தேடுதல்

கிறிஸ்து அரசர் கிறிஸ்து அரசர்  

கிறிஸ்து அரசர் பெருவிழா : ‘கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!’

ஒரு உண்மையான அரசருக்குரிய பண்புகளைக் கொண்டு முன்மாதிரியான அரசராக என்றென்றும் வாழும் நமது கிறிஸ்து அரசரின் வழியில் ஒன்றிணைந்து பயணிப்போம்.
கிறிஸ்து அரசர் பெருவிழா : ‘கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!’

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்       I.  2 சாமு  5: 1-3     II.   கொலோ 1: 12-20        III. லூக் 23: 35-43)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சிக்கோ நாட்டில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. அப்போது, 'கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க' என்ற முழக்கத்துடன் 'கிறிஸ்டோரஸ்' என்ற குழுவினர் அரசுக்கு எதிராகப் போராடி வந்தனர். இக்குழுவின் ஒரு முக்கிய வழிகாட்டியாகச் செயல்பட்டவர் மிகுவேல் ப்ரோ என்ற இயேசு சபை அருள்பணியாளர். இதற்காக இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்ல அரசு ஆணை பிறப்பித்தது. மரண பயத்தால் அருள்பணியாளர் மிகுவேல் ப்ரோ அவர்கள், கிறிஸ்துவின்மீது தான் கொண்டிருக்கும் நம்பிக்கையை கைவிட்டு, அவரது செயல்களுக்காக எப்படியும் அரசிடம் மன்னிப்புக் கேட்பார் என்று அரசு எதிர்பார்த்தது. அதனால், இக்காட்சியை எல்லோருக்கும் காண்பிக்கும் பொருட்டு மெக்சிகோ அரசு அந்நாட்டுப் பத்திரிகையாளர்களை எல்லாம் அழைத்திருந்தது. ஆனால், அருள்பணியாளர் மிகுவேல் ப்ரோ அவர்கள் எவ்வித் மரண பயமுமின்றி ஒரு கையில் சிலுவையையும், மறுகையில் செபமாலையையும் ஏந்திக்கொண்டு முழந்தாளிட்டு தனது இரண்டு கரங்களையும் விரித்தவாறு, ‘கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!’ என்று துணிவுடன் கூறினார். அப்போது அவரது உடலை குண்டுகள் துளைக்க அப்படியே மண்ணின் மடியில் விழுந்து கிறிஸ்து அரசருக்காக உயிர் துறந்தார்.

பொதுக்காலத்தை நிறைவு செய்துவிட்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இப்போது உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும் பயங்கரவாதமும், போர்களும், பிரிவினைகளும், பிளவுகளும், பிரச்சனைகளும் அமைதியோடு வாழ விரும்பும் ஆயிரமாயிரம் மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கி வருகின்றன, பதவிக்காகவும், பணத்திற்காகவும், ஆடம்பரமான வாழ்வை ஆக்கிரமித்துக் கொள்வதற்காகவும் இங்கே தினம் தினம் போட்டியும், பொறாமையும், பகையுணர்வும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. எப்படிப் பதவிக்கு வரலாம், யாரை ஏமாற்றி பதவிக்கு வரலாம், யாரைக்கொன்று பதவிக்கு வரலாம், SIR வழியாக ஓட்டுகளைத் திருடி மக்களாட்சியைக் கொன்று புதைத்துவிட்டு எப்படி ஆட்சி அரியணையைத்  தக்கவைத்துக்கொள்ளலாம் என்று மனிதர் போடும் தவறான கணக்குகளால் அன்பும், அமைதியும், உண்மையும், நேர்மையும் உலகில் காணாமல் போயுள்ளன. இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.  

