நேர்காணல் – திருஅவையில் சிறப்பிக்கப்படும் துறவறத்தாருக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் மறைப்பணி வாழ்க்கையானது, திருஅவையின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இந்த சிறப்பானது, துறவற அழைத்தலைப் பெற்றவர்கள் மட்டுமன்றி முழு கிறிஸ்தவ சமூகத்திற்குமானது. கிறிஸ்தவ அழைப்பின் உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்துவதாலும், முழு திருஅவையும் ஒன்றிணைவதற்கு மணமகனாம் இயேசுவுடன் இணைந்து அவரது பணிக்காக செயல்படுவதாலும், திருஅவையின் இதயமாக அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் இருக்கின்றனர். துறவிகள் அழைத்தல் என்னும் கடவுளின் அற்புதமான பரிசிற்காக நன்றி தெரிவிக்கும் இந்த நாளில், கடவுளை மிகவும் உறுதியாக ஆராதித்தல், அழைத்தல் என்னும் உயரிய கொடைக்காக நன்றி தெரிவித்தல் என்பதனை அதிகமதிகமாக வலியுறுத்துகின்றார் புனித இரண்டாம் ஜான் பால். திருத்தந்தை புனித 2ஆம் ஜான் பால் இந்நாளைக் குறித்து எடுத்துரைக்கின்றார். திருஅவையில் அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் துறவறத்தாருக்கான யூபிலியானது சிறப்பிக்கப்பட்டது. எனவே இன்றைய நமது நேர்காணலில் அத்துறவறத்தாருக்கான யூபிலி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க இருப்பவர் அருள்சகோதரி அந்தோணி புஷ்பம். காணிக்கை அன்னை மரியின் பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்தவர். தற்போது அச்சபையில் ரவேல் மறைமாநிலத்தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். சகோதரி அவர்களை துறவறத்தாருக்கான யூபிலி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
அருள்சகோதரி அந்தோணி புஷ்பம்
1. துறவறத்தாருக்கான யூபிலி கொண்டாடப்படக் காரணம் என்ன?
துறவறத்தார் அல்லது துறவற சபைகள், மணமகளாம் திருஅவையின் பல்வேறு அணிகலன்கள் என 2-ஆம் வத்திக்கான் சங்க ஏடுகள் கூறுகின்றன. துறவற அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளும் துறவறத்தார் அனைவரும் திருஅவையின் உறுப்பினர்கள் மற்றும் திருஅவையின் பணிகளை தங்கள் வாழ்வாகக் கொண்டு செய்து வருவதால் துறவறத்தார் யூபிலியை நாம் கொண்டாடுவது சாலச்சிறந்தது. “நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவற வாழ்வின் அடிப்படை அளவுக்கோல்.” இதை எல்லா துறவறத்தாரும் தனது மேல்வரிச் சட்டமாகக் கொண்டிருக்கட்டும் எனவும் வத்திக்கான் சங்க ஏடு து.வா.பு எண் : 2 நமக்கு கூறுகிறது.
துறவறத்தார் என்பதை சாதாரணமாக கூற வேண்டுமெனில் இவ்வுலகை, பொருட்களை, உறவுகளை, கிறிஸ்துவின் அன்புக்காக துறந்தார்கள், அதாவது அவற்றை வேண்டாமென்று விடுத்து, நற்செய்தி மதிப்பீடுகளை பின்பற்றி, அர்ப்பண வாழ்வை மேற்கொள்பவர்கள் துறவிகள். இவர்கள் துறவற சபைகளோடு தங்களையே ஒன்றிணைத்து வாழ்கிறார்கள். கிறிஸ்துவில் மேல் உள்ள பேரன்பால் தாங்களாகவே விரும்பி, நற்செய்தி அறிவுரைகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாடுகள் வழியாக, தங்கள் வாழ்வை கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்றுவதில், அவரது மணமகளாகிய திருஅவையின் திருப்பணிகளுக்கு தங்களயே கையளிக்கின்றனர்.
