தேடுதல்

ஆயர் வித்தாலி கிரிவிட்ஸ்கி ( கோப்பு படம் ) ஆயர் வித்தாலி கிரிவிட்ஸ்கி ( கோப்பு படம் ) 

போரின் காயங்களுக்கு நடுவே நம்பிக்கையின் ஒளி!

பங்குத் தளங்கள் அவசரக்கால மின்சார அமைப்புகளுடன் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டன. அங்கு மக்களுக்குத் தேவையான உடல் வெப்பத்தைத் தக்கவைக்கும் வசதி, சூடான தேநீர், மின்னேற்ற நிலையங்கள் (Charging stations), சமைப்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படை நலவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உக்ரைனில் துயரத்தில் இருந்த மக்களுக்கு திருஅவை உறுதுணையாக இருந்தது என்றும், தங்களால் இயன்ற உதவிகளை மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதாகவும் கூறினார் ஆயர் வித்தாலி கிரிவிட்ஸ்கி.

உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன்பாக வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள உக்ரைனின் கிவ்-ஸைடோமிர் இலத்தீன் மறைமாவட்டத்தின் சலேசிய ஆயர் வித்தாலி கிரிவிட்ஸ்கி அவர்கள், அண்மைய ஆண்டுகளில் எதிர்கொண்ட மிகக் கடுமையான குளிர்காலத்தை அந்த நகரம் எவ்வாறு கடந்து வந்தது என்பதை விவரித்தார்.

மேலும் துன்பப்படுபவர்களுக்குத் திருஅவை மிக நெருக்கமாக நின்றது என்று கூறிய ஆயர் கிரிவிட்ஸ்கி அவர்கள், தன்னிடம் இருந்த வளங்களை மிகவும் நலிந்த நிலையில் இருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் விளக்கினார்.

இந்நிலையில் பங்குத் தளங்கள் அவசரக்கால மின்சார அமைப்புகளுடன் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டன என்றும், அங்கு மக்களுக்குத் தேவையான உடல் வெப்பத்தைத் தக்கவைக்கும் வசதி, சூடான தேநீர், மின்னேற்ற நிலையங்கள், சமைப்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படைநலவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன என்றும் எடுத்துக்காட்டினார்.

உலகளாவிய கத்தோலிக்க சமூகம் வெளிப்படுத்திய வலுவான ஒன்றிப்பை வலியுறுத்திய ஆயர் கிரிவிட்ஸ்கி அவர்கள், குறிப்பாக இறைவேண்டல்கள், மின்சார உற்பத்தி இயந்திரங்கள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் மூலமாகவும், அதிலும் முக்கியமாக போலந்து நாட்டு மறைமாவட்டங்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு மூலமாகவும் இந்த ஒன்றிப்பு வெளிப்பட்டதாக  குறிப்பிட்டார்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், தலைநகரின் வெப்ப மின் நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், கடும் குளிரின் போது ஏறத்தாழ 3,000 குடியிருப்பு கட்டிடங்கள் வெப்பமூட்டும் வசதியை இழந்தன; அச்சமயத்தில் வெப்பநிலை –20°C வரை சரிந்தது.

பல மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே 5°C குளிரில் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. இவ்வளவு கொடுமையான சூழலை எப்படித் தாங்கி உயிர் பிழைத்தோம் என்று நினைக்கும்போது இப்போதும் தங்களுக்கு வியப்பாக இருப்பதாக அவர்கள் பின்னாளில் தெரிவித்தனர்.

போரினால் ஆழமாக காயப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களின் 'சிலுவைப் பாதை' பயணத்தில், மிகவும் கடினமான கட்டங்களில் ஒன்றாக கடந்த குளிர்காலம் அமைந்தது; குறிப்பாக கிவ் (Kyiv) நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக உக்ரைன் மக்களுக்கு உதவிய உலகெங்கிலும் உள்ள ஆதரவாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஆயர் கிரிவிட்ஸ்கி அவர்கள், உக்ரைனுக்காகவும் நீதியான அமைதிக்காகவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறு அனைவரையும் வலியுறுத்தி நேர்காணலை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2026, 16:03