தேடுதல்

அரசர் சாலமோன் அரசர் சாலமோன்  

தடம் தந்த தகைமை – ஆண்டவருக்குப் பலி செலுத்திய அரசர் சாலமோன்

சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை. இத்திருவிழாவை சாலமோன் ஏழுநாள் தொடர்ந்து கொண்டாடினார்;

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரசரும் மக்கள் யாவரும் ஆண்டவர் திருமுன் பலி செலுத்தினர். அரசர் சாலமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டார்;  இவ்வாறு, அரசரும் மக்கள் அனைவரும் கடவுளின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர். குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, “ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது” என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர் அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்; எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார்.

ஏனெனில், சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை. இத்திருவிழாவை சாலமோன் ஏழுநாள் தொடர்ந்து கொண்டாடினார்; அவருடன், ஆமாத்து எல்லை முதல் எகிப்து நதிவரை வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். பலிபீட அர்ப்பணத்தையும், திருவிழாவையும் ஏழு நாள்கள் அவர்கள் கொண்டாடி, எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடத்தினர். பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்; ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர். இவ்வாறு, சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தார். ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் அவர் செய்ய விரும்பிய அனைத்தையும் வெற்றியுடன் முடித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 அக்டோபர் 2025, 18:43