தேடுதல்

அரசர் சாலமோன் அரசர் சாலமோன்  

தடம் தந்த தகைமை – கோவிலை நோக்கி செபித்த அரசர் சாலமோன்

நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்! இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும்போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி, ஆகியவற்றால் பயிர் அழிவுறும்போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும்போதும், வாதையோ வேறெந்த நோயோ வரும்போதும், எந்த ஒரு மனிதரோ உம் மக்கள் இஸ்ரயேலர் அனைவருள்ளும் எவரோ, ஒவ்வொருவரின் வாதையையும் நோயையும் உணர்ந்து, இந்தக் கோவிலை நோக்கித் தம் கைகளை விரித்துச் செய்யும் எல்லா வேண்டுதல்களையும், எழுப்பும் எல்லா விண்ணப்பங்களையும், உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்! இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!

மேலும், உம் மக்கள் இஸ்ரயேலைச் சாராத அந்நியர் ஒருவர் மாண்புமிகு உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல்மிகு உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டுத் தொலைநாட்டிலிருந்து வந்து இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அந்நியன் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால், உலகின் மக்கள் எல்லாரும் உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள்! மேலும், நான் எழுப்பியுள்ள இக் கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்! 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 அக்டோபர் 2025, 16:59