தேடுதல்

அரேபிய அன்னை அரேபிய அன்னை  (Copyright (c) 2018 Ryle Silva/Shutterstock. No use without permission.)

நேர்காணல் – மறைப்பணியாளரான அன்னை மரியா

மரியாவின் ஆன்மிகம் மரியாவின் வாழ்வு நெறி என்பது அவர் காலத்திய மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவையின் வரலாற்றில் பல்வேறு ஆன்மிகங்கள் காணப்படுகின்றன. இந்த ஆன்மிகங்கள் திருஅவையை வளப்படுத்தியுள்ளன. திருஅவையின் வரலாற்றை ஒரு வகையில் பல்வேறு ஆன்மிகங்களின் வரலாறு என்று கூட அழைக்கலாம். காலத்தால் பழமையானதும் பெரும்பான்மையான மக்களைத் தொட்டதும் அன்னை மரியா ஆன்மீகம் ஆகும். மரியா ஆன்மிகத்தை வெகுஜன ஆன்மீகம் என்றும் அழைக்கலாம். மரியா ஆன்மிகம் என்பது மரியாவின் ஆன்மிகம், மக்கள் பின்பற்றும் மரியா ஆன்மிகம் என்ற இருபெரும் கூறுகளைக் கொண்டுள்ளது. மக்கள் பின்பற்றும் மரியா ஆன்மிகத்திற்கு மரியா கொண்டிருந்த ஆன்மிகமே அடிப்படை. அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் இருக்கும் நாம் அன்னை மரியின் ஆன்மிகம் பற்றியக் கருத்துக்களைப் பற்றி இன்றைய நமது நேர்காணலில் சிந்திக்க இருக்கின்றோம். முறையான முறையில் வாழ்பவர்களின் வாழ்க்கைக்கே வாழ்க்கை நெறி என்ற பெயர் தரப்படுகின்றது. மரியாவின் ஆன்மிகம் மரியாவின் வாழ்வு நெறி என்பது அவர் காலத்திய மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.  நற்செய்தி அறிவிக்கும் சீடத்துவ அழைப்பை ஏற்று சீமூவொரு இறைவனின் சீடத்துவப் பணியில் தன்னை இணைத்து மறைப்பணியாளராக சிறந்து விளங்கியவர் அன்னை மரியா. எனவே இத்தகைய சிறப்புமிக்க மறைப்பணியாளரான அன்னை மரியாவின் ஆன்மிகம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை ஜூடு ததேயுஸ் அகஸ்டின்

புனித பிரான்சிஸ் டி சேல்ஸின் மறைப்பணியாளர்கள் சபை ஷாம்பிய மறைமாநிலத்தைச் சார்ந்தவர். ஜூடு ததேயுஸ் அகஸ்டீன் சுல்தான்பேட்டைச் சார்ந்தவர். கோவாவில் உள்ள குருத்துவ இல்லத்தில் பயின்று, நாக்பூரில் தத்துவயியலும் புனேயில் இறையியலையும் பயின்றவர். 2005 ஆம் ஆண்டு குருத்துவ அருள்பொழிவு பெற்ற இவர், ஷாம்பியாவில் மறைப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை மறைப்பணியாளரான தூய அன்னை மரியா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்பணி. ஜூடு ததேயுஸ் அகஸ்டீன்

அருள்பணி. ஜூடு ததேயுஸ் அகஸ்டீன்

இறைவனின் அன்பை கொண்டாடுவது தான் அன்னை மரியாவின் ஆன்மீகம். இயேசுவை தன்னுடைய உதிரத்தில் கருத்தாகிய அதே நேரத்தில் இதயத்திலும் உருத்தாங்கினார். ஆம்; இறை உருவை இதயத்தில் தாங்க, தூய ஆவியானவர் நிழலிட்டு உதவினார். இறைமகன் இயேசுவைக் கருத்தங்குதல் என்பது  மூவொரு இறைவனின் அன்பினை கொண்டாடுவதாகவே அன்னையின் வாழ்வில் வெளிப்பட்டது எனலாம்.

அப்பா தந்தையாகிய கடவுளின் அன்பே திருஅவையின் வாழ்வாக இருக்கிறது. அப்பா தந்தையின் வார்த்தையாகிய இறைவன் இயேசு, திரு அவையின் திரு உடலாக இருக்கிறார். அப்பா தந்தையின் ஆவியாகிய இறைவன் தூய ஆவியார், திருஅவைக்கு உரு கொடுக்கிறார். திருப்பயணியாக விளங்கும் திரு அவைக்கு உரு கொடுக்கும் தூய ஆவியார், தொடர்ந்து செயலாற்றி, திருஅவை நிறைவு பெறுவதற்கு வழிவகை செய்கிறார்.

