நேர்காணல் – திருஅவையில் நீதி மற்றும் ஆலோசனைக்கான செயல்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நீதி இல்லாத ஓர் அரசு, உண்மையான ஓர் அரசு அல்ல என்றும், உண்மையில், நீதி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையைப் பகிர்ந்து கொடுக்கும் நல்லொழுக்கம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. நீதி மற்றும் அதன் செயல்பாடுகள், சமூகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கும், ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனச்சான்றை ஊக்குவிக்கின்ற மற்றும் வழிநடத்துகின்ற ஓர் முக்கிய நற்பண்பாகவும் அமைகின்றது என்று செப்டம்பர் மாதம் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட நீதித்துறையினருக்கான யூபிலியின் பங்கேற்பாளர்களுக்கு கூறினார் திருத்தந்தை. மனித சகவாழ்வில் ஓர் உயர்ந்த செயல்பாட்டைச் செய்ய அழைக்கப்படும் நீதியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் திருஅவையில் பணியாற்றி வருகின்றனர் அவ்வகையில் இன்றைய நமது நேர்காணலில் திருஅவையில் நீதி மற்றும் ஆலோசனைக்கான செயல்கள் பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் சுவாமி நாதன்.
பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்தவரான அருள்முனைவர் சுவாமிநாதன் அவர்கள், 1978 குருப்பட்டம் பெற்றார். உரோமில் உள்ள உர்பானியானோ திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சட்டவியலில் சிறப்புப் பட்டத்தினை கிரகோரியன் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1984 – 1989). பாண்டிச்சேரி கடலூர் உயர்மறைமாவட்டத்தின் நீதித்துறை ஆயர் பதிலாளாக (Judicial Vicar) 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உயர் மறைமாவட்ட சிறப்பு ஆணையங்களிலும் பணியாற்றியுள்ள தந்தை அவர்கள், உப்பளம் பகுதி பங்குத்தந்தையாகவும், கடலூர் இளம்குருமட அதிபராக 4 ஆண்டுகளும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றியுள்ளார். 2010-2017 ஆண்டு வரை உயர்மறைமாவட்டத்தின் கல்வி ஆணைக்குழு செயலராகவும், 2017 – 2023 ஆண்டு வரை கடலூர் திருத்தந்தை புனித ஜான் பால் கல்வியியல் கல்லூரி செயலராகவும், பணியாற்றியுள்ளார். மேலும் (2023 - 2025) புனித ஜோசப் தன்னாட்சி கலைக் கல்லூரி செயலராகவும், ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை அவர்கள், பாண்டிச்சேரி கடலூர் உயர்மறைமாவட்டம் மற்றும் துறவற சபைகளுக்கு திருஅவை சட்ட ஆலோசகராகவும் உதவி வருகின்றார். தற்போது பொது நிலையினருக்கான (Episcopal Vicar) ஆயர் பதிலாளாக் கடந்த ஆண்டு முதல் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை அவர்களை திருஅவையில் நீதி மற்றும் ஆலோசனைக்கான செயல்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
அருள்முனைவர் சுவாமிநாதன்
1. விவிலியத்தில் யூபிலி கொண்டாடுவது பற்றி லேவியர் 25:16-25 விவரிக்கிறது. ஒவ்வொரு 50வது ஆண்டும் யூபிலி ஆண்டாக கொண்டாடப்படும். அவ்வாண்டில் கடன்கள் மன்னிக்கப்பட்டு நிலங்கள் மீண்டும் உரியவருக்கே திருப்பப்பட்டு இவ்வாறு மீண்டும் ஒவ்வொருவரும் இழந்ததை பெற வழிவகுக்கிறது. புதிய ஏற்பாட்டில் மீட்பின் நிறைவை அடிப்படையாக கொண்டு யூபிலி கொண்டாடும்போது நாம் இழந்ததை மீண்டும் பெற்று அதாவது இறைபிள்ளைக்குரிய அந்த மாண்பை அந்த உரிமையை பாவத்தினால் இழந்திருந்தால் அதை மீண்டும் பெற்று புதுப்பிக்கப்பட அழைப்பு தரப்படுகிறது. அதனால் தான் நம்பிக்கையே அவர்களுக்கு நீதியாக கருதப்படுகிறது. யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களின் நோக்கமே நம்பிக்கையாளர்களுக்கு நீதியை அதாவது அவர்களுடைய மீட்பு என்ற உரிமையை பெற்றுத் தர வழிவகுப்பதாகும். திருஅவையில் நீதி வழங்குவோர்க்கும் சட்ட ஆலோசனை வழங்குவோர்க்கும் யூபிலி ஆண்டில் சிறப்பு பொறுப்புகள் உண்டு.
