தேடுதல்

வாழ்விக்கும் கடவுள் வாழ்விக்கும் கடவுள்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 33-6- தனக்கஞ்சுவோரை வாழ்விக்கும் கட

நம்மை நாளும் கண்ணோக்கி, நம் உயிரைச் சாவினின்று காத்து, உடனிருந்து நம்மை வாழவைக்கும் என்றுமுள்ள கடவுளுக்கு அஞ்சி வாழ்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘படைபலமின்றி இறைபலத்தால் வெல்வோம்! என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 16, 17 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 18, 19 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத நமது சிந்தனைகளைத் தொடர்வோம். இப்போது, இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார் (வசனம் 18,19).

அரசர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவர் நற்குணங்கள் பல கொண்டவராக இருந்தபோதிலும் அவ்வரசருக்குக் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தது. ஒருநாள் அரசர் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றார். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டார். ஒருவர் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டார். இன்னொருவர் அரசரின்  பெயரைச் சொல்லி பிச்சை கேட்டார். இதனைக் கண்ட அரசர் தனது காவலர்களிடம், அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டார். உடனே, அவர்கள் மன்னரின் அவைக்கு அழைத்து வரப்பட்டார்கள். மன்னர் அவர்களிடம், “நீங்கள் இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசராகிய என் பெயரைச் சொல்லியும் பிச்சைக்  கேட்டீர்கள். அதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார் அப்போது, கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரர், "அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவர் கடவுள் மட்டும்தான். அவரின் அருளால் மட்டுமே ஒரு மனிதர் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்லமுடியும். அதுமட்டுமன்றி,  நாம் தெய்வ பயத்துடன் வாழும்போதும், அவர்மீது நம்பிக்கைகொண்டு அவரது அன்பிற்காக காத்திருக்கும்போதும், அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. அதனால்தான் நான் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்” என்றார்.

அதற்கு மற்றொரு பிச்சைக்காரர், "அரசே! கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர். அதனால் எனக்குப் பயன் ஒன்றும் இல்லை. ஆனால், கண்ணுக்குத் தெரிந்த மனிதர் அரசர் மட்டுமே. அவரால் மட்டுமே ஒருவர் செல்வந்தனாக மாறமுடியும். அதனால்தான் மன்னராகிய உங்கள் பெயரைச் சொல்லி நான் பிச்சைக் கேட்கிறேன்” என்றார். அரசர் அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தார். அப்போது அமைச்சர் அரசரிடம், "முதல் பிச்சைக்காரர் சொன்னது தான் சரி அரசே. இறைவன் அருள் இருந்தால்தான் நாம் எந்தவொரு உதவியையும் பெற முடியும்" என்றார். அப்போது, "இறைவனின் அருளா? அல்லது அரசரின் அருளா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினார் அரசர். சில நாள்களில் அந்நாட்டிலுள்ள கோயில் ஒன்றில் திருவிழா நடைபெற்றது. அன்று அரசர் குடிமக்களுக்குச் சில பரிசுகள் அளிக்கப் போவதாக அறிவித்தார். ஆகவே. பரிசுப் பொருள்களைப் பெறுவதற்குக் குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர். அவர்கள்  ஒவ்வொருவருக்கும் அரசர், புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தார். அரசரின் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவருக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தார் மன்னர். கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவருக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தார்.  

சில மாதங்கள் கழிந்தன. அரசர் ஒரு நாள் நகர்வலம் சென்றார். அப்போது அரசரின் பெயரைச்சொல்லி பிச்சை எடுப்பவர் சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை கேட்பதைக் கண்ட மன்னர் வியப்படைந்தார். தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க, வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவர் மீண்டும் பிச்சை எடுக்க வேண்டிய காரணம் என்ன? என்று மன்னருக்குத் தோன்றியது. உடனே அரசர் அந்தப் பிச்சைக்காரரிடம், "நான் அன்று உனக்குப் பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "அரசே! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காயைப் பரிசளித்தீர்கள். அதை நான் ஐந்து வெள்ளிக் காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்து எத்தனை நாள்கள் நான் உண்ண முடியும்? அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்து விட்டேன்" என்றார். அதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, "அடேய் மூடனே! நான் உனக்குப் பரிசளித்த பரங்கிக்காயினுள், தங்க, வைர நகைகள் வைத்திருந்தேனே. நீ அதனை வெட்டி பார்த்திருந்தால் உண்மை தெரிந்திருக்குமே!" என்று கூறி அவனைத் திட்டிவிட்டு நகர்ந்தார்.

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தரைக் கண்டார். அவர் இறைவன் பெயரைச்சொல்லி பிச்சை எடுத்தவர் என்பதை அப்போது அரசர் அறிந்து கொண்டார். அவரிடம் சென்ற அரசர், "ஐயா! நீங்கள் முன்பு இறைவன் பெயரைச் சொல்லிப் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? இப்போது எப்படி செல்வந்தனாகி விட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், "அரசே! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவரிடம் ஐந்து வெள்ளிக் காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது. அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன். இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்” என்று கூறினார். மேலும், “கடவுள்மீது அன்பும், அச்சமும், பற்றுறுதியும் கொண்டிருந்த எனக்கு அவர் வழங்கிய மாபெரும் கொடை இது!” என்று நிறைந்த மகிழ்வுடன் கூறினார். இறைவன் அருள் இல்லையென்றால் நமது வாழ்வில் எவ்வித நலமும் வளமும் பெற முடியாது என்பதை அரசர் அப்போதுதான் புரிந்து கொண்டார். நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே காரணம் என்பதை அறிந்துகொண்ட அரசர், அன்றுமுதல் தெய்வ பயமும் கடவுள்மீது பற்றுறுதியும் கொண்டு வாழத் தொடங்கினார். 

