தேடுதல்

சிரியாவிற்கான திருத்தூதரகத் தூதர் சில கிறிஸ்தவ கிராமங்களுக்குச் சென்றார். சிரியாவிற்கான திருத்தூதரகத் தூதர் சில கிறிஸ்தவ கிராமங்களுக்குச் சென்றார். 

சிரியாவின் கிறிஸ்தவ சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டிய திருத்தந்தையின் அரசுத் தூதர்

சிரியாவிற்கான திருத்தந்தையின் அரசுத் தூதரான பேராயர் லூய்கி ரோபர்டோ கோனா அவர்கள், ஜூன் 26 முதல் 28 வரை வடமேற்கு சிரியாவின் யாகுபி, கினாயே மற்றும் காசானியே ஆகிய கிறிஸ்தவ கிராமங்களுக்குச் சென்று, போர், இடப்பெயர்வு மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதலும் நம்பிக்கையும் வழங்கினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

சிரியாவிற்கான திருத்தந்தையின் அரசுத் தூதரான பேராயர் லூய்கி ரோபர்டோ கோனா அவர்கள், ஜூன் 26 முதல் 28 வரை வடமேற்கு சிரியாவில் உள்ள யாகுபி, கினாயே மற்றும் காசானியே ஆகிய கிறிஸ்தவ கிராமங்களுக்குச் சென்று, பல ஆண்டுகாலப் போர், இடப்பெயர்வு மற்றும் அண்மைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள நம்பிக்கையாளர்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட பேராயர் கோனா அவர்கள், உள்ளூர் மக்களின் அச்சங்களையும் நம்பிக்கைகளையும் கேட்டறிந்தார். மேலும், தொடர்ந்து வரும் சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கவும், கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இத்லிப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கிராமங்களும், சிரியாவின் பழமையான கிறிஸ்தவ சமூகங்களில் ஒன்றின் தாயகமாக விளங்குகின்றன. ஒரு காலத்தில் 'இஸ்லாமிய அரசின்' கட்டுப்பாட்டில் இருந்த இந்த கிராமங்கள், பிரான்சிஸ்கன் துறவிகளின் ஆதரவோடு தங்களின் கிறிஸ்தவ பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. இந்தத் துறவிகள் அருள்வாழ்வுப் பராமரிப்பை வழங்குவதோடு, கல்வி, நலவாழ்வு மற்றும் சமூக முன்னேற்ற முயற்சிகள் மூலம் அவர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்துகிறார்கள்.

இந்தப் பயணத்தின் போது, துன்புறுத்தல், வன்முறை மற்றும் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த குடும்பங்களைச் சிரியாவிற்கான திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் லூய்கி ரோபர்டோ கோனா அவர்கள் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் பகிர்ந்த சாட்சியங்கள், அவர்களின் ஆழ்ந்த துயரத்தையும், அதே நேரத்தில் தங்களின் மூதாதையர் வாழ்ந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதியான மனநிலையையும் வெளிப்படுத்தின.

மேலும் இளைஞர்கள் கல்விக்கான தேவை, வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட அதே வேளையில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும் பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுப்பது குறித்த உரையாடல்களும் இந்த சந்திப்பின் போது இடம்பெற்றன.

பேராயர் கோனா அவர்கள், சிரியாவின் கிறிஸ்தவ மக்களின் எதிர்கால நம்பிக்கையை உறுதி செய்வதற்கும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 12:39