2. திருஅவை புனிதமானது என்று நாம் அறிக்கையிடுகிறோம். அது அன்பின் சமூகம், அருளாட்சி சமூகம் என்றும் கூறுகிறோம். ஆனால் திருஅவையின் நம்பிக்கையாளர்கள் மனிதர்கள்தான், அவர்களும் ஒரு திருஅவையாக இணைந்து 'மீட்பு" என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். அதனால் அவர்களுக்குள் கடமையும் உரிமைகளும் எழுகின்றன. எனவே இந்த திருஅவையை நெறிப்படுத்தவும் வழிநடத்தவும் திருஅவையில் சட்டங்களும் நெறிமுறைகளும் உள்ளன. திருஅவை நம்பிக்கையாளர்கள் அடிப்படை மனித மாண்புக்கு சொந்தக்காரர்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் மீட்கப்பட்ட மக்கள் என்ற மாண்பும், இறையரசுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற சிறப்பும் அவரவர்களுக்கு தனிப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் தருகின்றன. பில:16 இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, நம்பிக்கையாளர்களுக்கும் அவர்களை நெறிப்படுத்தும் திருஅவை ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக இருப்பதே திருஅவையில் நீதி வழங்குவோர் மற்றும் சட்ட ஆலோசனை வழங்குவோரின் பணிகளாகும். திருஅவை நம்பிக்கை சமூகமாகவும் அன்பின் சமூகமாவும் இருப்பதே அதன் இயல்பு. நம்பிக்கையும் அன்பும் திருஅவைக்கு இறையாட்சியின் மாண்பை தருகிறது. அப்படியென்றால் இந்த மாண்பு நம்பிக்கையாளரின் உரிமையாகும். இறைவார்த்தையை அறிவிக்கும் கடமையும், உரிமையும், அருள் அடையாளங்கள் மூலம் மீட்பின் பாதையில் பயணிக்கவும் உரிமை தருவதும் இந்த மாண்புதான். திருஅவையில் நீதி வழங்குவதும், சட்ட ஆலோசனை வழங்குவதும் இந்த மாண்பை காப்பதில் அடங்கியிருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால் நம்பிக்கையாளர்கள் இறையாட்சிக்கு தகுதியான வாழ்வு வாழவும் அதற்கு தேவையான அருள் உதவிகளை பெறுவதும் அவர்களுடைய அடிப்படை உரிமையாகும். திருச்சட்டம் எண்கள் 208-223 இந்த அடிப்படை உரிமைகளை விவரிக்கின்றன. இந்த உரிமைகளை, தேவைகளை பெறுவதில் தடை ஏற்படும்போதும் அல்லது மறுக்கப்படும்போதும் அல்லது மறைக்கப்படும்போதும் திருஆட்சியாளரிடம் முறையீடு செய்யவும், உரிய நிவாரணம் பெறவும் திருச்சட்டம் வழிவகுக்கிறது. திருஅவையில் காணப்படும் பிணக்குகள், வழக்குகள், கோரிக்கைகள் எல்லாம் இந்த உரிமைகளை பற்றியதாகவே இருக்கும். இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அங்கு அநீதி இழைக்கப்படுகிறது. திருஅவையில் நீதி வழங்குவது என்பது வெறும் சட்டங்கள் நிலைநாட்டுவதல்ல. மாறாக நம்பிக்கையாளர்கள் அருள்வாழ்வு பெறும் உரிமையும் மாண்பையும் மீட்டு கொடுப்பதாகும். அதுவே நீதி வழங்கும் பணியாக கருதப்படுகிறது. உலகப் பார்வையில் ஒரு நாட்டின் சட்டம் மக்களுக்கு வழங்கும் உரிமையை மீட்டு கொடுப்பதும் தவறு இழைத்தோரை தண்டிப்பது நீதி என்று கருதப்படுகிறது. இந்த செயல்முறையில் தனிமனித மாண்பும், உரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்பதைவிட சமூகத்தில் சட்டம் ஒழுங்குநிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அளவுகோலாக இருக்கும். திருஅவையில் நீதி வழங்குவது என்பது உலக மரபிற்கு