு வானொலி நிலையமாகத் தொடங்கி, கண்டத்தின் பல்வேறு நாடுகளுக்கு அந்நாட்டு மக்களின் தாய்மொழிகளில் சேவையளித்து வந்த இந்நிறுவனம், காலத்தின் மாற்றங்களை கருத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டு டிஜிட்டல் தளமாக உருமாறியது. இன்று 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 செப்டம்பர் 2025, 14:44