துறவிகளாக வாழ்ந்த பலர் இன்று புனிதர்களாக உள்ளனர். அப்படி வாழ்ந்தவர்களில் இருவரைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் புனித பிரான்சிஸ் அசிசியார். அவர் எங்கள் சபையின் இரண்டாம் பாதுகாவலர்.
அசிசிநகர் புனித பிரான்சிஸ். 12- ம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று மனிதர். உலகில் உள்ள துறவியரில் மூன்றில், ஒரு பகுதியினர் இவரது ஆன்மிக அடிச்சுவட்டில் நடப்பவர்களாக இருக்கிறார்கள். புனித பிரான்சிஸ் உலகப் போக்கும் வீண் பெருமையும் கொண்டிருந்தார் தனது இளம் வயதில் போர் வீரனாக வேண்டும் என்ற விருப்பத்துடன் தனது நண்பருடன் அப்பூலியா நோக்கிய பயணத்தில் ஒரு இரவுநேர காட்சி வழியாக கடவுள் அவரைச் சந்தித்தார். ஏனென்றால் போர்வீரனாக வேண்டும் என்ற புகழுக்காக ஆவலோடு காத்திருந்த அவரை, புகழின் உச்சத்திற்கு கவர்ந்திழுத்து உயர்த்தினார். இயேசுவின் புதிய போர்வீரனாக, அசிசி நகரில் அவர் தனது செல்வத்தை குப்பையை தூக்கி எறிவதைப் போன்று எரிந்தார். நற்செய்தி படிப்பினைகளை சிறிதளவும் பிசகாமல் பின்பற்ற முடிவு செய்து, அதை முழுமையாக தன் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் கடைபிடித்தார். துறவு என்றால் என்ன என்பதை துல்லியமாக வாழ்ந்து காட்டினார். தன்னை செபவாழ்விலும், நற்செய்தி படிப்பினைகளை பின்பற்றுவதிலும் நிலை நிறுத்தி சிறந்த வாழ்க்கை வாழ்ந்து இயேசுவின் 5 திருக்காயங்களை தன் உடலில் பெற்றார். இவரது வாழ்வமுறையால் பலர் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றனர்.
மறுகிறிஸ்து என்று அழைக்கப்படும் அளவுக்கு துறவியாக வாழ்ந்து, மற்றொரு புனிதரைப் பற்றி கூறவேண்டுமெனில், கர்மேல் சபை துறவியாக வாழ்ந்த ஒரு துறவி, இன்று உலகின் மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலாராக திகழ்கிறார். அவர் பிரான்சிஸ் நாட்டைச் சார்ந்த, குழந்தை இயேசுவின் புனித தெரசாள். இயேசுவின் சிறுமலர் என்னும் பெயரும் இவருக்கு உண்டு. 15 வயதிலேயே தெரசா, இறையழைத்தலுக்குச் செவிமடுத்து, பல்வேறு தடைகளையும் தாண்டி கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்பு நிலை கார்மல் சபை மடம், பிரான்ஸ் நாட்டில், லிசியே நகரில் அமைந்திருந்தது. அங்கு அவர் 9 ஆண்டுகள் தங்கி துறவியாக வாழ்ந்தார். அவர் தன்னுடைய வாழ்வின் இறுதி 18 மாதங்களில் இறைநம்பிக்கையின் இருண்ட கால வேதனையை அனுபவித்தார். தனது 24-ஆம் வயதில் காச நோயால் பீடிக்கப்பட்டு இறைவனடி சேர்ந்தார். இவர் எழுதிய ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன் வரலாற்று நூலை, அவரது இறப்புக்குப்பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனால், அது பலரால் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராக கண்டுணரப்பட்டார். இதற்கு காரணம் அவரது ஆன்மிக வாழ்வின் ஆழம் பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் இதைப்பற்றி கூறும்போது, என் வழி முழுவதும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதும், அவரை