தேடுதல்

புனித கார்லோ அகுதீஸ் புனித கார்லோ அகுதீஸ்  (ANSA)

சீயோலில் புனித கார்லோ அகுதீஸ் நினைவுச்சின்னம் அர்ச்சிப்பு

ஒருவர் மற்றவரைப் பின்பற்றுவதன் வழியாக அல்ல, மாறாக கடவுள் நமக்கு வழங்கிய பரிசுகளை உண்மையாக வாழ்வதன் வழியாக நாம் புனிதத்துவ வாழ்க்கை வாழ அழைக்கப்படுகின்றோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

"உண்மையான மகிழ்ச்சி என்பது தன்னலம் சார்ந்த வாழ்க்கையில் அல்ல, மாறாக கடவுளை மையமாகக் கொண்ட வாழ்க்கையில் மலரும்" என்றும், இரண்டாயிரமாம் ஆண்டின் முதல் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ள புனித கார்லோ அகுதீஸ், நற்செய்தியைப் பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார் ஆயர் ஜோப்கோ.

செப்டம்பர் 17, புதன்கிழமையன்று மாலை 7.30 மணிக்கு WYD சியோல் 2027 உள்ளூர் ஏற்பாட்டுக் குழு (LOC) அலுவலக கட்டிடத்தின் முதல் மாடி ஆலயத்தில் புனித கார்லோ அகுடிஸின் (1991–2006) நினைவுச்சின்னங்களை வைப்பதற்காக நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் சியோல் மறைமாவட்ட துணை ஆயர் ஜோப் கோ.

இன்றைய நற்செய்தி உண்மையான மகிழ்ச்சியைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது என்று கூறிய ஆயர் ஜோப் கோ அவர்கள், மகிழ்ச்சி செல்வம், புகழ், இளமை, ஆரோக்கியம் அல்லது சமூக வெற்றியைப் பொறுத்தது என்று உலகம் நமக்குச் சொல்கிறது என்றும் கூறினார்.

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் அலைபேசிகள், தகவல் தொழில்நுட்ப செயலிகள் வழியாகப் பெறும் அதிக 'விருப்பங்கள்' நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று வலியுறுத்திய ஆயர் ஜோப் அவர்கள், கடவுளுடனான ஆழமான தொடர்பு மற்றும் நீடித்த மகிழ்ச்சிக்கான ஒரே பாதை புனிதத்துவ வாழ்வு என்பதை நமக்கு எடுத்துக்காட்டியவர் இளம் புனிதர் அகுதீஸ் என்றும் கூறினார்.

"நாம் ஒவ்வொருவரும் நமது தனித்துவமான பாதையில் புனிதத்திற்கு அழைக்கப்படுகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை வலியுறுத்திய ஆயர் அவர்கள், ஒருவர் மற்றவரைப் பின்பற்றுவதன் வழியாக அல்ல, மாறாக கடவுள் நமக்கு வழங்கிய பரிசுகளை உண்மையாக வாழ்வதன் வழியாக நாம் புனிதத்துவ வாழ்க்கை வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 செப்டம்பர் 2025, 15:48