தேடுதல்

அல்மேரியாவில் காட்டுத்தீக்குப் பிந்தைய பாதிப்புகள் அல்மேரியாவில் காட்டுத்தீக்குப் பிந்தைய பாதிப்புகள்  (ANA BELTRAN)

ஸ்பெயின் காட்டுத்தீ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டிய அல்மேரியா திருஅவை!

பெயினின் அல்மேரியா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், அல்மேரியா ஆயர் அந்தோனியோ கோமேஸ் கான்டேரோ, கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றால் தீ வேகமாகப் பரவியதாக தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டின் அல்மேரியா மறைமாவட்டம், ஜூலை 9ஆம் நாள் பெடார் (Bédar) மற்றும் லோஸ் கல்லார்டோஸ் (Los Gallardos) பகுதிகளில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கியது. இந்தக் காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்; 23 பேரைக் காணவில்லை; 6,600 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது; ஏறத்தாழ 1,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் வெப்பம், பலத்த காற்று மற்றும் கடினமான நில அமைப்பு காரணமாகக் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவியதாக, வத்திக்கான் செய்திகளுக்கு (Vatican News) வழங்கிய நேர்காணலில் அல்மேரியா ஆயர் அந்தோனியோ கோமேஸ் கான்டேரோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அதிகாரிகள், பங்குத்தந்தையர்கள் மற்றும் காரித்தாஸ் அமைப்பு இணைந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை விரைவாக வழங்கியதை பாராட்டிய ஆயர் அவர்கள், பல பொதுமக்களும் தங்களது வீடுகளைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களை வரவேற்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தீ பரவுவதை எச்சரிப்பதற்காக, ஒரு பெண் ஆலய மணியை அடித்து மக்களை பாதுகாப்பாக வெளியேறச் செய்தது மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்ததாக ஆயர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுடன், குறிப்பாக முதியோர் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுடன், அருள்பணியாளர்கள் தொடர்ந்து இருந்து ஆறுதலும் ஆன்மீக துணையும் வழங்கினர். இத்துயரமான நேரத்தில் குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, துன்புறுவோருக்கு உதவிக்கரம் நீட்டும் "நல்ல சமாரியர் திருஅவையாக" கிறிஸ்தவர்கள் மாற வேண்டும் என்று ஆயர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நெருக்கடியில் வெளிப்பட்ட ஒற்றுமையும் அன்பும் நம்பிக்கையின் அடையாளமாகும் என்று குறிப்பிட்ட ஆயர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  "இறைவா உமக்ககே புகழ் (Laudato Si) என்ற திருத்தூது மடலின் போதனையை நினைவுகூர்ந்ததுடன் இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வை அனைவரும் புதுப்பிக்க வேண்டும் என்றும், "நாம் இயற்கையைப் பாதுகாத்தால், இயற்கையும் நம்மைப் பாதுகாக்கும்" என்றும்  வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூலை 2026, 12:41