மனிதாபிமானத்தின் மறுவடிவம்: சகோதரி வெரோனிகா ராகோவாவின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
சகோதரி வெரோனிகா ராகோவா (Veronika Racková) படுகொலை செய்யப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, மே 17, ஞாயிறன்று, அவரது சொந்த ஊரான பானோவில் (Bánov) நினைவுத் திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலிக்கு பேராயர் நிகோலா கிராசோலி அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த திருப்பலியின் போது, சகோதரி வெரோனிகா மறைபரப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்ததை எடுத்துக்காட்டிய பேராயர் கிராசோலி அவர்கள், அவரை மறைபரப்புப் பணியின் சிறந்த முன்மாதிரியாகக் குறிப்பிட்டு அவரைப் புனிதராக அறிவிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
சகோதரி வெரோனிகா ராகோவா மறைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரது இறை நம்பிக்கையும் சேவையும் ஸ்லோவாக்கியா மற்றும் தெற்கு சூடானில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
1958 ஆம் ஆண்டு அப்போதைய ஸ்லோவாக்கியாவில் பிறந்த சகோதரி வெரோனிகா, தூய ஆவியின் ஊழியர்கள் சபையைச் சேர்ந்தவர். இவர் கானாவிலும், பின்னர் சூடான் மற்றும் தெற்கு சூடானிலும் மறைப்பணி மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர் யேய் (Yei) நகரில் உள்ள புனித பகிதாவின் மருத்துவ மையத்தை அவர் வழிநடத்தினார்.
கடந்த 2016 மே 16 அன்று, தென் சூடானில் ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பிய சகோதரி வெரோனிகா, இராணுவ வீரர்களால் சோதனைச் சாவடியில் சுடப்பட்டார். உடனடியாக கென்யாவின் நைரோபி நகருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மே 20 அன்று உயிரிழந்தார்.
தான் ஏன் தென் சூடானை விட்டு வெளியேறவில்லை என்பதற்கு, "கடவுள் எங்களோடு இருக்கிறார், நாங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறோம்" என இறப்பதற்கு முன்பு சகோதரி வெரோனிகா அளித்த உருக்கமான விளக்கமே அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்