தேடுதல்

காசியா நகர் புனித ரீட்டா காசியா நகர் புனித ரீட்டா  

இன்றைய புனிதர்

திரு. பிலோமி அலெக்ஸ்

காசியா நகர் புனித ரீட்டா

இத்தாலி நாட்டின் ரோகபோரேனா கிராமத்தில், அந்தோணியோ-அமாத்தா தம்பதியருக்கு கி.பி. 1381 ஆம் ஆண்டு புனித ரீட்டா பிறந்தார். சிறு வயது முதலே தன் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து ஓர் அருட்சகோதரியாக வாழவே அவர் விரும்பினார். எனினும், பெற்றோரின் விருப்பத்திற்குப் பணிந்து அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், தன் கணவரால் பல துன்புறுத்தல்களுக்கு ஆட்பட்ட நிலையிலும், ரீட்டா பொறுமையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. பிற்காலத்தில், முன்பகை காரணமாக அவரது கணவர் படுகொலை செய்யப்பட்டார். கணவரின் இறப்பிற்குப் பின், பழிவாங்கும் எண்ணத்தோடு வளர்ந்த தனது இரண்டு மகன்களையும், அவர்கள் பாவம் செய்வதற்கு முன்பாகவே இறைவன் தன்னிடம் சேர்த்துக்கொண்டார். இதனால் ரீட்டா தன் குடும்பத்தை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார்.

இதன்பின், இத்தாலி நாட்டின் காசியா நகரில் உள்ள புனித அகுஸ்தீன் துறவற மடத்தில் சேர்ந்து அருட்சகோதரியானார். அங்கு சுமார் 40 ஆண்டுகள் இறைப்பணியை மிகுந்த ஆர்வத்தோடு ஆற்றினார். இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தானும் தன் உடலில் அனுபவிக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டினார். இதன் பலனாக, கி.பி. 1442 ஆம் ஆண்டு ஒரு புனித வெள்ளிக்கிழமையன்று, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முள்முடியிலிருந்து ஒரு முள் இவரது நெற்றியில் குத்தி, இரத்தம் வடியத் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் இந்தத் திருப்பாடுகளின் வேதனையைத் தன் உடலில் தாங்கி வாழ்ந்த அருட்சகோதரி ரீட்டா, கி.பி. 1457 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் விண்ணகப் பேறடைந்தார்.

இறப்பிற்குப் பின்பும் அவரது உடல் அழியாமல் புதுமையுடன் விளங்கியது. இதனால், கி.பி. 1900 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் (Pope Leo XIII) இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கி, "நம்பிக்கையற்ற சூழ்நிலைகளிலும் தனிமையில் இருப்பவர்களுக்கும் பாதுகாவலர்" ஆக அறிவித்தார். காசியா நகர் புனித ரீட்டாவின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், இறைவனுக்காகத் தங்களை அர்ப்பணித்துத் துன்பங்களை ஏற்கும் துறவிகளுக்காகவும், அவர்களுக்குத் தேவையான உடல் மற்றும் ஆன்மீக ஆற்றல் கிடைக்கவும் ஒறுத்தல் முயற்சிகளோடு இணைந்து செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2026, 13:48