அன்பு செய்வதுமே ஆகும் என்கிறார். தனது தாழ்ச்சியிலும், எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார். இந்த சிறு வழியில் தெரசா விண்ணகம் அடைய விரும்பினார். சிறு சிறு காரியங்களில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார். அவரது அன்புக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டார். நான்கு சுவற்றுக்குள், துறவியாக வாழ்ந்த அவரது சிறுவழி அவரை பெரும் புனிதையாக மாற்றியது. இறைவனுக்கு கையளிக்கப்பட்ட கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் நற்செய்தி அறிவுரைகள் மூலம் அல்லது இவற்றிற்கு நிகரான மற்ற புனித ஒப்பந்தங்களின் மூலம் தன்னையே கட்டுப்படுத்தி உன்னத முறையிலே தான் அன்பு கொள்ளும் இறைவனிடம் தன்னையே ழுழுமையாய் அர்ப்பணிக்கிறார். இவ்வாறு அர்ப்பணிப்பதன் வழியாக இறைவனுக்கு பணிபுரியவும், அவரை பெருமைப்படுத்துவும் முடியும். ஆயினும் திருழுழுக்கு அருளின் செழுமை வாய்ந்த பலனைத் தான் அடைய இயலும் பொருட்டு நற்செய்தி அறிவுரைகளைத் திருஅவையில் வெளிப்படையாக ஏற்பதன் மூலம் அன்பின் ஆர்வத்திலிருந்தும் இறைவழிப்பாட்டின் நிறைவிலிருக்கும் தன்னை அகற்றிச் செல்லும் இடையூறுகளிலிருந்தும் தன்னையே விடுவிக்க விரும்புகிறேன். இறைவனுக்கு பணிபுரிய மிக நெருங்கிய வகையில் அர்ப்பணிக்கப் பெறுகிறான். துறவிகள் புனித வாழ்வுக்கு சிறப்பான அழைப்பைப் பெறுகிறார்கள் என்பதை பல்வேறு வகைகளில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
2. துறவறத்தார் இந்த உலகிற்கு அளிக்கும் பங்களிப்பு யாது?
துறவிகளின் பங்களிப்பு இந்த உலகிற்கு அளப்பரியது. இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, அவரது சீடர்கள் தூய ஆவியாரின் வல்லமை பெற்று உலகெங்கும் சென்று இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். அந்த நற்செய்தியை கேட்டு, இயேசுவின் பால் கவர்ந்திழுக்கப்பட்டு, நற்செய்தியின் விழுமியங்களை அப்படியே வாழ வேண்டும் என்று, தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் துறவிகள். இறைவன் மேல் கொண்ட பேரன்பால், தூய ஆவியின் வழிநடத்துதலால், அவர்களைப் போல நாங்களும் வாழ வேண்டும் என்று பலர் முன்வந்து குழுமமாக வாழத் தொடங்கினார்கள். அதையே துறவற குழம வாழ்வு என்கிறோம். ஒரு சிறு மெழுகுதிரியாய் இருந்த வெளிச்சம், இப்போது கலங்கரை தீபமாக பலருக்கு வாழ்வளிக்கிறது.
துறவற சபைகளின் பங்களிப்பைப் பற்றி இரண்டாம் வத்திக்கான சங்க ஏடுகளில், துறவற வாழ்வைப் புதுப்பித்தல் எண்: 7 மிகத் தெளிவாகக் கூறுகிறது. இச்சபைகள் கடவுளுக்கு உயர்மிகு புகழ்ச்சிப்பலியை ஒப்புக்கொடுக்கின்றன. கடவுளின் மக்களைத் தூய்மை நெறியில் வளன்மிகு பலன்களால் மேன்மைப்படுத்துகின்றன; தம் முன்மாதிரியால் அவர்களைத் தூண்டுகின்றன; மறைவான திருத்தூது வளத்தால் அவர்கள் பெருகுமாறு செய்கின்றன. இவ்வண்ணம் திருஅவையின் மாட்சியாகவும், விண்ணகக் கொடைகளை வழங்கும் ஊற்றாகவும் உள்ளன.
