ஞாயிறு மறையுரைச் சிந்தனை
அருள்பணி. ஸ்டான்லி குமார்
உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய கிறிஸ்தவ தமிழ் உள்ளங்களே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு நல்வாழ்த்துக்கள்!
உயிர்ப்பு ஞாயிறின் இரண்டாம் ஞாயிறை நம் தாய் திரு அவையானது இறைஇரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடி மகிழ்கின்றது. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். இரக்கத்தின் புனிதையான, இறை இரக்கத்தை உலகமெங்கும் பரப்பிய புனித பவுஸ்தினா அவர்களின் தூண்டுதலாலும், வேண்டுதலாலும், பக்தி முயற்சியினாலும் தனிப்பட்ட முறையில் தான் அடைந்த பயனை உலகமெங்கும் அனுபவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உயிர்ப்பின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை இறைஇரக்கத்தின் ஞாயிறாக சிறப்பித்து உயிர்ப்பின் மகிமையை உலகறியச் செய்தார்.
இயேசுவின் காலியான கல்லறையை கண்ட யோவான் ஆண்டவரைக் கண்டார். நம்பினார் என்றும், அழுது புலம்பி, கண்ணீரோடு கதறி, ஆண்டவரைக் கண்டாலொழிய நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று தவித்து நின்ற மதலேன் மரியாளை மரியே என்று அழைத்து தன்னை வெளிப்படுத்தினார் ஆண்டவர் என்றும் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறுகிறது. ரபூனி என்று அழைத்து கால்களை இறுகப்பற்றிக் கொண்டு நின்றவளுக்கு தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பாக்கியத்தை தந்து தன்னை வெளிப்படுத்தினார் ஆண்டவர். விலாவில் கையை இட்டு அந்த ஆணிகளால் ஆன தழும்புகளை நான் அடையாளம் கண்டாலொழிய நான் நம்பமாட்டேன் என்ற தோமையாருக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி இரக்கத்தை காட்டினார். யார் யார் எந்தெந்த விதங்களில் தன்னை புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறார்களோ அந்தந்த விதங்களில் தன்னை வெளிப்படுத்தி இறை இரக்கத்தின் மாண்பை, மாட்சியை ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். பார்க்க சிலருக்கு, கட்டிப்பிடிக்க சிலருக்கு, தொட சிலருக்கு என ஒவ்வொருவருக்கும் அவரவருடைய இறை அனுபவத்தின் ஆவலுக்கேற்ப தன்னை வெளிப்படுத்திய இறை இரக்கத்தை என்னவென்று சொல்வது?
அன்பிற்குரியவர்களே! ஆண்டவரின் உயிர்ப்பிற்கு பிறகு ஆண்டவர் தன் சீடர்களுக்கு காட்சியளித்தபோது புனித தோமா அவர்களோடு இல்லை. நான் ஆண்டவருடைய காயங்களில் என் விரலை இட்டு அதனை உணர்ந்தாலொழிய என்று புனித தோமா சொன்னது சந்தேகத்தினால் இல்லை. மாறாக அவர் அந்த காயம் காட்டும் நேயத்தின் அன்பை சுவைக்க உணர்ந்தார். இந்த காயத்தில் ஆண்டவரின் அன்பும் இரக்கமும் வெளிப்படுவதை கையால் தொட்டு உணர முடியாதா என்ற ஏக்கத்தில்தான் அந்த வேண்டுகோளை வைக்கிறார். ஆகவேதான் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி தன் விலாவை காண்பித்தபோது என் ஆண்டவரே! என் தேவனே என்று தாள்பணிகின்றார். யோவான் நற்செயதியில் நிக்கதேம், சமாரியப் பெண், பிறவிக்குருடன் என ஒவ்வொருவரும் ஆண்டவரைப்பற்றிய நம்பிக்கையை சொல்லி அறிக்கையிடுகிறார்கள். ஆனால் யாரும் ஆண்டவரே என் தேவனே என்று அறிக்கையிட்டதில்லை. புனித தோமா மட்டும்தான் அவ்வாறு அறிக்கையிட்டார். இவ்வளவு அளவு கடந்த இறைவன் எனக்காய் மரித்து, உயிர்த்து என்று அவர் வெளிப்படுத்துகின்ற பாசத்தின் அடையாள வார்த்தைகளை நமக்கு வாசிக்கச் சொல்லி காட்டி ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ள திருஅவை நம்மை அன்போடு அழைக்கிறது. இறைவனின் இரக்கத்தை நாம் உண்மையாகவே கண்டுகொண்டோம் என்றால் நாம் நாமாக இருக்க மாட்டோம். நாம் எப்படி மாறுவோம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
திருத்தூதர் பணிகள் 2: 42 – 47 வரையுள்ள இறைவார்த்தைகள் இறை இரக்கத்தின் கொண்டாட்டத்தை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். அப்பம் பிடுதல் என்பது இயேசு இன்றும் நம்மோடு வாழ்கிறார், தன்னையே நமக்காக பிட்டுக் கொடுக்கிறார், அவர் இம்மானுவேலின் தேவன், வாழும் தேவன் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. நம்மோடு வாழுகின்ற இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார், பலப்படுத்துகிறார் நம்மை தட்டி எழுப்பி தூக்கி நிறுத்தி உயர்த்திப் பிடித்து அன்பு செய்ய ஆளுமையோடு நடந்து கொள்ள நமக்கு ஆற்றல் தருகிறார் என்பதை எடுத்தியம்புகிறது.
