தேடுதல்

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்   (AFP or licensors)

ஆடம்பரமின்றி விழாக்களைக் கொண்டாட இலங்கை மதத் தலைவர்கள் வலியுறுத்தல்!

மத விழாக்களைக் குறைத்து, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துமாறு இலங்கையின் கிறிஸ்தவ மற்றும் பௌத்த உயர்மட்டத் தலைவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி மற்றும் பெருவெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து வரவிருக்கும் மத விழாக்களைக்  ஆடம்பரமின்றி எளிமையாகக் கொண்டாடுமாறும், நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துமாறும் கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களின் உயர்மட்டத் தலைவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கத்தோலிக்கர் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் எளிமையாகக் கொண்டாடி, சொந்தங்களையும், வீடுகளையும் மற்றும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

மேலும் பௌத்த மதத் தலைவர்களும் இதேபோன்ற வேண்டுகோள் ஒன்றை விடுத்து, துறவிகளும் பொதுமக்களும் பிரிவினைகளைத் தவிர்த்து, நாடு தழுவிய மீட்பு பணிகளை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

புயலின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை ஏறத்தாழ, 44,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடமாற்று செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மத வேறுபாடுகளைக் கடந்து, தலத்திருஅவைத் தலைவர்களும், தன்னார்வலர்களும் உணவு, உடை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். பல பங்குத் தளங்கள் மற்றும் அமைப்புகள் நிகழ்வுகளை இரத்து செய்துவிட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

இலங்கை மீது டிட்வா சூறாவளி தாக்கி, குறைந்தது 627 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய்யுள்ளதாகவும், 16  இலட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 டிசம்பர் 2025, 15:24