10,000 மைல்கள் பயணித்து திருத்தந்தையைச் சந்தித்த ஆஸ்திரேலிய கத்தோலிக்கக் குழுவினர்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
புனித ஜோசப் கத்தோலிக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையில் பங்கேற்கவும் ஆஸ்திரேலியாவின் சில்டர்ஸ் கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் 10,000 மைல்கள் பயணித்து உரோம் வந்தடைந்தனர்.
இக்குழுவில், திரு இருதய கத்தோலிக்கப் பங்கின் அருள்பணியாளர் ஜாக் ஹோ மற்றும் அப்பங்கின் உறுப்பினர்களான ஜோ, ஜில்லியன் ரூஸோ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
1926-ம் ஆண்டு புனித ஜோசப் சகோதரிகள் சபையினரால் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 200-க்கும் குறைவான மாணவர்களே கல்வி பயின்று வருகின்றனர் என்றும், தங்களின் சிறிய கிராமப்புற சமூகத்தை உலகளாவிய திருஅவையுடன் இணைக்கவும், திருத்தந்தையின் ஆசீரைத் தங்கள் பங்குத்தளத்திற்குக் கொண்டு செல்லவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக அந்த திருப்பயணிகள் தெரிவித்தனர்.
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கு பிறகு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற அனுபவம் குறித்து பேசிய அருள்பணியாளர ஜாக் அவர்கள், இந்நிகழ்வு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் இறை நம்பிக்கையின் மூலம் அனைவருடனும் இணைந்து பயணிக்கிறோம் என்பதை நிணைவூட்டுவதாக விவரித்தார்.
ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க சமயம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்த அருள்பணியாளர் ஜாக் அவர்கள், அங்கு மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் மட்டுமே கத்தோலிக்கர்களாக உள்ளனர் என்றும், திருப்பலியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் கூறினார்.
மேலும் இளைஞர்கள் வெறுமனே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விட, திருஅவையின் பணிகளில் தங்கள் திறமைகளையும் கொடைகளையும் பயன்படுத்த ஊக்குவிப்பதில் தங்கள் பங்குத்தளம் கவனம் செலுத்துவதாக திருத்தந்தையிடம் அருள்பணியாளர் ஜாக் அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தையைச் சந்தித்த அக்குழுவினர், புனித மேரி மேக்கிலோப் நிறுவிய முதல் பள்ளியின் தரைப்பலக மரத்தால் செய்யப்பட்ட சிலுவை, நினைவுப் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற அர்த்தமுள்ள பரிசுகளை அவரிடம் வழங்கினர். இவை தங்களது சிறிய ஆனால் வலிமையான பங்குச் சமூகத்தின் விசுவாசக் குறியீடுகள் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்