தேடுதல்

போரால் இடம்பெயர்ந்து செல்லும் மக்கள் போரால் இடம்பெயர்ந்து செல்லும் மக்கள்   (AFP or licensors)

மோதலால் பாதிக்கப்பட்ட மியான்மாரில் ஒன்றிப்பு ஏற்பட அழைப்பு!

இறைவேண்டலில் மட்டுமல்லாமல், ஒன்றிப்பின் உறுதியான அடையாளங்கள் வழியாகவும் மியான்மாரை நினைவுகூருமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆசிய இயேசு சபைத் தலைவர்கள், ஒரு நாள் நிச்சயம் குணப்படுத்துதலும் ஒப்புரவும் வெற்றி பெறும் என்ற தங்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 18, புதன்கிழமையன்று, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் திருநீற்றுப் புதனைத் தொடங்கியுள்ள வேளை, ஆசியா முழுவதும் உள்ள இயேசு சபைத் தலைவர்கள், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக மியான்மாரில், உறுதியான ஒன்றிப்புடன் இறைவேண்டல், நோன்பு மற்றும் தர்மத்தை ஒன்றிணைக்க விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு தொடர்ந்து இடம்பெயர்வு, பொருளாதார நெருக்கடி மற்றும் ஆழமான சமூகப் பிளவுகளைத் தாங்கி வருவதாக இயேசு சபைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மியான்மாரில் உள்ள இயேசு சபை அருள்தந்தையர்களின் வட்டார அதிபர், தந்தை கிரிஷ் சந்தியாகு அவர்கள், "இந்த ஆண்டு நிறைவு, இழப்பை நினைவுகூரும் நாளாகவும், நீதி இல்லாமல் அமைதி பாதுகாப்பாக இருக்காது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நாளாகவும் அமைந்தது" என்று விவரித்துள்ளார்.

வியட்நாமின் வுங் டாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பகுதியிலுள்ள இயேசு சபைத் தலைவர்களின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் வட்டார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி மியான்மாரின் நெருக்கடிக்காக இறைவேண்டல் செய்துள்ளனர்.

இந்நிலையில், "40 நாள் தவக்காலம் தொடங்குகையில், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆதரவு மற்றும் அமைதியை ஆதரிப்பது உள்ளிட்ட இரக்கச் செயல்களை நோக்கி நமது நம்பிக்கை நகர வேண்டும்" என்று ஆசிய வட்டார இயேசு சபைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இறைவேண்டலில் மட்டுமல்லாமல், ஒன்றிப்பின் உறுதியான அடையாளங்கள் வழியாகவும் மியான்மாரை நினைவுகூருமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர்கள், ‘ஒரு நாள் நிச்சயம் குணப்படுத்துதலும் ஒப்புரவும் வெற்றி பெறும்’ என்ற தங்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2026, 11:58