கொலம்பியாவின் டியர்ராடென்ட்ரோ பகுதிக்கு வின்சென்டியன் சபை குரு (CM) திருத்தந்தை பதிலாளாக நியமனம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தற்போது பப்புவா நியூ கினியாவின் கிரிவினா தீவில் உள்ள பதுவை நகர் புனித அந்தோணியார் பங்கு மற்றும் உட்லார்க் தீவில் உள்ள அருளாளர் ஜான் மசுக்கோனி பங்கு ஆகிய பங்குத் தளங்களின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வரும் அருள்பணி ஹோமெரோ மரின் அர்போலேடா (CM) என்பவரை, தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள டியர்ராடென்ட்ரோ பகுதியின் திருத்தூதரக நிர்வாகத்திற்கான திருத்தந்தை பதிலாளாக நியமித்துள்ளார்.
ஆயார் ஹோமெரோ மரின் அர்போலேடா (CM) அவர்கள் 1959 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று கொலம்பியாவின் குயிண்டியோவில் உள்ள சிர்காசியாவில் பிறந்தார். இவர் மெடலினில் உள்ள லா மிலக்ரோசா குருத்துவக் கல்லூரியில் தத்துவமும், வில்லா பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியலும் பயின்றார். மேலும் 1987 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று புனித வின்சென்ட் தே பவுலால் நிறுவப்பட்ட தூதுரைச் சபையில் (Congregation of the Mission) அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு விட்டன்கோ பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும் 1988 முதல் 1993 வரை அதே பங்கின் பங்குத்தந்தையாகவும், 1988 ல் பயேஸ் பழங்குடியின குருத்துவக் கல்லூரியில் துணை அதிபர் மற்றும் பேராசிரியராகவும், 1988 முதல் 1994 வரை வில்லா பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். பயேஸ் இளம் குருத்துவக் கல்லூரியில் அதிபராகவும் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு உரோமில் உள்ள பாப்பிறை அர்பேனியானா பல்கலைக்கழகத்தில் மறைத்தூதுப் பணியியலில் (Missiology) உரிமப் பட்டமும் பெற்றவர்.
1997 முதல் 2000 வரை கொலம்பியாவில் மறைமாநில ஆலோசகராகவும், 1998 முதல் 1999 வரை பயேஸ் பழங்குடியின குருத்துவக் கல்லூரியில் பயிற்சியாளராகவும், 2000 ஆம் ஆண்டு மெடலினின் லா மிலக்ரோசா குருத்துவக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். 2001 முதல் 2007 வரை பப்புவா நியூ கினியாவின் பொமானாவில் உள்ள குருத்துவக் கல்லூரியின் துணை அதிபராகவும், 2007 முதல் 2013 வரை பொமானாவில் உள்ள இயேசுவின் திருப்பெயர் ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும்,2009 முதல் 2011 வரை பப்புவா நியூ கினியாவில் உள்ள லாசரிஸ்ட் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2013 முதல் தற்போது வரை கிரிவினா தீவில் உள்ள பதுவா புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் 2019 முதல் உட்லார்க் தீவில் உள்ள அருளாளர் ஜான் மசுக்கோனி ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்