இறைவார்த்தைகளைக் கேட்பது எதற்காக? பாறைகள்மீது வீட்டைக் கட்டிக்கொண்டு அறிவாளிகளாய் வாழ வேண்டும் எனபதற்காக தங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வது எதற்காக? தான் மட்டும் வாழ வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை விடுத்து இயேசுவின் சீடன் என்பவன் தன்னையே மற்றவர்களுக்காக உடைத்துக் கொடுக்கக்கூடியவன் என்பதை உணர்த்திக்கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
அன்பிற்குரியவர்களே! அன்னை தெரசாள் ஒருமுறை கருவுற்றால் ஒருமுறைதான் பிரசவிக்கலாம், ஆனால் கருணையுற்றால் ஆயிரம் முறை பிரசவிக்கலாம் என்று சொன்னார்கள். ஆம் கருவுற்றால் ஒரே ஒரு முறை வலிதாங்கி ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம். ஆனால் கருணையுற்றால் ஆயிரக்கணக்கான மக்களின் கண்களை துடைக்கலாம், கரங்களை கழுவலாம் ஆயிரக்கணக்கான வயிறுகளை நிரப்பலாம், எந்த தூரத்திலும் புறப்பட்டு போய் நாம் உதவி செய்ய தயாராக இருக்கக்கூடிய இதயத்தையும் மனதையும் நான் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அந்த வாக்கியம் சுட்டிக்காட்டுகிறது. அன்பு செய்ய காரணம் தேவையில்லை என்பதுதான் இரக்கத்தின் இன்னொரு முகம் நமக்கு காட்டுகிறது. இரக்கமும் அன்பும் இரட்டை பிறவிகள். ஒன்று அக்கா இன்னொன்று தங்கை. அன்பு என்பது அக்கா, இரக்கம் என்பது தங்கை. ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மாட்டார்கள். அன்பாய் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இரக்கமில்லாமல் நடந்தோம் என்று சொன்னால் நாம் நலமான கிறிஸ்தவ வாழ்வை வாழ்கிற மனிதர்கள் என்று சொல்லவே முடியாது.
அன்பு சகோதர சகோதரிகளே! இறை இரக்கத்திருநாளிலே இறைவனின் இரக்கத்தை கொண்டாடி மகிழ்கின்றோம். வனாந்தரத்திலே நெருப்புத்தூணாய், மேகத்தூணாய், பாறையை உடைத்து தண்ணீராய் செங்கடலை கிழித்து பாதையாய் ஆண்டவர் இரக்கத்தோடு இஸ்ரயேல் மக்களை வழிநடத்தினார். அதே இறைவன்தான் சொந்த ஒரு தாயைப்போல அவர்களோடு உரையாடினார். பெற்றதாய் உன்னை மறந்தாலும் நான் ஒருபோதும் உன்னை மறக்கமாட்டேன் என்று ஆண்டவர் உறுதியாய் சொல்லி இறை இரக்கத்தை புரிந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார். இறை இரக்கம் அளப்பரியது. எல்லை கடந்தது. இந்த இரக்கத்தை நாம் எப்படி வாழ்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். இரக்கத்தை வாழ்வில் காட்ட மறந்துவிடக்கூடாது என்பதை நினைவில் கொள்வோம். பல சமயங்களில் பேசுவதிலும் உரையாற்றுவதிலும், கட்டுரை எழுதுவதிலும் நமது நேரத்தை செலவிடுகின்றோம். ஆனால் களத்தில் இறங்கி கைகளை கறைபடுத்தி, நம்மையே காயப்படுத்தி, அடுத்தவருக்கு உதவ தயாராக இருக்கிறோமா?
