தேடுதல்

இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள்   (ANSA)

இந்தியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் சட்டப் போராட்டங்கள்!

மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தவும், அனைத்துக் குடிமக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்களின் மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், மதச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் கருதப்படும் மாநில சட்டங்களை சட்டப்பூர்வமாக சந்தித்து வருவதாக பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இராஜஸ்தானில் 2025-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம், வற்புறுத்தல், மோசடி அல்லது தூண்டுதல் மூலம் மதமாற்றம் செய்வதை குற்றமாக்குகிறது என்றும், இந்நிலையில் இது மிகவும் தெளிவற்றது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று கத்தோலிக்கர்கள் வாதிட்டு வருகின்றனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம். 

மகாராஷ்டிராவில், கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து, அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் போதிலும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள மதச் சுதந்திர மசோதா சிறுபான்மை சமூகங்களை குறிவைக்கக்கூடும் எனக் கத்தோலிக்கர்கள் அச்சம்கொள்கின்றனர் என்று அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் மதச் சுதந்திரத்திற்கு உறுதியளிக்கிறது என்றும், மதமாற்றத் தடைச் சட்டங்கள் வரலாற்று ரீதியாக தொண்டு மற்றும் கல்விப் பணிகளை சீர்குலைக்கவும், மதங்களுக்கு இடையேயான பதட்டங்களைத் தூண்டவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் வழக்கறிஞர்களும் கத்தோலிக்கர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சூழலில் மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தவும், அனைத்து குடிமக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் கிறிஸ்தவர்கள் இந்த மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 நவம்பர் 2025, 12:10