தேடுதல்

பேராயர் ஜோஸ் மானுவேல் இம்பாம்பா பேராயர் ஜோஸ் மானுவேல் இம்பாம்பா  

திருத்தந்தையை வரவேற்கத் தயாராகும் லுவாண்டா உயர்மறைமாவட்டம்!

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணமானது , அங்கோலா நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன், அந்நாடு சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்கள் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் செயல்பட பெரும் ஊக்கமளிக்கிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அங்கோலா திருஅவை நம்பிக்கையில் முதிர்ச்சியும், இளமைத் துடிப்பும், நற்செய்தி அறிவிப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு 'மிஷனரி சபையாக' திருத்தந்தையை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது என்று லுவாண்டா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஜோஸ் மானுவேல் இம்பாம்பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்று பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9, வியாழனன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அங்கோலா நாட்டிற்கு ஏப்ரல் 18 முதல் 21 வரை திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் இந்தத் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.

திருத்தந்தையின் இந்த வருகையானது, அங்கோலா மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்றும், அந்நாடு  சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்கள் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் செயல்பட பெரும் ஊக்கமளிக்கும் என்றும் பேராயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று  இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் அங்கோலா நாடு, நீண்டகால ஆதிக்க காலனித்துவ ஆட்சி மற்றும் பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் வடுக்களை இன்றும் சுமந்து நிற்கிறது என்றும், இச்சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பிளவுகளையும், வறுமையையும் ஏற்படுத்தியதுடன் அவர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் சிதைத்துள்ளன என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று அரசியல் பிளவுகள், ஊழல் மற்றும் தேசிய ஒற்றுமையின்மை ஆகியவை அந்நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாக உள்ளன என்று எடுத்துக்காட்டியுள்ள இவ்வறிக்கை, இதனால் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், சமூக ரீதியாக ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்வதும் மிக அவசரத் தேவைகளாக மாறியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மத்தியிலும், அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 விழுக்காட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க திருஅவை, அந்நாட்டின் ஒரு மிக முக்கியமான மற்றும் உயிருள்ள சக்தியாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறியுள்ளது.

அதிகரித்து வரும் இறையழைப்புகள், ஏராளமான அருள்பணித்துவ மாணவர்கள், அருள்பணியாளர்கள்  மற்றும் துறவியர், மற்றும் 20 மறைமாவட்டங்களுடன் அங்கோலா திருஅவை மிக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது என்றும், இது அந்நாட்டின் கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்வில் மிகத் தீவிரமானப் பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

அங்கோலா திருஅவையானது ஒரு நெறிமுறை வழிகாட்டியாக செயல்படுவதை பேராயர் இம்பாம்பா அவர்கள், அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதுடன் இது மக்களிடையே உரையாடல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வளர்த்து, அனைத்து அங்கோலா மக்களுக்கும் இணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய  ஒரு எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபடுகிறது என்றும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஏப்ரல் 2026, 13:47