கேரளாவில் ஒரு ஆயர் பேருந்தில் பயணம் செய்தபோது தன் சீட்டுக்கு அருகில் ஒரு முஸ்லீம் சகோதரர் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவரின் முகம் வாடியிருந்ததைக் கண்ட ஆயர், அதன் காரணத்தை கேட்டார். உடனே அந்த சகோதரர் தனக்கு இரண்டு கிட்னிகளும் பழுதாகிவிட்டது. சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இறந்துவிடுவேனோ என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது. எனது பிள்ளைகளை தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிடுவேனோ என்ற துயரமும் என்னை சூழ்ந்து கொள்கிறது என்று அழ ஆரம்பித்தார். அதனைக் கேட்ட ஆயர் அவரின் தோள்களின்மேல் கையை வைத்து தட்டிக் கொடுத்து தான் இறங்க வேண்டிய இடத்திலே அவரையும் இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தனது சொந்த செலவில் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு தனது சிறுநீரகத்தில் ஒன்றை அவருக்கு கொடுத்து அவர் உயிர் பிழைக்கச் செய்தார். இதுதான் உண்மையான அன்பு. அனைவரும் சிறுநீரகத்தை பகிர்ந்து கொடுக்க முடியாது. ஆனால் நமது நேரத்தை, அன்பை, பாசத்தை, திறமையை, உற்சாகமூட்டும் நல்ல மனதை, ஆற்றுப்படுத்தும் நல்ல கலையை தாராளமாக பகிர்ந்து கொடுப்போம். கல்கத்தா நகரம் முழுவதும் காலரா நோயினால் சிதைந்து போனது. ஆங்காங்கே மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கிடந்தார்கள். அடக்கம் செய்வதற்ககூட ஆளில்லாமல் இருந்தது. அன்னை தெரசா தன் சகோதரிகளோடு களத்தில் இறங்கினார். போதுமான நிதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு சகோதரியிடமும் ஒரு சிறு உண்டியலைக் கொடுத்து அந்த உண்டியலில் நீங்கள் கொடுக்கும் இரண்டு ரூபாயினால் எங்களை ஒரு காலரா நோயாளரைத் தொட அனுமதியுங்கள் என்று எழுதியிருந்தார். அதனைப் பார்;த்த பலர் அச்சத்திலும் பயத்திலும் இருந்தாலும்கூட அனைவரும் தங்களால் முடிந்ததை பகிர்ந்து கொண்டார்கள். தேவையான நிதி வசதி கிடைத்தது. அதன்மூலம் காலரா நோயைக் கட்டுப்படுத்தி கல்கத்தா நகரை அமைதிக்கு கொண்டு வந்தார். அன்பிற்குரியவர்களே! இரக்கம் என்பது ஒரு தனிப்பெரும் கொடை. அந்தக் கொடை நமக்குள்ளாக இருந்தால் நம் குடும்பம் சிறக்கும். நம்முடைய சமூகம் சிறக்கும். நமது பங்கு சிறக்கும்.
ஒரு குரு மாணவர் தலையில் கட்டி இருந்தது. அவர் மிகுந்த வேதனைப்பட்டார். அவதிப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது 2 லட்சம் ரூபாய் முன்பணமாக கட்ட வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. சாதாரண எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் சேகரிக்க தடுமாறினார்கள். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை மூன்று திருப்பலியிலும் அந்த சகோதரர் பற்றி சொன்னார். ஆவரின் நிலையை உணர்ந்த பங்கு மக்கள் அவருக்கு தாராளமாக உதவினார். அறுவை சிகிச்சையும் நல்ல முறையில் நடந்தது. விரைவில் குணமாகி குருவாகி மறைமாவட்டத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்.
என் அன்புக்குரியர்களே இரக்க சிந்தனை என்பது எப்போதோ வந்து போகிற ஒரு கானல் நீர் அல்ல அல்லது எப்போதும் வந்து போகிற வானவில்லும் அல்ல மாறாக நம்மோடு கூட இருக்கிற இயங்குகிற ஒரு இனிமையான ஒரு குணம். இந்த இரக்கம் மட்டும் நமக்குள்ளாக இருந்தால் எத்தனையோ காரியங்களை சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை மனதில் இருத்தி சிறப்பான இரக்கச் செயல்களை முன்னெடுப்போம். அதுவே நம் வாழ்வை வளமாக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்