தேடுதல்

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்   (AFP or licensors)

தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ சமூகம்

"இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மனிதாபிமான உதவிகளும் ஆன்மிக ஆதரவும் மிகவும் இன்றியமையாதவை" : அருள்பணியாளர் பேசில் ரோஹன் பெர்னாண்டோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 27, வியாழனன்று,  இலங்கையைத் தாக்கிய தித்வா புயல் அங்குக் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, 300-க்கும் மேற்பட்டோரை பலியாக்கியுள்ளதுடன், 200 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புயலின் காரணமாக ஏற்பட்ட  அணை உடைப்புகள் மற்றும் பரவலான அழிவு காரணமாக 20,000-க்கும் அதிகமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1,00,000- க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

மேலும் இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு அவசர உதவிகளையும் மேற்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த அருள்பணியாளர் பேசில் ரோஹன் பெர்னாண்டோ, கிழக்கு மாநிலத்தில் உள்ள மாவிலாறு அணை சேதமடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பெரும் துயரம் குறித்துக் குறிப்பிட்டுள்ள நிலையில் 24,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போதிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியதையும் அச்செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவச் சமூகங்கள், பாதிக்கப்பட்டவர்களின் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் நலவாழ்வுப் பொருட்களை வழங்கி வருகின்றன என்றும் கூறியுள்ளது.

மேலும் காரித்தாஸ்  மற்றும் பிற தன்னார்வ நிறுவனங்கள் இப்புயலின் தாக்கத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவளிக்க தன்னார்வலர்களைப் பரவலாகத் திரட்டியுள்ளன என்றும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 டிசம்பர் 2025, 13:58