தேடுதல்

கமரூன் நாட்டின் ஆயர்கள் கமரூன் நாட்டின் ஆயர்கள்  

கமரூன் நாட்டின் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் திருஅவையின் அர்ப்பணிப்பு!

கமரூன் நாட்டில் 5,500-க்கும் மேற்பட்ட நலவாழ்வுப் பணியாளர்களால் மதம் அல்லது தகுதி நிலையைப் பாராமல் ஆண்டுதோறும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மத்திய ஆப்பிரிக்க நாடான கமரூனில் கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய இரண்டு துறைகளிலும் கத்தோலிக்கத் திருஅவை ஒரு முக்கிய பங்கை வகித்து வருவதாக பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அங்கு திருஅவை நடத்திவரும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏறத்தாழ 4,68,000 மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள அச்செய்தி நிறுவனம், விரிவான கல்வி வலையமைப்பின் ஒரு பகுதியான இந்தப் பள்ளிகள் சிறந்த கல்வித் தரம், ஒழுக்க நெறிகள் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில், பெரும் புகழ்பெற்றவையாகத் திகழ்கின்றன என்றும் கூறியுள்ளது.

அங்குள்ள திருஅவையானது ஏறத்தாழ 600 மருத்துவ சேவை மையங்களை நிர்வகித்து வருகிறது என்று கூறியுள்ள அச்செய்தி நிறுவனம், இதில் பெரிய மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற ஆரம்ப நலவாழ்வு மையங்கள் ஆகியவையும் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5,500-க்கும் மேற்பட்ட நலவாழ்வுப் பணியாளர்களால் மதம் அல்லது தகுதி நிலையைப் பாராமல் ஆண்டுதோறும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலாபத்தை விட மனித மாண்பு, இரக்கம் மற்றும் சேவையை முன்னிறுத்திச் செய்யப்படும் திருஅவையின் இந்தப் பணிகள், நம்பிக்கை, மாற்றம் மற்றும் முழுமையான மனித வளர்ச்சிக்கான ஒரு ஆதாரமாகப் போற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2026, 15:37