கிறிஸ்து தன் மணமகளான திருஅவையோடு பிரிக்க முடியாத முறையில் இணைந்திருக்கிறார். அது போல துறவற சபைகளும் திருஅவையோடும், திருஅவையின் திருத்தூதுப் பணிகளோடும் பிரிக்க முடியாத வகையில் தன்னை அல்லது தங்களை இணைத்திருக்கின்றனர்.
முதலில் மற்ற நம்பிக்கையாளர்களைவிட துறவறத்தாருக்கு செபிக்க அதிகநேரம் கிடைக்கிறது. இளையோருக்காக, இறையழைத்தலுக்காக, நோயில் வாடுவோருக்காக, உலக அமைதிக்காக மற்றும் இறந்தோருக்காக என, பல்வேறு கருத்துக்களுக்காக பரிந்துரை செபம் செய்கின்றனர். மக்களும் இவர்களிடம் செப உதவி கேட்கின்றனர்.
இரண்டாவதாக, திருஅவைச்சட்ட எண்: 778-ன் படி, தங்களது பங்கு ஆலயங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் தங்களிடம் எவ்விதத்திலாவது ஒப்படைக்கப்பட்டுள்ள மற்ற பணிகளிலும், மறைக்கல்வி கற்றுத் தருவதை அக்கறையுடன் செய்து வருகின்றனர்.
அடுத்தபடியாக, திருவழிபாட்டு நிகழ்வுகளில் நம்பிக்கையாளர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க உதவி செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் அருளடையாளங்கள் பெற அவர்களைத் தயாரிக்கின்றனர். மரியாயின் சேனை, இளையோர் இயக்கங்கள், பாடகற்குழு, அன்பியக்கூட்டங்கள் மற்றும் இல்லச்சந்திப்புக்களில் ஈடுபட்டு மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்தும், தங்களது பிரசன்னத்தால் இயேசுவை உலகிற்கு காட்டும் கருவிகளாக திகழ்கிறார்கள்.
மேலும் கல்வி நிறுவனங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், சமூகசேவை மையங்கள் என அனைத்தின் வழியாகவும் எல்லா இன, மத, மொழி பேசுபவர்களுக்கும் நற்செய்தியை நகரங்களில் மட்டுமல்ல பட்டிதொட்டி எல்லாம் அறிவிக்கிறார்கள். குறிப்பாக கைம்பெண்கள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், சிறையில் இருப்போரை சந்திப்பது, அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தருவது, பெற்றோர்கள் இன்றி வாழும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வியை கற்பிப்பதுடன், அவர்களின் வாழ்வை மேம்படுத்துவது என எல்லாத்துறைகளிலும் துறவறத்தாரின் பங்களிப்பு இன்றைய உலகிற்கு தேவையாக உள்ளது.
பெரிய பெரிய அமைப்புக்களால் செய்த முடியாத காரியங்களை துறவிகள் எளிதாக செய்ய முடியும். காரணம் அவர்கள் இயேசுவின் அன்புக்காக அனைத்தையும் செய்கிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் கல்கத்தா நகரில் ஒரு துறவி செய்த செயல், பிற்காலத்தில் இந்த உலகமே அவர்களை வியப்புடன் பார்த்தது. அவர் வேறுயாருமல்ல அன்னை தெரசா என்று அன்புடன் அழைக்கப்பட்ட துறவி, இன்று அவர் ஒரு புனிதை. ஒரு துறவியாக இருந்து அவர்கள் ஆற்றிய சேவை மகத்தானது. அதற்கு காரணம் அநத் துறவி இறைவன் கொண்டிருந்த அன்பு. அவரை நெருங்கிப் பின்பற்றியதால் தான் தொழுநோயாளர்களையும், சாவின் விளிம்பில் உள்ளவர்களையும் தொட்டு, குணப்படுத்தி இயேசுவின் முகத்தை அவர்களுக்கு காட்டியவர்கள். இது போன்று பெரிய அறிமுகமில்லாமல், தாங்கள் வாழ்கின்ற இடங்களில் துறவிகள் சாதாரண வேலைகளை, அன்புடனும், மகிழ்வுடனும், இரக்கத்துடனும் செய்து, புனித வாழ்வு வாழ்கின்றனர். எனவே துறவிகளின் பங்களிப்பு இந்த உலகிற்கு அளப்பரியது.