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பல சாம்ராஜ்யங்கள் சரிந்துபோனதற்கு மண்ணாசையும், பொன்னாசையும், பெண்ணாசையுமே அடைப்படை காரணங்கள் என்பது நமக்குப் புரியும். நான் எனது மக்களின் நலன்களுக்காகத்தான் இப்பதவியில் அமர்ந்திருக்கின்றேன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, தனது பெயருக்காகவும் புகழுக்காகவும் பகையை வளர்த்து, போரை உண்டாக்கி இலட்சக்கணக்கான மக்களை உள்நாட்டிற்குள்ளும் பல்வேறு அந்நிய நாடுகளுக்கும் இடப்பெயரச்செய்து அவர்களை புலம்பெயர்ந்தோராகி வருகின்றனர் பலர். இதற்கு இரஷ்யா, இஸ்ரேல், மியான்மார் போன்ற நாடுகள் மிகப்பெரும் எடுத்துக்காட்டுக்களாகத் திகழ்கின்றன. தேர்தல்நேர பரப்புரைகளின்போது வாய்கூசாமல் வெற்று வாக்குறுதிகளை வீசி எறிந்து, பணத்தைக் காட்டி மக்களை விலைபேசி, ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் அம்மக்களுக்கு எதிராக அநியாயச் செயல்களை அரங்கேற்றும் அவலத்தை நம் நாட்டில் கண்கூடாகக் காண்கின்றோம். தனது நாட்டு மக்களையே போர்க்கேடயமாக்கி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சுயநலம் கொண்டோர்தான் இன்றைய நமது ஆட்சியாளர்கள்.

ஆனால், நாம் பெருவிழாக் கொண்டாடும் நமது கிறிஸ்து அரசர் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர் என்பதை அவரது வாழ்வியல் நெறிமுறைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இன்றைய நாளில் நம் கிறிஸ்து அரசரிடம் விளங்கிய மூன்று முக்கியமான பண்புகளை நமது சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். முதலாவதாக, நமது கிறிஸ்து அரசர் தலைசிறந்த தலைவர். ஓர் அரசர் அல்லது தலைவர் என்பவர் தனது உயிரை ஈந்தாவது அல்லது பணையம் வைத்தாவது தனது தொண்டர்களையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். நெருக்கடியான வேளையில் அவர்களை கைவிட்டு விட்டு ஓடிவிடக்கூடாது. நமது கிறிஸ்து அரசர், எல்லாவகையான துன்ப துயரங்களையும் சவால்களையும் ஏற்றுக்கொள்வதில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். கெத்செமணி தோட்டத்தில் இயேசுவை கைது செய்ய வந்தபோது, நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” (யோவா 18:8) என்கின்றார். மேலும் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோவா 10:10-11) என்று கூறி தலைமைப் பணியாளர்களுக்கு இருக்கவேண்டிய தலையாயப் பண்பை எடுத்துக் காட்டுகின்றார்.

இரண்டாவதாக, நமது கிறிஸ்து அரசர் மக்களின் துயரங்களைச் சுமப்பவர். இதைத்தான் எசாயா புத்தகத்தில் ‘துன்புறும் மெசியா’ பகுதியில் காண்கின்றோம். மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் (எசா 53:4-5) என நாம் வாசிக்கின்றோம். ஏழைகளையும், வறியோரையும், வாழ்விழந்தோரையும், புலம்பெயர்ந்தோரையும் புறம்தள்ளி அவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கி வரும் இவ்வுலகத் தலைவர்கள் மத்தியில், நமது அரசர் இயேசு, விளிம்புநிலைக்கு விரட்டியடிக்கப்பட்ட இத்தகைய மக்களைத் தேடிச்சென்று அவர்களை அன்பொழுக அரவணைத்துக்கொள்வதைப் பார்க்கின்றோம். ‘இவர்களுக்காகத்தான் நான்’, ‘இவர்களுக்கானதுதான் என் அரசு’ என்று துணிவுடன் எடுத்துரைத்து, இவர்களின் துன்ப துயரங்களைச் சுமந்துகொள்ள முன்வருகிறார். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத் 11:28) என்ற நமது கிறிஸ்து அரசரின் வார்த்தைகள் அதற்குச் சான்றாக அமைகின்றன.

