தேடுதல்

யூதர்களை அழிக்க நிக்கானோர் திட்டம் யூதர்களை அழிக்க நிக்கானோர் திட்டம் 

தடம் தந்த தகைமை : யூதர்களை அழிக்க நிக்கானோர் திட்டம்!

‘ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்’ என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல், அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

யூதா சிறிது சிறிதாக முன்னேறி வருவதையும் மேன்மேலும் வெற்றிகள் பெற்றுவருவதையும் கண்ட பிலிப்பு, அரசின் நலன்களைக் காக்க உதவிக்கு வருமாறு கூலேசீரியா, பெனிசியா நாடுகளின் ஆளுநரான தாலமிக்கு மடல் எழுதினார். உடனடியாகப் பத்ரோக்குலின் மகனும் மன்னனின் முக்கிய நண்பர்களுள் ஒருவனுமான நிக்கானோரைத் தாலமி தேர்ந்தெடுத்து, யூத இனம் முழுவதையும் அடியோடு அழிப்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருபதாயிரத்திற்குக் குறையாத வீரர்களுக்குத் தலைவனாக அவனை அனுப்பி வைத்தான்; படைத்தலைவனும் போர்த் தொழிலில் மிகுந்த பட்டறிவும் கொண்டவனுமான கோர்கியாவையும் அவனுடன் சேர்த்து அனுப்பினான்.  பிடிபடும் யூதர்களை அடிமைகளாக விற்பதால் கிடைக்கும் தொகையைக் கொண்டு, உரோமையர்களுக்கு மன்னன் திறையாகச் செலுத்தவேண்டிய எண்பது டன் வெள்ளியைக் கொடுக்க நிக்கானோர் திட்டமிட்டான். எல்லாம் வல்லவரின் தண்டனைத் தீர்ப்பு தன்மேல் வரப்போகிறது என்பதை எதிர்பாராத நிக்கானோர், நாற்பதுகிலோவெள்ளிக்கு அடிமைகளைக் கொடுப்பதாக உறுதியளித்து, யூத அடிமைகளை வாங்க வருமாறு கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லியனுப்பினான்.

நிக்கானோரின் படையெடுப்பை அறிந்த யூதா அவனது படையின் வருகைபற்றித் தம்மோடு இருந்தவர்களிடம் கூறினார். கோழைகளும் கடவுளின் நீதியில் நம்பிக்கையற்றவர்களும் அவரைவிட்டு ஓடினார்கள்; மற்றவர்கள் தங்களிடம் எஞ்சியிருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றார்கள்; போரிடுமுன்பே தங்களை விற்றுவிட்ட கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களை விடுவிக்குமாறு ஆண்டவரை வேண்டினார்கள். தங்கள்பொருட்டு ஆண்டவர் இவ்வேண்டுதலை நிறைவேற்றாவிடினும், அவர் தங்கள் மூதாதையரோடு செய்திருந்த உடன்படிக்கைகளின் பொருட்டாவது, அவர்கள் தாங்கியிருந்த தூய்மையும் மாட்சியும் மிக்க பெயரின் பொருட்டாவது நிறைவேற்றும்படி மன்றாடினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 நவம்பர் 2025, 13:07