தேடுதல்

சிறைக்கைதியொருவரால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் ரோஜாக்களுடன் புனித ரீத்தாவின் திருச்சிலை சிறைக்கைதியொருவரால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் ரோஜாக்களுடன் புனித ரீத்தாவின் திருச்சிலை 

அமைதியின் தூதுவர் புனித ரீட்டா

போலந்தின் கிராக்கோவ் நகரின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் ஸ்டானிஸ்லாவ் டிவிஷ், காக்ஸியா திருத்தலத்தில் நடைபெற்ற புனித ரீட்டாவின் திருவிழா திருப்பலியில் பங்கேற்றுச் சிறப்பு மறையுரையாற்றினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

புனித ரீட்டா ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும், அவரது சான்று வாழ்வு, குறிப்பாக அவரது ஆற்றல்மிக்க பரிந்துரை மூலம் இன்றும் உயிர்ப்புடன் உள்ளார் என்றும், இறைவனில் வேரூன்றிய ரீட்டா தனது குடும்பத்திற்கு தீங்கு செய்தவர்களுக்கும் மன்னிப்பை வழங்கினார் என்றும் கர்தினால் ஸ்டானிஸ்லாவ் டிவிஷ்‌ அவர்கள் குறிப்பிட்டார்.

போலந்து நாட்டின் வரலாற்று, பண்பாட்டு மற்றும் அறிவுசார் மையமான கிராக்கோவ் (Kraków) நகரின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் ஸ்டானிஸ்லாவ் டிவிஷ், காக்ஸியா திருத்தலத்தில் இடம்பெற்ற புனித ரீட்டாவின் திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டு மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் ஊரான கிராக்கோவிலிருந்து ஆன்மீகச் செய்திகளைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் டிவிஷ் அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து வாழும் திருஅவையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், போரினால் சிதைந்துபோயிருக்கும் உலகில் அமைதியும் இரக்கமும் தழைக்க உருக்கமாக இறைவேண்டல் செய்தார்.

மனைவி, தாய், கைம்பெண் மற்றும் துறவி என புனித ரீட்டாவின் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கையை எடுத்துக்காட்டிய  கர்தினால் டிவிஷ் அவர்கள், அவரை ஞானம், நம்பிக்கை, மற்றும் அன்பின் முன்மாதிரியாக விவரித்தார்.

மேலும் தீமையை நன்மையால் வெல்ல வேண்டும் என்ற புனித பவுலின் அழைப்பை புனித ரீட்டா பின்பற்றினார் என்றும், தனது கணவர் மற்றும் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துன்பங்களுக்கு மத்தியிலும், ரீட்டா சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுடன் இணைந்திருந்தார் என்றும் கர்தினால் டிவிஷ் அவர்கள் குறிப்பிட்டார்.

திராட்சைக்கொடி மற்றும் கிளைகளின் நற்செய்தி உருவகத்தை சுட்டிக்காட்டிய கர்தினால் டிவிஷ் அவர்கள், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதன் மூலம் மட்டுமே நற்பலன்களைத் தர முடியும் என்று வலியுறுத்தினார்.

புனித ரீட்டா மீது புனித இரண்டாம் ஜான் பால் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியை எடுத்துக்காட்டிய கர்தினால் டிவிஷ் அவர்கள், ரீட்டாவை அம்பிரியாவின் விலைமதிப்பற்ற முத்து மற்றும் அமைதியின் பெண் என்று அவர் அழைத்தார்.

இறுதியாக உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், திருத்தந்தை பதினான்காம் லியோ மற்றும் உலகளாவிய திருஅவைக்காகவும் இறைவேண்டல் செய்து தனது மறையுரையை கர்தினால் டிவிஷ்‌ அவர்கள் நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 10:52