வேறுபட்டதாக இருக்கும். திருஅவையில் நம்பிக்கையாளர்களுக்கு இறை இயேசுவை கண்டடைவது அவருடைய அருள்பிரசன்னத்தை உணர்வது அவர்கள் பெற்றுள்ள உரிமையாகும். திருஅவையில் அருட்சாதன கொண்டாட்டங்கள், வழிபாடுகள், இறைவார்த்தை அறிவித்தல், அறப்பணிகள் ஆற்றல் இவைபோன்ற மேய்ப்பு பணிகள் மூலம் நம்பிக்கையாளர்கள் இறையாட்சிக்கு தகுதி உள்ளவர்களாக உருவாக்கம் பெற திருஅவை அருட்பணியாளர்கள் ஆட்சிப்பணியில் இருப்பவர்கள் செயலாற்றுகிறார்கள். மேற்சொன்ன மேய்ப்பு பணிகளை நெறிப்படுத்தும் சட்டங்களும் விதிமுறைகளும் நம்பிக்கையாளர்களின் மீட்புக்காகத்தான். வழக்குகள், பிணக்குகள், விதி மீறல்கள் என்று எவை வந்தாலும் அதற்கு தீர்வு காணும் போது சம்பந்தப்பட்ட நம்பிக்கையாளர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக விளங்கும்.
3. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்கு Caritas in veritate என்ற மடலில் திருஅவையில் நீதி என்பது அன்பிலும் உண்மையிலும் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். உண்மையென்றால் நமது அடையாளம் என்ன என்பதை அறிவதாகும். நாம் இறைவனின் சாயலாக உருவாக்கப்பட்டவர்கள் இறை இயேசுவால் இறப்பு உயிர்ப்பால் மீட்கப்பட்டவர்கள். இதுவே நமது அடையாளம். நீதி வழங்குவது என்றால் அவரவர்க்கு உரியதை அவருக்கே கொடுப்பது. அன்பில் நீதி என்பது ஒருவருக்கு உரியதை கொடுப்பது மட்டுமல்ல அதையும் கடந்து ஒருவருக்கு எது நலன் பயக்கும் என்பதையும் அறிந்து அதையும் சேர்த்து கொடுப்பதில்தான் நீதி இருக்கிறது என்று கூறுகிறார். அன்பும் பகிர்தலும் உலகிலுள்ள ஒட்டுமொத்த தீமையை வெல்லும் என்பதை இறுதி தீர்ப்பு நாளில் உணருவோம் என்று கூறுகிறார். இந்த கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் சுழஅயn சுழவய பயிற்சியாளர்களுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் வலியுறுத்தி சட்டங்களை நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் புரிந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். (Roman Rota Nov.2024)
ஒவ்வொரு நம்பிக்கையாளரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், வரலாற்று சமூக சூழலில் வாழ்கின்றார் என்பதை உணர்ந்து அந்த சூழலில் அவருக்கு நீதி வழங்குவது எப்படி என்பதை நீதி வழங்குபவர்கள் கவனமாக சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஓய்வுநாள் சட்டங்கள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டன, மனிதன் சட்டத்திற்காக அல்ல என்று ஆண்டவர் சொல்கிறார். மாற்கு-2:27
திரு அவையில் நீதி வழங்குகின்றவர்கள், திருசட்ட ஆலோசனை வழங்குகிறவர்கள் கடவுளுடைய நீதியின் கருவிகளாக செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்துகிறார். கடவுளுடைய நீதி என்பது நம்பிக்கையாளரின் அருள் உரிமையை மனதில் கொண்டு அன்பிலும் உரிமையிலும் கட்டப்பட்டதாக இருக்கும் என்று கூறுகிறார்.
எனவே தான் திருச்சபையுடைய சட்டத் தொகுப்பில் வருகின்ற கடைசி சட்டம் 17-52 ஆன்மாவை மீட்பே திருச்சபையின் உச்ச சட்டமாக கருதப்படும் எல்லா சட்டங்களும் இதை மனதில் கொண்டே விளக்கங்கள் பெற வேண்டும் என்று கூறுகிறது.
