பஹ்ரைனில் ஆயர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஏப்ரல் 6, திங்களன்று, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சேவை செய்யும் வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகத்தின் ஆயர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பஹ்ரைனில் உள்ள அவாலி நகரில் இடம்பெற்றது.
அரேபியாவின் அன்னை மரியா பேராலயத்தில் இடம்பெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்த இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய ஆயர் ஆல்டோ பெரார்டி அவர்கள், உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் என்று பிதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபா வழங்கிய நிலத்தில் கட்டப்பட உள்ள இந்த இல்லம், நிர்வாகம் மற்றும் மேய்ப்புப் பணிகளுக்கான மையமாகச் செயல்படும் என்றும், அருள்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருஅவையின் நீடித்த பணியைக் குறிக்கும் வகையில் ஒரு அடையாள உறை (symbolic capsule) அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அச்செய்தி நிறுவனம், அந்நாட்டின் தேசிய நிறுவனங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, வலுவான மத நல்லிணக்கத்தைப் பிரதிபலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிக போர்நிறுத்தம் காரணமாக பஹ்ரைனின் வான்வெளி திறந்தே இருப்பதாகவும், இருப்பினும் முக்கியமான பகுதிகளுக்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து குறைந்த அளவிலான விமானங்கள் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்