தேடுதல்

ஓசியானியா கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு ஓசியானியா கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு 

ஒற்றுமைக்கும் படைப்பைப் பாதுகாப்பதற்கும் பேராயர் ஜிமெனெஸ் அழைப்பு!

ஓசியானியா கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, குவாமில் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெயர்வு, நவீன அடிமைத்தனம் மற்றும் மறைப்பணி குறித்து விவாதித்தது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஓசியானியா முழுவதிலும் உள்ள கத்தோலிக்க ஆயர்கள், மே 18 முதல் 20 வரை குவாமில் இடம்பெற்ற ஓசியானியா கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒன்றுகூடினர்.

இந்த கூட்டத்தில் இடப்பெயர்வு, நவீன அடிமைத்தனம், சுற்றுச்சூழல் குறித்த கவலைகள் மற்றும் பசிபிக் பகுதியில் மறைப்பணியின் எதிர்காலம் உள்ளிட்ட முக்கிய பகுதிசார் சவால்களை குறித்து ஆயர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதிக பாதிப்பிற்குள்ளாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு இக்கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர பகுதிகளில் தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதிக்கும் நவீன அடிமைத்தன ஆபத்துக்கள் குறித்த நியூ சவுத் வேல்ஸ் விசாரணைக்கு, இந்த கூட்டமைப்பு சமர்ப்பித்த அறிக்கையை ஆயர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து வரும் 'ஓசியானியா புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் கூட்டமைப்பிற்கு' (Oceania Diaspora and Refugee Network) தங்களின் ஆதரவை ஆயர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இடப்பெயர்வால் நாடுகள் எதிர்கொள்ளும் சமூக, ஆன்மீகத் தாக்கங்கள் குறித்து விவாதித்த ஆயர்கள், பொதுநிலையினர், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களுக்கான சிறந்த பயிற்சித் திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்தனர்.

பரந்த தீவுப் பகுதிகளை இணைப்பதில் டிஜிட்டல் ஊடகங்களின் பங்களிப்பை வலியுறுத்திய ஆயர்கள்; உலகமயமாக்கல், சமூக அநீதி மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு திருஅவை அளிக்க வேண்டிய தீர்வுகள் குறித்தும் விவாதித்தனர்.

பேராயர் ரியான் ஜிமெனெஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2028-ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெறவுள்ள ஓசியானியா பொதுக் கூட்டத்திற்கான தயாரிப்புகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தின் இறுதி நாளில் 1,000-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அதில் பேராயர் ஜிமினெஸ் அவர்கள், அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், துணிவோடு இறைசாட்சிகளாகத் திகழவும், இயற்கையைப் பேணிக் காக்கவும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2026, 11:44