மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரிகளைக் கண்டித்துள்ள இந்திய நீதிமன்றம்!
செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்
இந்தியாவின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தலத்திருஅவையினர் நடத்தும் பள்ளிகள் உட்பட தனியார் பள்ளிகளை அதிகப்படியான கட்டணம் வசூலித்த வழக்குகளிலிருந்து விடுவித்துள்ள அதேவேளை, மாநில அதிகாரிகளின் விரோத மனப்பான்மையையும், அதிகாரவரம்பை மீறி செயல்பட்டுள்ளதையும் அந்நீதி மன்றம் கண்டித்துள்ளது.
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவோ அல்லது பள்ளி நிர்வாகத்தில் தலையிடவோ அதிகாரிகள் அதிகாரம் பெறவில்லை என்றும், சட்டவிரோதக் கட்டண உயர்வு குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும் தீர்ப்பளித்துள்ள அதேவேளை, பள்ளிகள் ஏறத்தாழ 38 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் பிறப்பித்திருந்த உத்தரவுகளையும் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
கட்டண முறைகேடுகள் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிறிஸ்தவ அருள்பணியாளர்கள், இருபால் துறவிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் உட்பட 20 பேர் கடந்த 2023-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மேலும் ஆசிரியர்களை அவமதிக்கின்ற விதத்தில் தொடரப்பட்டிருந்த பொது விசாரணைகளையும் தடைசெய்துள்ள நீதிபதிகள், நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான நல்லுறவை பாதித்து மாணவர்களின் நலனுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள தலத்திருஅவை நிர்வாகிகள், பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், இனிமேலாவது, அதிகாரிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்