தேடுதல்

கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி பயிலும் மாணவர்கள்  (AFP or licensors)

கிறிஸ்தவப் பள்ளியை கையகப்படுத்திய குஜராத் அரசு!

இயேசு சபை அருள்பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள், குஜராத் அரசின் இந்தச் செயலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று வர்ணித்துள்ள அதேவேளை, பள்ளியின் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்தாமல் சட்ட வழிமுறைகள் மூலம் எந்தவொரு சிக்கல்களையும் தீர்த்திருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

செபாஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

முறைகேடுகள் நடப்பதாக கூறி அகமதாபாத்தில் உள்ள Seventh-day Adventist  உயர்நிலைப் பள்ளியை குஜராத் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்றும், டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமையன்று, மாவட்ட கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றும் யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவர் மற்றொருவரைக் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொன்றதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, மாவட்டக் கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மாவட்டக் கல்வி அதிகாரியின் அறிக்கையில், தெளிவற்ற நிர்வாகம் பாடபுத்தக விற்பனையில் முறைகேடு, அங்கீகரிக்கப்படாத காலஅட்டவணை, குத்தகை மீறல்கள் மற்றும் போலிச் சான்றொப்பங்கள் ஆகியவையும் அப்பள்ளியில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.  

அதேவேளையில், பள்ளி நிர்வாகத்தினர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறியுள்ள வேளை, பள்ளியை அரசு தனதுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதனை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளனர் என்பதையும் அச்செய்திக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை அரசு மேற்பார்வையிட அனுமதிக்கும் கடந்த கால திருத்தங்களை சுட்டிக்காட்டி, குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை பாரபட்சமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளதையும்  அச்செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

இயேசு சபை அருள்பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள், குஜராத் அரசின் இந்தச் செயலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று வர்ணித்துள்ள அதேவேளை, பள்ளியின் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்தாமல் சட்ட வழிமுறைகள் மூலம் எந்தவொரு சிக்கல்களையும் தீர்த்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

கடந்த 1979-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 11,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் மற்றும் 650 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இது இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான அமைப்புடன் (CISCE) இணைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் 6 கோடியே 30 இலட்சம் மொத்த  மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள்  ஏறத்தாழ 0.5 விழுக்காடு  மட்டுமே உள்ளனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 டிசம்பர் 2025, 11:47