இப்படிப்பட்ட வறியோரும், ஒடுக்கப்பட்டோரும், நோயாளர்களும், பாவிகளும்தான் இயேசுவின் அரசத்தன்மையை அலங்கரிக்கின்றனர். உள்ளத்தளவில் அவரை உண்மையான அரசராக ஏற்றுப்போற்றுகின்றனர். இன்றைய நற்செய்தியில் அதைத்தான் காண்கின்றோம். இயேசுவின் உண்மையான அரசத்தன்மையை ஏற்காது, தனது குற்றத்தை மறைத்து அவரைப் பழித்துரைக்கும் முதல் குற்றவாளியின் ஈனச் செயல் ஒருபுறம். ஆனால் அதேவேளையில், தன் குற்றத்தையும் பாவத்தையும், பலவீனத்தையும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அவரை உண்மை அரசராக அங்கீகரிக்கும் இன்னொரு குற்றவாளியின் உயர்ந்த செயல் மறுபுறம். அதனால்தான் “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று  அவரை அரசராக அங்கீகரித்து விண்ணப்பம் செய்த நல்ல கள்வருக்கு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்ற வார்த்தைகள் வழியாகத் தனது அரச அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்.

மூன்றாவதாக, நமது கிறிஸ்து அரசர் வேறுபாடுகள் களைந்து எல்லோரையும் ஒன்றிணைப்பவர். உயர்மட்டத்தில் இருக்கும் வல்லாதிக்க நாடுகளின் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், பெரும்பண முதலாளிகளுக்கும், ஆதிக்க வர்க்கத்தினருக்கும் முன்னுரிமைக் கொடுத்து அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து பெரும் மரியாதைத் தரும் நம் உலகத் தலைவர்கள் மத்தியில் கிறிஸ்து அரசர் வித்தியாசமாகச் செயல்படுகிறார். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:29) என்கிறார். அதாவது, இயேசுவின் இறையாட்சியில் ஏழை-பணக்காரர், இருப்பவர்-இல்லாதவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், கறுப்பு-சிவப்பு, தூய்மை-தீட்டு, இந்நாடு-அந்நாடு என எந்த வேறுபாடுகளையும் காண முடியாது, தங்களின் பாவ நிலையைக் களைந்து, கிறிஸ்து அரசர்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் அவரது இறையாட்சியில் இடம் உண்டு. இதனைத்தான் புனித பவுலடியாரும், "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (கலா 3:27-28) என்று கூறுகின்றார்.

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு” (குறள்.384). என்ற குறளில் தனது நிழலில் வாழும் தனது குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சி புரிதல் ஒரு மன்னரின் கடமை என்றும், மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி மன்னர் சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். இத்திருக்குறள். இன்றைய முதல் வாசகத்தில் சவுலின் பொறுப்பற்ற ஆட்சி முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அனைவரும், இறையச்சமும், நிறைபக்தியும் கொண்ட ஓர் இளைஞனாகக் கோலியாத்தைக் கொன்று அவர்களைக் காப்பாற்றி ஓர் அரசருக்குரிய விழுமியங்களோடு விளங்கிய தாவீதை தங்கள் அரசராக ஏற்றுக்கொள்ள முன்வருகின்றனர் என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. இப்போது அப்பகுதியை வாசிப்போம். இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்”. இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர் (2 சாமு 5:1-3). முப்பது வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தாவீது அரசர், நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை ஒருகுறையுமின்றி வழிநடத்தினார். எனவே, தாவீதின் வழித்தோன்றலிலே வந்துதித்த நமது கிறிஸ்து அரசர், நம்மை எக்காலத்திற்கும் அன்பும் அமைதியும் நீதியும் நேர்மையும் கொண்ட ஒளிநிறைந்த அவரது இறையாட்சியில் என்றென்றைக்கும் நம்மை வழிநடத்துவார் என்று உறுதியான நம்பிக்கை கொள்வோம். இதனைத்தான், "அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்" (கொலோ 1:13) என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார்.

'அரசர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே' என்ற வாக்கிற்கிணங்க, ஓர் உண்மையான அரசருக்கு உரிய பண்புநலன்களைக் கொண்டு முன்மாதிரியான அரசராக என்றென்றும் வாழும் நமது ஆண்டவர் இயேசுவின் வழியில் ஒன்றிணைந்து பயணிப்போம். கிறிஸ்து அரசருக்காகத் தனது உயிரையே கையளித்த மிகுவேல் ப்ரோவைவின் வழியில் நாமும் ‘கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!’ என்று அறிக்கையிட்டு சான்று பகர்வோம்.  அதற்கான அருளை நமது ஒப்பற்ற அரசராம் கிறிஸ்து இயேசுவிடம் இந்நாளில் இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 நவம்பர் 2025, 15:54