புது தில்லியின் ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவர்கள் கண்டனக் கூட்டம்!
செபஸ்தியான் வனத்தையன்
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வெறுப்பினை எடுத்துக்காட்டுவதற்கும் முறையான புதிய சட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்தவும், 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2,000 கிறிஸ்தவர்கள் நவம்பர் 29 அன்று புது தில்லியின் ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அகில இந்தியக் கத்தோலிக்கச் சங்கம் மற்றும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் உள்ளிட்ட குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய கிறிஸ்தவ மாநாட்டில், மதத் தலைவர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு பேச்சாளர்கள் தங்களது உரையில் கடந்த, 2014 மற்றும் 2024-க்கு இடையில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் சுமார் 500 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், 2024-ஆம் ஆண்டில் மட்டும் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் போதகர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட 834 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த வழக்குகளில் ஏறக்குறைய 20 விழுக்காட்டிற்கும் குறைவானவற்றில் மட்டுமே இதுவரை காவல்துறை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை பட்டியல் இன இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கி, வறுமையை நிலைநிறுத்தி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நில உரிமைகளைக் கட்டுப்படுத்தும் 1950 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணைக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கனிம வளம் நிறைந்த பகுதிகளில் வாழும் பூர்வகுடி மக்களை பட்டியலிலிருந்து நீக்கக்கூடிய சாத்தியம் குறித்து கவலை தெரிவித்த பூர்வகுடி கிறிஸ்தவச் சமூகங்கள், இது இட ஒதுக்கீடு மற்றும் நிலப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வாய்ப்பை இழக்கச்செய்யும் என்கிற அச்சத்தினையும் வெளிப்படுத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய சிறப்பு பேச்சாளர்கள் இந்தியா முழுவதும் மருத்துவ மற்றும் கல்விப் பணியில் கிறிஸ்தவர்களின் பங்களிப்புகளை விவரித்தனர். தொடர்ந்து துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் நீதியை வலியுறுத்தி ஒரு தேசிய அறிக்கையை உயர்மட்ட அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இறுதி தீர்மானத்துடன் இந்தக் கண்டனக் கூட்டம் முடிவடைந்தது.
மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை உறுதி செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ உலகளாவிய தோழமை இயக்கத்திலிருந்து (CSW) மெர்வின் தாமஸ், பேசுகையில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்