விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-4- தீமைகள் விலக்கி நன்மைகள் செய்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அது ஒரு அழகான சிறிய கிராமம். ஒரு மாலைப் பொழுதில் முனிவர் ஒருவர் அக்கிராமத்திற்கு வந்தார். ஒரு ஏழைத் தாய் வீட்டின் திண்ணையில் அமர்ந்து, "அம்மா, நான் ரொம்ப பசியா இருக்கேன்...ஏதாவது சாப்பிட இருந்தா கொடும்மா" என்று கேட்டார். "கொஞ்சம் பொறுங்க சாமி, அடுப்புல சோறு வெந்துகிட்டு இருக்கு.. தயார் ஆனதும் கொண்டுவந்து தாறேன்" என்றார் அந்தத் தாய். அப்போது இறந்த ஒருவரைக் கல்லறைக்குத் தூக்கிச்சென்றார்கள். உடனே அந்தத் தாய் சிறுமியான தனது மகளை அழைத்து, "இவர் எங்கே போகிறார் என்று பார்த்துவா” என்றார். அச்சிறுமி வெளியே போய்விட்டு சிறிது நேரம் கழித்து வந்து, “அம்மா, அவர் சொர்க்கத்திற்குப் போகிறார்” என்று கூறினாள். முனிவருக்கு ஒரே ஆச்சரியம். ஆனாலும் இதுகுறித்து அவர் ஒன்றும் கேட்கவில்லை. சற்றுநேரம் கழித்து இறந்த இன்னொருவரைத் தூக்கிச் சென்றார்கள். திரும்பவும் தன் மகளை அழைத்த தாய், “இவர் எங்கே போகிறார் என்று பார்த்துவிட்டு வா” என்றார். மீண்டும் வெளியே சென்ற சிறுமி, சிறிது நேரம் கழித்து வந்து, "அம்மா, இவன் நரகத்திற்குப் போகிறான்" என்றார். இப்போதும் அந்த முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அந்தச் சிறுமியை அழைத்து, “இத்தனை ஆண்டுகளாக நான் துறவியாக இருக்கிறேன், யார் சொர்க்கத்திற்குப் போவார், யார் நரகத்திற்குப் போவார் என்று எனக்கே சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், நீ மட்டும் எப்படி அதைச் சரியாகச் சொல்கிறாய்" என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுமி, “சாமி நான் முதலில் இறந்தவர் வீட்டிற்குச் சென்றேன், அங்கே அனைவரும் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தனர். ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்று பெரிதும் வருந்தினர். அவர் ஒரு அப்பாவி. வஞ்சகம், சூது எதுவும் இல்லாதவர். தனது வாழ்நாள் முழுதும் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதவர். இந்த ஊரில் யாருக்கு ஒரு கஷ்டம் என்றாலும், ஓடிப்போய் முதல் ஆளாக நின்று உதவி செய்யக்கூடியவர், தனக்குக் கெடுதல் வந்தாலும் பரவாயில்லை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுபவர். தன்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து உதவும் தாராள மனது கொண்டவர் என்று அவருடைய நற்குணங்களை மக்கள் அடுக்கிக்கொண்டே சென்றார்கள். வாழும்போதே நற்குணங்களோடு வாழ்ந்து பிறருக்கு உதவும் நல்லவர்கள் கண்டிப்பாக கடவுளிடம்தான் போவார்கள் என்று நினைத்துதான், அவர் சொர்க்கத்திற்குப் போகிறார் என்று சொன்னேன்” என்றார்.
