தேடுதல்

செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு   (©ai2)

செயற்கை நுண்ணறிவு குறித்த ஆப்பிரிக்கப் பார்வை

செயற்கை நுண்ணறிவு மனிதப் படைப்பாற்றல், உறவுகள் அல்லது அறநெறி தீர்ப்புகளை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 60-வது உலக சமூகத் தொடர்பு தினச் செய்தியை மையமாகக் கொண்டு, வத்திக்கானில் “மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல் என்ற தலைப்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்றவர்கள், இன்றைய டிஜிட்டல் (எண்ணிம) யுகத்தில் மனித மாண்பு, உண்மையான உறவுகள் மற்றும் அறநெறி சார்ந்த தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சமூகத்தொடர்பாடலுக்கான திருப்பீடத்துறையின் முன்னெடுப்பில், பாப்பிறை அர்பானியானா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் குறித்து ஆராய்ந்தது.

போலி டிஜிட்டல் உருவங்கள் (deepfakes) எனப்படும் போலியான காணொளிகள் அல்லது ஒளிப்படங்கள், தவறான தகவல்கள், செயற்கை நுண்ணறிவின் சார்புத்தன்மை, கண்காணிப்பு மற்றும் இணையம், கணினி, திறன்பேசி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அணுகவோ அல்லது பயன்படுத்தவோ முடியாமல், ஒரு சமூகப் பிரிவு ஒதுக்கப்படுதல் போன்ற ஆபத்துகள் குறித்து மாநாட்டில் பங்கேற்ற கருத்தாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதே வேளையில், அறநெறி கோட்பாடுகளால் வழிநடத்தப்படும்போது செயற்கை நுண்ணறிவை நேர்மறையான முறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் அங்கீகரித்தனர்.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் முனைவர் ஜாய் புவோலம்வினி அவர்கள், முகம் அடையாளம் காணும் அமைப்புகள், அடையாளச் சுரண்டல், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளை எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு மனிதனின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் படைப்பாற்றல் உரிமைகளை வலுப்படுத்துவது குறித்து பேசிய புவோலம்வினி அவர்கள்,, ஆப்பிரிக்காவைப் பாதிக்கும் புதிய வகையான  “தரவு காலனித்துவத்திற்கு” (data colonialism) அதாவது தனிநபர் தகவல்கள் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களால் சுரண்டப்பட்டு, தனி நபர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயல்முறைக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியர் பெஞ்சமின் ரோஸ்மேன், கல்வி, நலவாழ்வு மற்றும் மொழி பன்முகத்தன்மை போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் ஆப்பிரிக்காவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு மனிதப் படைப்பாற்றல், உறவுகள் அல்லது அறநெறி தீர்ப்புகளை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செய்தியின் அடிப்படையில் உரையாற்றிய திருஅவையின் பிரதிநிதிகள், செயற்கை நுண்ணறிவு தொடர்பாடலுக்கும் நற்செய்திப் பணிக்கும் உதவ முடியும், ஆனால் அது உண்மையான மனிதத் தொடர்பையும் ஆன்மீக பராமரிப்பையும் ஒருபோதும் தர முடியாது என்று குறிப்பிட்டனர்.

செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையும் சூழலில், மனிதக் குரல்கள், கலாச்சாரங்கள் மற்றும் மாண்பைப் பாதுகாக்கும் செயல்முறையே முதன்மையாக இருக்க வேண்டும் என்று இந்த மாநாடு முடிவெடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 15:17