தேடுதல்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பெரு திருஅவை பியூராவில் பரிகார திருப்பலி கொண்டாடியது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பெரு திருஅவை பியூராவில் பரிகார திருப்பலி கொண்டாடியது 

பெருவில் ஒடுக்கப்பட்ட தல்லன் பழங்குடியினருக்கான சிறப்புத் திருப்பலி

பெரு நாட்டின் பியூரா பகுதியில், கிறிஸ்தவ வாழ்வின் தோழமை அமைப்பால் பல ஆண்டுகளாக நில அபகரிப்பு மற்றும் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான தல்லன் பழங்குடியின மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கான நீதியை வலியுறுத்தவும் மே 23 அன்று ஒரு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 23, சனிக்கிழமையன்று, பெரு நாட்டின் வடமேற்குப் பகுதியான பியூராவில் அமைந்துள்ள புனித திருமுழுக்கு யோவான் பங்கில், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கடந்த ஆண்டு கலைக்கப்பட்ட 'கிறிஸ்தவ வாழ்வின் தோழமை என்ற அமைப்பினால், தல்லன் (Tallán) பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக நில அபகரிப்பு, கடுமையான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கான நீதியை வலியுறுத்தவும் இந்தச் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ வாழ்வின் தோழமை என்று அழைக்கப்படும் இந்த இயக்கம், 1970-களில் இருந்து இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வந்தது. இருப்பினும், காலப்போக்கில் அதன் நிறுவனர் லூயிஸ் பெர்னாண்டோ ஃபிகாரி மற்றும் உயர்நிலைத் தலைவர்கள் மீது வன்முறை, ஊழல் மற்றும் முறையற்ற செயல்பாடுகள் தொடர்பான பல புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த அமைப்பை முறையாகக் கலைத்தார். இந்த முடிவுக்கு, அந்த இயக்கத்தின் "அடிப்படைத் தகுதிகள் மற்றும் ஆன்மீக நோக்கம் குறைபாடு" முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. இது அவரது திருத்தந்தை பணிக்காலத்தின் இறுதியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.

இந்த அமைப்பைக் கலைக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் அதிகாரியான பேரருள்திரு ஜோர்டி பெர்டோம் பார்னோஸ் அவர்களை நியமித்தார். இவர் ஏற்கனவே சிலி மற்றும் பெருவில் பெற்ற வன்முறை தொடர்பான வழக்குகளை பேராயர் சார்லஸ் சிக்லூனாவுடன் இணைந்து விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மே 2026, 14:09