“அதுசரி பாப்பா.. இரண்டாவதாக இறந்தவர் எப்படி நரகத்திற்குப் போகிறார் என்று சொன்னாய்” என்று கேட்டார். அதேமாதிரிதான் சாமி, இரண்டாவதாக இறந்த மனிதருடைய வீட்டிற்கும் சென்றேன். அங்கே யாரும் வருத்தமாக இருக்கவில்லை. எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இருந்தது. எவ்வளவு கொடுமைக்காரன் அவன். இந்த ஊரில் யாரையுமே நிம்மதியாக வாழ விடவில்லை. சொல்ல முடியாத அளவுக்கு மற்றவர்களுக்குத் தீமைகள் செய்தவன். கெட்ட எண்ணமும், பொறாமையும், சூதும், வஞ்சகமும் கொண்டவன். இவன் எத்தனை பேருடைய குடியைக் கெடுத்திருப்பான். அவன் இருப்பதும் ஒன்றுதான் இறப்பதும் ஒன்றுதான் என்று பேசிக்கொண்டனர். இப்படிப்பட்ட தீமைகளை செய்தவன், கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போகமுடியாது. நரகத்திற்குத்தான் போவான் என்று நினைத்துதான் அவன் நரகத்திற்குப் போகிறான்” என்று கூறினேன் என்றாள். அச்சிறுமியின் தெய்வப் பக்தியையும் அறிவுத்திறனையும் கண்டு வியந்தார் அந்த முனிவர்.
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரின் இனிமையைச் சுவைப்போம்' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 8 முதல் 11 வரை உள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வார விவிலியத் தேடலில் அதனைத் தொடர்ந்து வரும் 12 முதல் 14 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு (வசனங்கள் 12-14).
மேற்கண்ட இறைவசனங்களில், வாழ்க்கையில் நிறைவான இன்பம் அடைவதற்கு, தீச்சொல்லை அகற்றுதல், வஞ்சக மொழியை விலக்குதல், தீமையை விட்டு விலகுதல், நன்மை செய்தல், நல்வாழ்வை நாடுதல் என ஐந்து காரியங்களை நமக்குக் குறித்துக் காட்டுகின்றார் தாவீது அரசர். இந்த ஐந்து காரியங்களுக்கும் எதிரான செயல்களை சவுல் மன்னர் கொண்டிருந்ததால் இவைகளைக் குறித்து மிகவும் கவனமாக இருப்பதற்காகவே இவற்றை அதிகம் வலியுறுத்திக் கூறுகிறார் தாவீது. சவுல் மன்னர், தாவீதைப் பழிதீர்ப்பதில் தீய குணங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். தாவீது கோலியாத்தை வென்றதும் அவர்மீது கொண்ட பொறாமையால் அவரை தனது அறைக்கு அழைத்து, யாழ் மீட்ட வைத்து அவரைத் தீர்த்துக்கட்டக் நினைத்தார் (1சாமு 19: 9,10) அது நிறைவேறவில்லை. அதன்பிறகு தனது முதல் மகளை அவருக்குத் திருமணம் செய்துவைத்து வஞ்சகமாய் அவரைக் கொன்றுவிட நினைத்தார் (1 சமு 18:25) அதுவும் முடியவில்லை. அதன் பிறகு, தாவீதுமேல் கொண்டிருந்த காழ்ப்புணர்வால், அவருக்கு உதவிய குருக்களையும், நண்பர்களையும் கொன்றுகுவித்தார். ஆகவே, மன்னர் சவுல் நிகழ்த்திய அடுக்கடுக்கான தீயச்செயல்களை மனதில் கொண்டுதான், கடவுளை அடைவதற்கும், நல்வாழ்வு வாழ்வதற்கும் தடைக்கற்களாய் அமைந்திருக்கும் தீயவைகளை விட்டொழிக்க வேண்டும் என்று தாவீது அரசர் நமக்கு வலியுறுத்துகின்றார்.
