தேடுதல்

 புனித நெப்பமூசின் யோவான் புனித நெப்பமூசின் யோவான் 

இன்றைய புனிதர்

திரு. பிலோமி அலெக்ஸ்

புனித நெப்பமூசின் யோவான்

கி.பி. 1345 ஆம் ஆண்டு, பொஹிமியா நாட்டின் 'நெப்போமுக்' (Nepomuk) என்ற ஊரில் ஒரு பக்திமிக்க குடும்பத்தில் இவர் பிறந்தார். குழந்தை பருவத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டபோது, இவருடைய பெற்றோர் இவரை இறைவனுக்கு அர்ப்பணித்து, நோய் நீங்கும்படி மனமுருகி வேண்டினர். இறை அருளால் இவர் பூரண குணமடைந்தார். பெற்றோர் நேர்ந்து கொண்டபடி, தன் வாழ்வை இறைவனுக்கே அர்ப்பணித்த இவர், பின்னாளில் ஒரு கத்தோலிக்க குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். அருட்தந்தை யோவான் தனது ஆழமான மற்றும் எழுச்சியூட்டும் மறைவுரைகளால் பிராக் நகரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மனம் மாறக் காரணமானார். மக்களின் ஆன்மீக வாழ்விலும் சமூக முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்த இவர், திறமையினாலும் பக்தியினாலும் பிராக் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராயரின் கீழ் 'முதன்மை குருவாக' உயர்த்தப்பட்டார்.

அருட்தந்தை யோவானின் உன்னதமான போதனைகளைக் கேட்ட அந்நாட்டு அரசி மனமாற்றம் அடைந்தார். அவர் தன் பாவங்களை அருட்தந்தை யோவானிடம் அறிக்கையிட்டு, ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக்கொண்டார். ஆனால், குணம்கெட்ட மன்னனான வென்செஸ்லாஸ், தன் மனைவியின் பாவ அறிக்கையில் உள்ள ரகசியங்களை தன்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று அருட்தந்தை யோவானை வற்புறுத்தினான். கத்தோலிக்க திருச்சபையின் சட்டப்படி, ஒப்புரவு அருட்சாதன ரகசியத்தை எக்காரணம் கொண்டும் யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது என்பதில் அருட்தந்தை உறுதியாக இருந்தார். மன்னனின் கட்டளையை ஆணித்தரமாக மறுத்ததால், அருட்தந்தை யோவான் சிறையில் அடைக்கப்பட்டார். கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், அவர் ஒப்புரவு அருட்சாதன முத்திரையை உயிரிலும் மேலாகப் பாதுகாத்தார். இறுதியில், கோபமடைந்த மன்னனின் உத்தரவின்படி, கி.பி. 1393 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள், அவர் தீயால் சுடப்பட்டு, பின்னர் பிராக் நகரின் 'வித்தாவா' ஆற்றில் தூக்கி வீசப்பட்டு மறைசாட்சியாக உயிர் துறந்தார்.

தன் உயிரே போனாலும் பாவ அறிக்கையின் ரகசியத்தைக் காத்து நின்ற அருட்தந்தை புனித நெப்பமூசின் யோவானை, திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவர்கள் கி.பி. 1729 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் புனிதராக உயர்த்தி அறிவித்தார். மேலும், இவர் "தவறான தீர்ப்புகளுக்கு உள்ளாக்கப்படுவோர்" மற்றும் "அவதூறுகளால் பாதிக்கப்படுவோரின்" பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். இவருடைய திருவிழா ஆண்டுதோறும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது.

புனித நெப்பமூசின் யோவானின் திருவிழாவைக் கொண்டாடும் நாமாகிய நாமும், நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மனதார மன்னித்து, அவர்களை அன்பு செய்து வாழ்வதற்கும், உண்மையை விட்டு விலகாமல் இருப்பதற்கும் இறைவன் வரம் அருளும்படியாக அவரிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 14:18