ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லை மோதல்கள் மோசமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இந்தப் பதற்றம் கட்டுக்கடங்காமல் போவதைத் தவிர்க்க இரு நாடுகளும் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று கராச்சியில் உள்ள புனித பேட்ரிக் கத்தோலிக்க நிறுவனத்தின் அதிபர் தந்தை மரியோ ஆஞ்சலோ ரொட்ரிகுவஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநிலப் பாதுகாப்பு, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட இலக்குகளை அடைய வேண்டுமானால், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என்று மேலும் வலியுறுத்தியுள்ளார் அதிபர் தந்தை ரொட்ரிகுவஸ்.
இரு நாடுகளும் கலாச்சார ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளன என்பதையும், பயங்கரவாதம் என்பது இருவருக்குமே பொதுவான அச்சுறுத்தல் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அதிபர் தந்தை ரொட்ரிகுவஸ் அவர்கள், மாநில அமைதிக்கு நீண்டகால ஒத்துழைப்பு மட்டுமே ஒரே தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பதற்றங்களை சுட்டிக்காட்டிய அதிபர் தந்தை ரொட்ரிகுவஸ் அவர்கள், அங்குப் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர், தற்போது நிலவும் அரசியல் சூழலால் மீண்டும் நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ள அதிபர் தந்தை ரொட்ரிகுவஸ் அவர்கள், அமைதியான முறையில் வாழும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோரை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது மக்களின் நலன் மற்றும் ஒட்டுமொத்த மாநிலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் தன் நாட்டு எல்லைக்குள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபான் (TTP) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளைத் தடுக்க ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு தவறிவிட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் அதன் எல்லைக் கடப்புகள் மூடப்பட்டு, வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையின் இருபுறமும் உள்ள உள்ளூர் சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்