பல்சுவை - நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் – நம்பிக்கையின் ஒளி
மெரினா ராஜ் – வத்திக்கான்
நான்கு திசைகள், நானிலம், நாற்சக்கரம், நாற்கடல் என்று பல வகைகளில் நாம் நான்கு என்ற எண்ணை மிகச்சிறப்பானவைகளை எடுத்துக்கூற பயன்படுத்துகின்றோம். ‘நான்கு பேர் நான்கு விதமா பேசுவார்கள் என்று, நாலு பேருக்கு நல்லது நடக்கவேண்டும் எனில் எதுவும் தவறில்லை என்றும் கூறும் வழக்கம் நம்மிடையே உண்டு. மேலும் நாலு காசு சம்பாதிப்பதற்காகவாவது நன்றாகப் படிக்க வேண்டும். நான்கு ஊர்களைச் சுற்றினாதான் உலகம் புரியும், அவர் நாலும் தெரிஞ்சவரு; நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட்டு வர வேண்டியதுதானே’ என எதற்கெடுத்தாலும் நான்கு என்ற எண்ணை மையப்படுத்தி பேசுவதைக் கேட்டிருப்போம். சில நேரங்களில் நாமும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்போம். இந்த ‘நான்கு என்ற எண்ணிற்கு அப்படி சிறப்பு உள்ளது.
நான்கு என்பது வெறும் எண் மட்டுமல்ல ஒன்றிப்பின் அடையாளம். சம அளவுள்ள நான்கு பக்கங்களை கொண்ட அளவையை நாம் சதுரம் என்று அழைக்கின்றோம். நான்கு மூலைகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இணைந்திருக்கும்போது தான் அந்த சதுரம் முழுமை பெறுகின்றது. நமது வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருவிவிலியத்திலும் பல்வேறு இடங்களில் இந்த நான்கு என்ற எண் மிகச்சிறப்பு பெறுகின்றது. தொடக் நூலில் கடவுள் இந்த உலகைப் படைத்த நிகழ்வுகளைக் கூறுமிடத்து, (தொடக்க நூல் 2:10) தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று. என்று என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆக கடவுளால் முதன் முதல் உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தை செழிப்பாக்கும் ஆறுகள் நான்காகப் பிரிந்து வளம்தருகின்றன என்று எடுத்துரைக்கின்றார் விவிலிய ஆசிரியர். விடுதலைப்பயணத்தில் கடவுளின் இருப்பை உணர்வதற்காக கடவுள் உருவாக்கச் சொன்ன உடன்படிக்கைப் பேழை பற்றிக் கூறுகையில், “நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய் என்று ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க நான்கு வளையங்களைப் பொருத்தச் சொல்கின்றார் யாவே இறைவன். விடுதலைப்பயண நூலில், “விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள். எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்” என்று சொன்னார். நற்செய்தியாளர்கள் நான்கு என இப்படியாக திருவிவிலியம் முழுவதும் ஏராளமான இடங்களில் நான்கு என்ற எண்ணை முதன்மைப்படுத்தி முன்னிலைப்படுத்தி பல செயல்கள் செய்யப்படுகின்றன. திருவிவிலியத்தின் இறுதிப் பகுதியாகிய திருவெளிப்பாடு நூலில், (திருவெளிப்பாடு 21:16) அந்நகரம் சதுரமாய் இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்த அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான். என்று புதிய நகராம் எருசலேம் குறித்து எடுத்துரைக்கின்றார் இறைவன்.
4 என்று எழுதப்படும் எண்ணும் நான்கு கோடுகளால் ஆனது. நமது உடலில் மரபணுக்களைக் குறிக்கும் எழுத்துக்கள் நான்கு. இரத்தம், இதயம். மூளை, கண் கருவிழி, பற்கள், மனிதனின் தசைகள், கணிதம் என அனைத்தும் நான்காக தான் வகைப்படுத்தப்படுகின்றன. ஆக நான்கு என்ற இந்த எண்ணின் மகத்துவம் அறிந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தனது பணிக்காலத்தில் நான்கு சுற்றுமடல்களை எழுதியுள்ளார். நம்பிக்கையின் ஒளி, இறைவா உமக்கே புகழ், நாம் அனைவரும் உடன்பிறந்தோரே, அவர் நம்மை அன்பு கூர்ந்தார் என்னும் நான்கு சுற்றுமடல்களை அவர் நமக்கு வழங்கி இருக்கின்றார். எனவே இனிவரும் நம்முடைய ஞாயிற்றுக்கிழமை பல்சுவை நிகழ்ச்சியில் நன்னெறியூட்டும் நான்கு பெரியவை என்னும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களைக் காண இருக்கின்றோம். இந்த நான்கு பெரியவைகளில் முதலாவதாகத் திகழும் நம்பிக்கையின் ஒளி என்னும் சுற்றுமடல் குறித்த தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் கசி இராயப்பா. வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், இயற்கை நல ஆர்வலருமான அருள்பணி இராயப்பா கசி, அவர்கள் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இயற்கை மேல் தான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிறருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருப்பவர். தந்தை அவர்களை நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் என்ற தலைப்பில் நம்பிக்கையின் ஒளி என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்