தூய ஆவியாரின் பத்தினியாகவும் இறை தந்தையின் மகளாகவும் விளங்கும் அன்னை மரியா, திருஅவையை உருவாக்கிடும் உன்னதப் பணியை செய்கிறார்.  மங்கள வார்த்தை சொல்லும்  நிகழ்விலேயே அன்னை மரியாவுக்கு கொடுக்கப்பட்ட இறைஅழைப்பு இது. மேலும், கல்வாரியில் சிலுவையின் அடியில் நின்றபோது, அன்னைக்கான அவ்வழைப்பானது இயேசுவால் மறுவரையறை செய்யப்பட்டது.  அன்னை பெற்றுக் கொண்ட அந்த நற்செய்தி அறிவிக்கும் சீடத்துவ அழைப்பினையே நம் கண் முன் கொண்டு வர விளைகின்றேன். மூவொரு இறைவனின் நற்செய்தி அறிவிக்கும் சீடராகவே அன்னை மரியா திகழ்கிறார். இதனை மறைதூதுப் பணியாளர் அல்லது மறைபரப்பாளர் என்றும் சொல்லலாம்.

புனித ஜான் யூட்ஸ் ' போற்றத்தக்க இதயம்' தனது என்ற புத்தகத்தில் (Admirable Heart), மரியவின் இருதயத்தை, கடவுள் மோசேயிடம் பேசிய பழைய ஏற்பாட்டின் எரிகின்ற முட்புதரோடு ஒப்பிடுகிறார்.  முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தாலும் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.  அதேபோல், கடவுளின் அன்பின் நெருப்பு அன்னை மரியாவின் இதயத்தில் எரிந்தாலும்  அதை எரித்து அழிக்கவில்லை. இதைத் தான் நாம் மரியாவின் மாசற்ற இதயத்தில் காண்கிறோம்.  அன்னை மரியாவின் இதயத்தில் எரியும் நெருப்பு அன்பின் நெருப்பு.  தனது இதயத்தில் எரியும் அன்பின் அனலை அன்னை மரியா கொண்டாடுகிறார்; இந்த அணையாத நெருப்பு தான் அன்னை மரியாவின் நற்செய்தி அறிவிக்கும் சீடத்துவ அழைப்பின் அடி நாதம் எனலாம். அதுவே உந்துதல்; அதுவே மையம்.

ஒவ்வொரு நற்செய்தி அறிவிக்கும் சீடரின் பணியும் மூவொரு இறைவனின்  அன்பைக் கொண்டாடக் கற்றுக்கொடுப்பதாகும். ஒவ்வொரு நற்செய்தி அறிவிக்கும் சீடரின் அழைப்பும் இந்த அன்பை வாழ்வது, கொண்டாடுவது, கற்பிப்பது மற்றும் வெளிப்படுத்துவது ஆகும். நாம் அவ்வாறு செய்யும்போது,  மறு உரு கொணர்ந்திடும் மாற்றம் நிகழ்கிறது. இதன் மூலம், திருஅவையைக் கட்டியெழுப்பி உரு கொடுக்கும் தூய ஆவியாரின் உன்னத பணி நிறைவு எய்துகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறு உரு தரித்தல் நம் வாழ்வில் அவசியமானது.

இறைவன் தனது இரக்கத்தால் ஒவ்வொருவருக்கும் தனது வாழ்நாளில் இந்த மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒவ்வொரு 50 வருடங்களுக்கும் கொண்டாடப்படும் யூபிலி ஆண்டு இந்த மாற்றத்தின் கொண்டாட்டமாகும். நிலம் அதன்  உரிமையாளர்களிடம் கொடுக்கப்படுவதும், கடன்கள் ரத்து செய்யப்படுவதும் ஒரு மாற்றம் எய்துகின்ற ஆன்மாவின் அறிகுறிகளாகும். இவை இறைவனின் ஆவியில் இருப்பவருக்கு நிகழும் மாற்றத்தின் பலன்கள்.

பழைய ஏற்பாட்டில் உள்ள யூபிலிக்கு ஏற்ப, திருஅவையும் ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி, யூபிலியைக் கொண்டாட அழைப்பு விடுக்கிறது. மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்கிடும் திருஅவையின் ஒரு வழிமுறையே இது ஆகும். யூபிலி என்று அழைக்கப்படும் போது, மாற்றத்திற்கான அழைப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு கடவுள் அருளையும் ஆசீரையும் வழங்குகிறார்.  மாற்றம் பெறுவோம்; நற்செய்தி அறிவிக்கும் சீடர்களாக மாறி மாற்றத்தை விதைப்போம்; அருளும் ஆசீரும் என்றும் நம்மோடு!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 அக்டோபர் 2025, 10:57