தேடுதல்

அவர் பெயர் மரியா அவர் பெயர் மரியா  

அவர் பெயர் மரியா

உலகிற்கு மீட்பரை அளித்த மரியாவை, கடவுள் பணி முடிந்ததும் விலக்கிவிடவில்லை; மகிமைப்படுத்தினார். மரியாவைப் போற்றுவது மனித விருப்பமல்ல; கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வதே.

மரியாவை கடவுள் தாங்கிப் பிடித்தாரா?

அருள்பணி சேவியர் டெரன்ஸ்

இயேசு கிறிஸ்துவில் அன்பிற்குரிய சகோதரர், சகோதரிகளே! அன்னை மரியாவின் அன்புக் குழந்தைகளே!  கடவுள் தமது மீட்புத் திட்டத்தில் தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரையும் எவ்வாறு உருவாக்கி, வழிநடத்தி, மகிமைப்படுத்தினார் என்பதையும் இதுவரை கேட்டோம். அதேபோல், கடவுள் மரியாவையும் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட பணி மற்ற அனைவரின் பணியையும் விட உயர்ந்தது. இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் ஆகியோர் அனைவரும் கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு அறிவித்தார்கள். கடவுளின் சார்பாக மக்களுக்குப் பணியாற்றினார்கள். ஆனால் மரியாவின் அழைப்பு முற்றிலும் வித்தியாசமானது. அவர் கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக அல்ல; "வார்த்தையாய் இருந்த கடவுளை" (யோவான் 1:1,14) மனிதராக உலகிற்கு அளிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். உருவமில்லாத இறைமகனுக்கு மனித உடலையும் இரத்தத்தையும் கொடுத்து, அவரை கருவில் சுமந்து, பெற்றெடுத்து, வளர்த்து, உலகின் மீட்பராக அளித்தவர் மரியா.

இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.

இத்தகைய உன்னதமான பணிக்காக மரியாவைப் பயன்படுத்திய கடவுள், பணி முடிந்தவுடன் அவரை விலக்கிவிட்டாரா? அல்லது தொடர்ந்து தாங்கி மகிமைப்படுத்தினாரா?

விவிலியம் இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலை அளிக்கிறது.

பழைய ஏற்பாட்டில் கடவுள் தேர்ந்தெடுத்த எவரையும் அவர் கைவிடவில்லை. எடுத்துக்காட்டாக, பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை மோசேயின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டின் எல்லைவரை நடத்திச் சென்றார். பின்னர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் (மத். 17:1-3) அதே மோசேயை மீண்டும் மகிமையோடு வெளிப்படுத்தினார். அப்படியானால், கடவுளுடைய மகனைத் தன் கருவில் சுமந்து, உலகிற்கு அளித்த மரியாவை கடவுள் எவ்வளவு அதிகமாக மகிமைப்படுத்தியிருப்பார்! திருச்சபையின் வரலாற்றில் சிலருடைய கண்களுக்கு மரியாவின் மாட்சிமை மறைந்திருந்தாலும், பலருடைய கண்களுக்கு அதை கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முதல் சான்றாக லூக்கா நற்செய்தி 1:48-ஐப் பார்க்கலாம். "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பார்கள்." இந்த வார்த்தைகள் மரியாவின் தற்புகழ்ச்சி அல்ல. இது தூய ஆவியாரால் தூண்டப்பட்ட இறைவாக்கு. ஏன் இப்படிச் சொல்கிறோம்? எலிசபெத்தின் வீட்டிற்கு மரியா சென்றபோது, அவர் வாழ்த்திய உடனே எலிசபெத்தின் கருவிலிருந்த குழந்தை துள்ளியது. உடனே எலிசபெத் தூய ஆவியால் நிரப்பப்பட்டார் (லூக். 1:41). அதன் பிறகு மரியா பாடிய மக்னிபிகாத் முழுவதும் தூய ஆவியாரின் உந்துதலால் பிறந்த இறைவாக்காகும். எனவே, "எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பார்கள்" என்பது மரியாவின் விருப்பமல்ல; கடவுளின் விருப்பம். அதனால், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் மரியாவை பேறுபெற்றவர் என்று போற்றுவது கடவுளுடைய திருவுளத்தோடு ஒத்துச் செல்கிறது. இப்போது பழைய ஏற்பாட்டிலிருந்து இன்னொரு முக்கியமான வசனத்தைப் பார்ப்போம்.

சபையுரையாளர் 3:11 கூறுகிறது:

"கடவுள் ஒவ்வொன்றையும் அதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், தொடக்கம் முதல் முடிவு வரை அவர் செய்கின்ற அனைத்தையும் மனிதனால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது."

இந்த வசனத்தில் மூன்று முக்கியமான உண்மைகள் உள்ளன.

முதலாவது, கடவுள் எல்லாவற்றையும் அதன் சரியான காலத்தில் வெளிப்படுத்துகிறார். ஒரே நேரத்தில் அனைத்தையும் மனிதருக்கு காட்டுவதில்லை.

இரண்டாவது, மனிதனுக்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய உணர்வை கடவுள் கொடுத்திருக்கிறார்.

மூன்றாவது, இந்த மூன்று காலங்களைப் பற்றி சிந்திக்க முடிந்தாலும், கடவுளுடைய முழுமையான திட்டத்தை மனிதனால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாது.

அதனால்தான், மரியாவின் மகிமையும் திருச்சபையின் வாழ்வில் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தம் திட்டத்தை காலம் காலமாக தெளிவுபடுத்தி வந்தார். எனவே, மரியாவுக்கு நாம் செலுத்தும் மதிப்பும் மரியாதையும் மனிதர்கள் உருவாக்கிய ஒன்று அல்ல. அது தூய ஆவியாரின் தூண்டுதலால் வெளிப்படுத்தப்பட்ட கடவுளுடைய விருப்பத்தின் நிறைவேற்றமாகும்.

அன்பானவர்களே,

மரியாவைப் போற்றுவது இயேசுவை மறைப்பதல்ல; மாறாக, இயேசுவை உலகிற்கு அளித்த தாயை கடவுள் மகிமைப்படுத்திய விதத்தை ஏற்றுக்கொள்வதாகும். அடுத்த நிகழ்ச்சியில், விவிலியத்தின் வெளிச்சத்தில் மரியாவின் மகிமையை இன்னும் ஆழமாக சிந்திப்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 07:49