தேடுதல்

இறைத்தந்தை இறைத்தந்தை  

தடம் தந்த தகைமை : வீர மகனைத் தேற்றிய வீரத்தாய்!

“நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்”

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்காலத்தில் தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, “உன் முதாதையரின் பழக்கவழக்கங்களை நீ கைவிட்டுவிட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறுகொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு உனக்கு உயர் பதவி வழங்குவேன்” என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான். அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து, அந்த இளைஞர் தம்மையே காத்துக்கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார்.

ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், “மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்துவந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2025, 15:46