தடம் தந்த தகைமை – ஆண்டவரை நோக்கி மன்றாடிய அரசன் ஆசா
மெரினா ராஜ் – வத்திக்கான்
எத்தியோப்பியன் செராகு, பத்து இலட்சம் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து, மாரேசா வரை வந்தான். ஆசா அவனை எதிர்த்துச் செல்ல, அவர்கள் மாரேசாவிலுள்ள செப்பாத்தா சமவெளியில் போருக்கு அணிவகுத்து நின்றனர். அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்” என்று மன்றாடினான்.
ஆண்டவர் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர். அப்பொழுது ஆசாவும் அவனோடிருந்த மக்களும் அவர்களைக் கேரார் வரை துரத்திச் சென்றனர். ஆண்டவருக்கும் அவர் மக்களுக்கும் முன்பாக எத்தியோப்பியர் வீழ்ச்சியுற்றனர்; அவர்களுள் எவனும் உயிர் தப்பவில்லை, அவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டனர். யூதாவின் வீரர்களோ மிகுதியான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கேராரைச் சுற்றியிருந்த எல்லா நகர்களையும் வீழ்த்தினர்; ஏனெனில், ஆண்டவரின் அச்சம் அவற்றைப் பற்றிக்கொண்டது. எல்லா நகர்களையும் அவர்கள் சூறையாடினர்; ஏனெனில், அங்கே கொள்ளைப் பொருள்கள் மிகுதியாய் இருந்தன. மேலும், அவர்கள் கூடாரங்களை இழுத்துத் தள்ளி, ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றி எருசலேமுக்குத் திரும்பினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்