4. திருத்தந்தை பிரான்சிஸ் யூபிலி ஆண்டை அறிவிக்கும் Spes Non Confundit என்ற மடலில் இவ்வாறு கூறுகிறார். இன்று அறிவியல் வளர்ச்சி காரணமாக மக்கள் முன்பைவிட வசதியாக வாழ்க்கபை; பெற்றுள்ளார்கள். தொலைதொடர்பு கருவிகள் இன்றைய உலகத்தை ஒரு சிறு நகரமாக மாற்றியுள்ளது என்பது உண்மையென்றாலும்
இனம், மொழி, நிறம் போன்ற அடிப்படையில் மனித சமூகம் பிளவுபட்டுகிடக்கிறது. உலகில் பல பாகங்களில் போர்களும் போர் பதட்டங்களும் பெருகி வன்முறை வறுமை உள்ளிட்ட பல துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன. மக்கள் இடம் பெயர்தல் என்பது இன்று ஒரு பிரச்சனையாக உறுவெடுத்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அச்சம், அமைதியின்மை பெருகி வருகிறது. இந்தச் சூழலில் நம்பிக்கையாளர்கள் உலக மக்களுக்கு எதிர்நோக்கின் அடையாளங்களாக விளக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். உலக மக்கள் விரும்பித்தேடும் உண்மையான அமைதி மனித மாண்பில்
கட்டப்பட வேண்டும். உலகத்திலுள்ள செல்வங்கள் உலக மக்களின் ஒட்டுமொத்த தேவைக்காகவே என்பதை உணர்ந்து சுயநலத்தை வேறருத்து எதிர்காலம் இருக்குமா என்று கவலையோடு நம்பிக்கை இழந்து வாழும் பிணியாளர்கள், வறுமையில் உள்ளவர்கள், போரினால் பாதிக்கப்பட்டோர், வேலையின்றி வாடும் இளைஞர்கள் இளம்பெண்கள், தனிமையில் உள்ளவர்கள், போன்ற அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பெறும் வண்ணம் திருஅவை ஓர் அடையாளமாக விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.
5. உலக மக்களுக்கு திருஅவை எதிர்நோக்கின் அடையாளமாக இருக்க வேண்டுமென்றால் திருஅவையே முதலில் உண்மையிலும் அன்பிலும் நீதியிலும் கட்டப்பட்ட சமூகமாக விளங்க வேண்டும். முதல் திருஅவையின் செயல்பாட்டை திரும்பிப் பார்க்கும் போது தற்போதைய திருஅவை பல திருத்தங்களை பெறவேண்டியுள்ளது. திருமுழுக்கு பெற்ற நம்பிக்கையாளர் அனைவரும் மாண்பில் சமத்துவம் பெறுகின்றனர். ஆனால் இந்த சமத்துவ உரிமை பல நேரங்களில் மீறப்படுகின்றன என்பதே உண்மை. பங்கு தளங்கள், மறைமாவட்ட நிர்வாக மையங்கள், திருஅவையால் நடத்தப்படும் பல நிறுவனங்களின் நிர்வாகங்களிலும், நிதி மேலாண்மையிலும் வெளிப்படை தன்மை இன்று அதிகம் தேவைப்படுகிறது. திருஅவை மேற்கொள்ளும் அறப்பணிகளில் நலிவுற்றவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சேவை மேற்கொள்ளப்பட வேண்டும். திருஅவையின் எல்லா மட்டங்களில் நம்பிக்கையாளரின் பங்கேற்பும் இணைந்து செயலாற்றும் சூழல் இன்னும்
அதிகமாக போற்றப்பட வேண்டியுள்ளது. திருஅவையில் குறைதீர்க்கும் அமைப்புகள் தகுந்த வழிமுறைகளோடு செயல்படவும் நம்பிக்கையாளர்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கப்பட முiறான மேலாண்மை இன்று அதிகம் தேவைப்படுகிறது. இந்த யூபிலி ஆண்டு திட்டங்களில் தலத்திருஅவை மேற்சொன்ன கருத்துகளை செயல்படுத்தினால் யூபிலி சிறப்பாக இருக்கும் என்பது எமது கருத்து. திருஅவையில் நீதி வழங்குபவர்கள் மற்றும் சட்ட ஆலோசனை வழங்குபவர்களின் பணிபற்றிய எனது சிந்தனைகளை பகிர்வதற்கு வாய்ப்பு கொடுத்த வத்திக்கான் வானொலிக்கும் மற்றும் நேயர்களுக்கும் நன்றி, வணக்கம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்