நாம் தியானிக்கும் மேற்கண்ட இரண்டு இறைவசனங்களில், தன்னிடம் அன்பும், நம்பிக்கையும், பக்தியும் கொண்டு வாழும் தனது அடியவர்களை கடவுள் என்றுமே கைவிடுவதில்லை என்றும், அவர்களைக் கொடிய பஞ்சத்தினின்றும், சாவினின்றும் விடுவிக்கின்றார் என்பதையும் தாவீது அரசர் எடுத்துக்காட்டுகின்றார். சவுல் மன்னரால் தனக்கு ஏற்பட்ட இடையூறுகள், நெருக்கடிகள், உயிர்பறிப்புச் சம்பவங்கள் ஆகிவற்றைச் சந்தித்த தாவீது, அத்தகைய நிலைகளில் எப்படியெல்லாம் கடவுள் தன்னைக் காப்பாற்றினார் என்பதை எடுத்துக் கூறும் அவரது மனநிலையை இவ்விடத்தில் மீண்டும் நம்மால் உணர முடிகிறது. ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! (திபா 56:13) என்றும், என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார் (திபா 116:8) என்றும், ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! (திபா 86:13) என்று வேறு சில திருப்பாடல்களிலும் தாவீது குறிப்பிடுகின்றார்.

பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார். நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்; நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர். அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்; மண்ணக விலங்குகளுக்கு மருளீர் (யோபு 5:20-22) என்று கடவுள்மீது நாம் நம்பிக்கை கொள்ளும்போது, கடவுள் நமக்குத் தரும் பாதுகாப்புப் பற்றி யோபுவும் எடுத்துக்காட்டுகின்றார். அன்னை மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, ஆண்டவருக்கு ஒரு புகழ்ப் பாடல் இசைக்கின்றார். அப்பாடலில், இறைவனின் பண்புநலன்கள் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார் (லூக் 1:50-53).

அண்மையில் வாட்சப்பில் ஒரு  சிறிய காணொளிக் காட்சி ஒன்றைப் பார்த்தேன். அது என் மனதை மிகவும் கவர்ந்தது. தமிழகத்தில் இது எங்கு நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் சந்தையில் உடைந்த கூடை ஒன்றில் வாழைப் பழமும், புளிச்சக்கீரையும் விற்றுக்கொண்டிருக்கிறார். அங்கே கீரை வாங்குவதற்குத் தன் மனைவியுடன் வரும் ஒரு நபர், அப்பாட்டியைப் பார்த்து, “ஒரு பாட்டுப் பாடேன்” என்று கேட்கிறார். “நீ வாங்கப்போற புளிச்சக்கீரைக்குப் பாட்டா” என்று அந்தப்பாட்டி சிரித்துக்கொண்டே கேட்க, “ஆமாமா... ஒரு பாட்டுப் பாடு” என்று வந்தவர் கூற, அந்தப் பாட்டி பாடத் தொடங்குகிறார். "என்ன பாவம் செய்தேன்னு தெரியலையே... என்மேல இவ்வளவு அன்பு வச்சவரே. தாயின் கர்ப்பத்திலே என்னைத் தூக்கி வளர்த்தவரே... இயேசப்பா என்ன பாவம் செய்தேன்னு தெரியலையே... என்மேல இவ்வளவு அன்பு வச்சவரே” என்று பாடிவிட்டு “இது போதுங்கய்யா” என்கிறார் பாட்டி. வந்த நபரோ, “சரி... சரி... இன்னொரு பாட்டுப் பாடு ஆயா. ரொம்ப நல்லாயிருக்கு” என்று வற்புறுத்தவே, வானத்தைப் பார்த்தவாறு, தனது இரு கரங்களையும் விரித்து உணர்வுப்பூர்வமாகப் பாடுகிறார் அந்தப் பாட்டி. "தாய் மறந்தாலும் என்னை மறப்பதில்லையே! தந்தை வெறுத்தாலும் என்னை வெறுப்பதில்லையே! தாயோட மேலானவர்  இயேசப்பா... தந்தைசொல் மாறாதவர்” என்று பாடுகிறார். அவர் இரண்டாம் முறை அதனைப் பாடி முடிக்கும்போது, அவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடுகிறது. அவருடைய கண்களில் மட்டுமல்ல, அதனைக் கேட்டுக்கொண்டிருந்த நம் அனைவரின் கண்களிலும்தான்.

ஆம், நம் கடவுள் வாழ்வோரின் கடவுள். அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரது என்றுமுள்ள பேரன்பிற்காகக் காத்திருப்போரையும், திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று அவரிடம் தஞ்சம் புகுவோரையும் அவர் தேற்றி ஆறுதல் அளிக்கின்றார். இந்த உலகத்தால் நாம் ஒதுக்கப்பட்டாலும் அவரது இரக்கம்நிறை அன்பிலிருந்து நாம் ஒருபோதும் ஒதுக்கப்படுவதில்லை. ஆகவே, நம்மை ஒவ்வொரு நொடிப்பொழுதும் கண்ணோக்கி, நம் உயிரைச் சாவினின்று காத்து, உடனிருந்து நம்மை வாழவைக்கும் என்றுமுள்ள கடவுளுக்கு அஞ்சி வாழ்வோம். அதற்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 நவம்பர் 2025, 14:23