தேடுதல்

2026.05.30 ANNAI 3

கிறிஸ்தவ-முஸ்லிம் ஒற்றுமைக்கு நைஜீரிய ஆயர்கள் அழைப்பு!

நைஜீரிய இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளை (ஈத் அல்-ஆதா) முன்னிட்டு, நைஜீரிய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCN) வாழ்த்துக்களைத் தெரிவித்து, கிறிஸ்தவ-இஸ்லாமிய அமைதியான சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

நைஜீரிய இஸ்லாமியர்கள் ஈத் அல்-ஆதா பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அமைதியான சகவாழ்வையும் ஒருவருக்கொருவர் புரிதலையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நைஜீரிய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCN) அழைப்பு விடுத்துள்ளது.

நைஜீரிய இஸ்லாமியர்களுக்கு அனுப்பிய செய்தியில், ஆபிரகாம் மீது இறைவன் காட்டிய கருணையை நினைவு கூர்ந்த ஆயர்கள், நாடு தற்போது கடினமான பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களை எதிர்கொண்டு வரும் இந்த வேளையில்,  அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ ஊக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆபிரகாமின் நம்பிக்கையும் இறைவனுக்கு அவர் காட்டிய கீழ்ப்படிதலும் எப்படி அவரது மகனைப் பாதுகாக்க வழிவகுத்தது என்பதை எடுத்துக்காட்டிய ஆயர்கள், அதை இறைவனின் கருணை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விவரித்தனர்.

மேலும் நாடு தற்போது சவாலான சூழலை எதிர்கொள்ளும் போதிலும், ஆபிரகாம் வெளிப்படுத்திய நம்பிக்கை, தியாகம் மற்றும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மனப்பான்மையைப் பின்பற்றுமாறு அனைத்து நைஜீரியர்களுக்கும் ஆயர்கள் அழைப்பு விடுத்தனர்.

இஸ்லாமியத் தலைவர்களிடம் பேசிய நைஜீரிய கத்தோலிக்க ஆயர் பேரவை, அன்பு, நீதி மற்றும் பொதுநலத்திற்கான சேவையை மேம்படுத்துவதில் அதிக ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தியதுடன், தன்னல அரசியல் நோக்கங்களையும், மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் பயனற்ற கொள்கைகளையும் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில், நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஓயோ மறைமாவட்டம், ஈத் அல்-ஆதா பண்டிகையானது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஆழப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடத்தல்கள் மற்றும் வன்முறை போன்ற வளர்ந்து வரும் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, ஒரே இறைவனை நம்புபவர்களாக, தீமையைத் தடுப்பதிலும் அமைதியை மேம்படுத்துவதிலும் இணைந்து செயல்படுமாறு திருஅவைத் தலைவர்கள் இரு சமூகத்தினரிடமும் கேட்டுக்கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2026, 10:49