அமைதி முயற்சிகளை ஆதரிக்க குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பூர்வகுடி கிறிஸ்தவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் மதவெறி வன்முறையை அடுத்து, அமைதியை மீட்டெடுக்கவும், மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிக்கவும் அவசர நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
டிசம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் மணிப்பூர் சென்றிருந்தபோது, பூர்வகுடி சாந்தால் இனத்தைச் சேர்ந்தவரும், பூர்வகுடி பின்னணியைச் சேர்ந்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவருமான குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள், மாநில அதிகாரிகள், தலைவர்கள், மற்றும் இந்து பெரும்பான்மை மெய்தி மற்றும் சிறுபான்மை பூர்வகுடி கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த ஆர்வலர்களைச் சந்தித்தபோது இவ்வேண்டுதல் விடுக்கப்பட்டது.
டிசம்பர் 11, வியாழக்கிழமையன்று, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் நடந்த ஒரு குடிமை நிகழ்வொன்றில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் முர்மு மணிப்பூர் மக்களின் துன்பத்தை ஒப்புக்கொள்வதாகவும், வன்முறையால் ஏற்பட்ட வலியை தான் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் தனது உரையின்போது, அமைதியை வலுப்படுத்துதல், பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மணிப்பூரின் உறுதித்தன்மை மற்றும் வளமைக்கான பாதையை ஆதரிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார் குடியரசுத் தலைவர் முர்மு.
குடியரசுத் தலைவரின் இந்த வருகையின் போது சில மெய்தி இனக் குழுக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால், இந்த நிகழ்ச்சி பலத்த பாதுகாப்பின் கீழ் நடைபெற்றது. மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடியையும் அவலநிலையையும் நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க மெய்தி இனத்தவருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பூர்வகுடி கிறிஸ்தவர்கள் ஆயுதமேந்திய மெய்தியின ஆட்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோது வன்முறை வெடித்தது. மே 2023 இல் தொடங்கிய இந்த மோதலில், முதன்மையாக பூர்வகுடி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்