3. ஒரு துறவியாக இந்த யூபிலி நாளில் மக்களுக்கு நஙீ ;கள் கொடுக்கக் கூடிய செய்தி என்ன?
பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையில் வார்த்தைப்பாடு கொடுத்து, ஒரு துறவியாக கடந்த 39 ஆண்டுகளாக இந்த சபையில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சபையால் வழங்கப்பட்ட அனைத்து பணிகளையும் என்னால் முடிநத் அளவு நிறைவாகவும், மகிழ்வுடனும், செய்து வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் காரணம் நான் நற்கருணையிலிருந்து பெற்ற அருள் தினமும் திவ்ய நற்கருணை முன் முடிந்த அளவு 1 மணிநேரம் செலவிடுவேன். நான் சூரிய ஒளியில் நிற்கும் போது, அதன் கதிர்கள் என்னைத் தாக்குவது போல, நற்கருணை முன் அமர்ந்து செபிக்கும் போது அவரது அருளால் நான் தாக்கப்படுகிறேன் என்பதை அனுபவித்துள்ளேன்.
இன்று பல்வேறு அறிவியல் நுண்தொழில் நுட்பகாலத்தில், திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும் நம் உள்ளங்கையில் உள்ள அலைபேசி செயலிகளில் உள்ளது. திருப்பலி, ஆராதணை, இறைவார்த்தை வாசிப்பு, திருப்பாடல்கள் என அனைத்தும், நாம் இருக்கும் இடத்தில் இன்று கிடைக்கிறது. மருத்தவமனையில் உள்ளவர்கள், முதியோர் காப்பகங்களில் உள்ளவர்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது. இந்த வசதி, மக்களை ஆலயத்தில் வந்து நற்கருணை முன் அமர்ந்து செபிப்பதை சற்று குறைத்து உள்ளது. எனவே ஆலயத்திற்குள் சென்று நற்கருணை முன், அங்கிருக்கும் உயிருள்ள இயேசுவுடன் பேசுவோம். உலக முடிவு வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறிய அவர் நம்மை தனித்து விடுவதில்லை.. நம்முடன் வாழ்ந்து வருகிறார். ஆலயத்தில் நற்கருணை பேழையில் உயிருடன் இருக்கிறார். திருப்பலியில் நற்கருணை வடிவில் அவர் நம்முள் வரும் போது, நமது இரத்தத்தோடு இரண்டாக கலக்கிறார். இத்தகைய வாழும் இயேசுவுடன் உறவை பலப்படுத்துவோம். அவர் நம்முடன் பேசுவதை உற்றுக் கேட்போம்.
தமிழ் கலாச்சாரத்தில் தெய்வீகப் புலவர் எனக்கருதப்படும் திருவள்ளுவர் துறவு பற்றிக் கூறுகையில், குறள்: 350- இல் இவ்வாறு கூறுகிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக, பற்று விடற்கு.
எதிலும், பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
நமக்காக தன்னையே முற்றிலும் தந்த, நற்கருணையில் என்றும் வாழும் இயேசுவிடம் நம்மை கையளிப்போம். நற்கருணை பக்தியை வளர்த்துக் கொள்வோம். நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்