தேடுதல்

கடல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவ கோரிக்கை கடல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவ கோரிக்கை   (ANSA)

மனிதாபிமான உதவிகளை தீவிரப்படுத்த சான்ட் எஜிடியோ அமைப்பு கோரிக்கை

கடலில் ஆபத்தில் இருப்பவர்களின் உயிர்களைக் காக்க, கடல்சார் மீட்புப் பணிகளை (Rescue operations) மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது எஜிடியோ அமைப்பு.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

சிசிலியன் கால்வாய் மற்றும் மத்திய தரைக்கடலில் அண்மையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக்கொண்டுள்ள சான்ட் எஜிடியோ அமைப்பு, கடலில் ஆபத்தில் இருப்பவர்களின் உயிர்களைக் காக்க மனிதாபிமான உதவிகளையும் தீவிரப்படுத்துமாறு இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

உயிர்ப்பு பெருவிழா அன்று இரவு மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கத்தோலிக்கத் திருஅவையின் ஒரு அங்கமாகச் செயல்படும் உலகளாவிய பொதுநிலையினர் அமைப்பான சான்ட் எஜிடியோ அமைப்பு இத்தகவலை வழங்கியுள்ளது.

இந்த விபத்து நடந்து சில நாட்கள் ஆன போதிலும், தப்பிப்பிழைத்தவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுதான் இந்தத் துயரச் செய்தி வெளியுலகிற்குத் தெரியவந்ததையும்  அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிசிலியன் கால்வாய் மற்றும் மத்தியதரைக் கடலில் அண்மையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களையும் சேர்த்து, 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ள அவ்வமைப்பு, இந்த மரணங்களுக்கு முன்னால், நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்க முடியாது என்றும் அத்துடன், மத்திய தரைக்கடல் பயணத் துயரங்களின் புள்ளிவிவரங்களைப் புதுப்பிப்பதோடு மட்டும் நம் கடமையை நிறுத்திக்கொள்ள முடியாது என்றும் கவலை தெரிவித்துள்ளது.

கடலில் ஆபத்தில் இருப்பவர்களின் உயிர்களைக் காக்க, கடல்சார் மீட்புப் பணிகளை (Rescue operations) மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பு, தேசிய மற்றும் ஐரோப்பிய அளவிலான அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் மிக வலுவான கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றும் கூறியுள்ளது.

மேலும் வேலைவாய்ப்புக்கான வழிகள் உட்பட, முறையான குடியேற்றப் பாதைகளை (Regular entry routes) ஊக்குவிப்பதும் அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு, இது இத்தாலிக்கு தற்போது மிக அவசரமாகத் தேவைப்படும் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

போரினால் சிதைந்த நாடுகளிலிருந்து தப்பியோடி வருபவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைவதை  ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக, மனிதாபிமான பாதுகாப்பு வழித்தடங்கள் (Humanitarian Corridors) போன்ற மாதிரிகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சான்ட் எஜிடியோ அமைப்பு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக ஐரோப்பாவை வந்தடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஏப்ரல் 2026, 16:07