தேடுதல்

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உக்ரேனியப் பெண் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உக்ரேனியப் பெண்  

உக்ரைனில் அமைதி திரும்ப பேராயர் Shevchuk அறைகூவல்!

பேராயர் Sviatoslav Shevchuk தனது நேர்காணலில், "இரஷ்ய-உக்ரைன் போர் அனைத்துலக சமூகத்தின் ஒரு அறவீழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ள அதேவேளை, "இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒரு நீதியான அமைதியைக் கட்டியெழுப்பவும் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றும் அரசு தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உக்ரைனின்  கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், "இந்த மோதல் மனிதகுலத்திற்கே ஒரு அவமானம்" என்றும், "இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத ஒரு பெருந்துயரம்" என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு இரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதிலிருந்தே இந்தப் போரின் தொடக்கம் அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள பேராயர் Shevchuk அவர்கள், அண்மைய மாதங்களில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதோடு, அடிப்படை வாழ்வாதாரக் கட்டமைப்புகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருவதால், அங்கு நிலவும் மனிதாபிமானச் சூழல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்குப் பொதுமக்களும் அருள்பணியாளர்களும் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Shevchuk அவர்கள், அவர்களின் மன மற்றும் ஆன்மிக நலனை மேம்படுத்துவதற்காகத் திருஅவையின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு முயற்சிகளையும் குறிப்பிட்டார்.

இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும், உக்ரேனிய மக்களின் மன உறுதி மற்றும் ஒன்றிப்பை எடுத்துக்காட்டிய பேராயர் Shevchuk அவர்கள், "இந்தப்போர் அனைத்துலக  சமூகத்தின் ஒரு அறவீழ்ச்சி" என்றும் "இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒரு நீதியான அமைதியைக் கட்டியெழுப்பவும் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றும் அரசு தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்கச் சமூகங்கள் அண்மையில் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காகத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட பேராயர் Shevchuk அவர்கள், "ஆக்கிரமிப்பாளரைத் தடுப்பதற்குச் சாத்தியமான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்" என்றும், "எங்களுக்காக தொடர்ந்து இறைவேண்டல் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

"கடுங்குளிர் நிலவும் கீவ் நகரில் வெப்பநிலை -20°C ஆகக் குறைந்துள்ள நிலையில், மின்வெட்டு காரணமாக மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்" என்றும், "வெப்ப வசதி, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள்கூட இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்" என்றும் வேதனை தெரிவித்தார் பேராயர்.

"இந்தத் துயரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, பல்வேறு தலத்திருஅவைகளும், உள்ளூர் அரசு அதிகாரிகளும் இணைந்து மீளாற்றல் மையங்களைத் (Resilience Centres) திறந்துள்ளனர்" என்றும், "இவை குளிர் காய்வதற்கான வெப்ப வசதி, சூடான பானங்கள் மற்றும் தற்காலிகத் தங்குமிடங்களை வழங்குகின்றன" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 பிப்ரவரி 2026, 13:03