நெல்சன் மண்டேலா தனிமைச் சிறையில் 27 ஆண்டுகாலம் வதைபட்டு, கொடுந்துயர்களை அனுபவித்து தென் ஆப்பிரிக்காவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்து, அந்நாட்டின் முதல் கறுப்பின அதிபராகப் பொறுப்பேற்றார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, தனக்குப் பாதுகாப்புத் தரும் இளம் காவலர்களை அழைத்துக் கொண்டு காலை உணவு அருந்த ஒரு உணவகத்திற்குச் சென்றார். “உங்களுக்கு எதெல்லாம் சாப்பிடப் பிரியமோ அவற்றை வாங்கிச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். எல்லோரும் மகிழ்வுடன் தாங்கள் பிரியப்பட்டதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டார்கள். இவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் நான்கு வரிசை தள்ளி ஒரு பெரியவர் தனியே அமர்ந்து ஏதோ வாங்கிச் சாப்பிடக் காத்திருந்தார். மண்டேலா அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்து, ஒரு காவலரை அனுப்பி, ‘அவரையும் அழைத்து வந்து நம்மோடு அமரச் செய்து அவருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுங்கள்!’ என்றார். ஆனால், அந்தப் பெரியவர் எழுந்து வர ரொம்பவும் தயங்கினார். அவ்விளைஞர் பிடிவாதமாக அவரை அழைத்து வந்து அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவர் உண்பதற்கு வாங்கிக் கொடுத்தார். அக்காவலர்களும் வேண்டிய அளவிற்கு விதவிதமான உணவுகளை வாங்கிச் சுவைத்து சாப்பிட்டார்கள். ஆனால் அந்தப் பெரியவர், வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே சாப்பிட்டு முடித்து வணக்கம் கூறிவிட்டுத் தட்டுத் தடுமாறி நடந்து வெளியேறினார். “பாவம், வயதாகிவிட்டது. நடக்க சிரமப்பட்டுப் படபடப்பாகப் போகிறார்” என்றார் ஒரு காவலர். “அப்படியல்ல, அவர் யார் என்று நினைத்தீர்கள்? என் சிறை வாழ்க்கையில் பெரும்பகுதி அவர்தான் எனக்குச் சிறை அதிகாரியாக இருந்தார். 27 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைக்குள் நுழையும் போது இரும்பு உடம்புடன் வலிமையாக இருந்தேன். சிறையில் கொடுக்கும் உப்பில்லாத கூழும், வாயில் வைக்க முடியாத அச்சுக்களியும் என்னைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தத் தொடங்கின. அதுமட்டுமன்றி, வாரம் ஒரு நாள் எனக்கு இரண்டு விதமான பூஜைகள் நடக்கும். என் ஆடைகளைக் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் நிறுத்தி 100 சவுக்கடித் தருவார்கள். அது முடிந்ததும் 100 முறை இலத்தியால் தாக்குவார்கள். ஆனால், இரத்தம் வராமல் இந்தக் கொடுமையைச் செய்வார்கள். கழுத்து அறுபட்ட கோழிபோல, வலி தாங்காமல் துடிதுடிப்பேன். நாக்கு வறண்டுவிடும். தொண்டை காய்ந்து விடும். நடுநடுங்கிக் கொண்டே ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று அலறுவேன். இந்தச் சிறை அதிகாரிதான், என்னிடம் வந்து, “ஓ உனக்குத் தண்ணீர் வேண்டுமா? இதோ..தண்ணீர்” என்று கூறி, என் மீது சிறுநீரைப் பீய்ச்சியடிப்பார். ஒரு நாள் இருநாள் அல்ல, கடைசி வரை இந்த மரியாதை எனக்கு ஈவு இரக்கமில்லாமல் தரப்பட்டது. சரி! மேலதிகாரியின் உத்தரவு. அதை இவர் செய்திருக்கிறார். இவரைக் கோபித்து என்ன பயன் என்றுதான் இன்று அவரை நம்மோடு உணவருந்த அழைத்தேன்!” என்றார் மண்டேலா. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்- அவர் நாண நன்னயம் செய்து விடல்!’ (குறள்: 314) என்ற குறளில், ‘ஒருவர் உனக்குத் தீமை செய்தால் அவரே நாணும் அளவுக்கு நீ அவருக்கு நன்மை செய்து விடு’ என்கிறார் வள்ளுவர்.
கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். (எபே 4:28-31) என்று கூறுகின்றார் புனித பவுலடியார். ஆகவே, தீச்சொல்லினின்று நமது நாவைக் காத்து, வஞ்சக மொழி அகற்றி, தீமையை விலக்கி, நன்மையை நாளும் செய்து, நல்வாழ்வை நாடுவோம். தாவீதைப் போன்று, இத்தகைய நல்வாழ்வை அடைவதில் கருத்தாய் இருப்போம். இவ்வருளுக்காக இறைவனிடம் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்