தேடுதல்

பெரு நாட்டின் கர்தினால்களும் ஆயர்களும் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட போது பெரு நாட்டின் கர்தினால்களும் ஆயர்களும் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட போது 

பழங்குடியின மக்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குத் தார்மீக வெற்றி!

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கடாகோஸ் எனும் இடத்தில், 'சோடாலிட்டியம் கிறிஸ்டியானே விடே' (Sodalitium Christianae Vitae) என்ற கத்தோலிக்க அமைப்பால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தல், நில அபகரிப்பு மற்றும் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளான தல்லான் பழங்குடியின விவசாயிகளின் முன்னிலையில், வத்திக்கான் பிரதிநிதிகள், கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் ஆகியோர் முழங்காலிட்டு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

பெரு நாட்டின் வடக்குப் பகுதி கடாகோஸில், 'சோடாலிட்டியம் கிறிஸ்டியானே விடே' என்ற கத்தோலிக்க அமைப்பால் பல ஆண்டுகள் துன்புறுத்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளின் முன், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் வத்திக்கான் பிரதிநிதி ஆகியோர் முழங்காலிட்டு மன்னிப்புக் கோரினர். முறைகேடுகள் மற்றும் அதிகார வரம்பு மீறல்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு வத்திக்கானால் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு மே 23 சனிக்கிழமையன்று, புனித திருமுழுக்கு யோவான் பங்குத்தளத்தில் நடைபெற்ற தூய ஆவியார் பெருவிழா திருப்பலியின் போது இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள், திருஅவையின் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தல்லான் பழங்குடியின சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த விவசாயிகள் சோடாலிசியோவுடன் தொடர்புடைய நபர்களால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தல், நில அபகரிப்பு, தொழிலாளர் சுரண்டல் மற்றும் உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்கள் பெட்ரோ சலினாஸ் மற்றும் பாவ்லா உகாஸ் ஆகியோரின் புலனாய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்த துன்புறுத்தல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, இந்த அமைப்பு 2025 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கலைக்கப்பட்டது.

வத்திக்கான் தரப்பில் இந்த அமைப்பைக் கலைக்கும் பணிகளை மேற்பார்வையிடும்  பேரருள்திரு  ஜோர்டி பெர்டோமு அவர்கள், "நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்; இன்று நாங்கள் அதற்காக மன்னிப்பு கோருகிறோம்"  என்று கூறி தவறை ஏற்றுக்கொண்டார். நில மோசடியை எதிர்த்துப்‌ போராடி உயிரிழந்த பழங்குடியின தலைவர்களின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவை புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் குறிப்பிட்ட கர்தினால் கார்லோஸ் காஸ்டிலோ மட்டாசோக்லியோ அவர்கள், கடந்த காலத் தவறுகளைத் திருத்துவதற்குத் திருஅவை அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கலந்துரையாடல், சமூக நீதி மற்றும் சாதாரண மக்களுடன் காட்டும் ஒற்றுமை ஆகியவற்றால் மட்டுமே "ஆயுதங்களற்ற, நம்பிக்கையூட்டும் அமைதியை" நிலைநாட்ட முடியும் என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விடுத்த அழைப்பையும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மே 2026, 14:24