திருவிவிலியத்தை விநியோகம் செய்வது குற்றமல்ல : இந்திய நீதிமன்றம்
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம், திருவிவிலியங்களை விநியோகம் செய்வதோ அல்லது அறிவிப்பதோ குற்றச் செயல் அல்ல என்று தீர்ப்பளித்ததுடன், கிறிஸ்தவர்கள் சிலருக்கு எதிராக ஆதாரமற்ற கட்டாய மதமாற்ற வழக்குகளைப் பதிவு செய்ததற்காக காவல்துறையைக் கண்டித்துள்ளது.
ராம் கேவல் பாரதி மற்றும் சிலர், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சுல்தான்பூர் காவல்துறை குற்றம் சாட்டியதை எடுத்துக்காட்டியுள்ள அதேவேளை, கட்டாயப்படுத்துதல், ஆசைகாட்டுதல் அல்லது மதமாற்றத்தில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான ஆதாரத்தையும் நீதிமன்றம் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகள் அப்துல் மொய்ன் மற்றும் பபிதா ராணி ஆகியோர் கூறிய குற்றச்சாட்டில் LED கருவி மற்றும் விவிலிய விநியோகம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததைச் எடுத்துக்காட்டியதுடன் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாத நிலையிலும் மதமாற்றக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதற்காக காவல்துறையை விமர்சித்துள்ளனர்.
விவிலியம் விநியோகம் செய்வதையோ அல்லது அறிவிப்பதையோ தடை செய்யும் எந்தச் சட்டத்தையும் மாநிலத்தின் வழக்கறிஞர் குறிப்பிடத் தவறியதால், நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் குமார் சிங்குக்கு அனுப்பிய ஓர் அறிவிப்பில், அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு எதிரான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் ஏதேனும் குற்றப் பின்னணி இருந்தால் அதை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் சிங் பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த விசாரணை நான்கு வாரங்களில் நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு சட்டத்தின்படி உள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது என்று கூறிய கிறிஸ்தவத் தலைவர்கள், இருப்பினும், உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிக அளவில் இடம்பெற்றன என்றும், மேலும் போலியான மதமாற்ற வழக்குகள் அதிகம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்