தேடுதல்

திருப்பலியின் போது கார்டினல் செர்னி திருப்பலியின் போது கார்டினல் செர்னி 

பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிப்பின் பாலங்களை உருவாக்குங்கள்: கர்தினால் செர்னி

கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (AMECEA) 21வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கத் திருப்பலியில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி, கிறிஸ்தவர்கள் பொறுமையுடனும் தூய ஆவியானவரின் வல்லமையுடனும் ஒன்றிப்பு, நம்பிக்கை, நீதி மற்றும் நல்லாட்சிக்கான பாலங்களை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் பொறுமையுடன் ஒன்றிப்பின் பாலங்களை உருவாக்கவும், தூய ஆவியானவரின் வல்லமையால் உலகை மாற்றவும் வேண்டுமென ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (AMECEA) 21வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கத் திருப்பலியில் கர்தினால் செர்னி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 18 முதல் 22 வரை இடம்பெறும்  இந்தப் பேரவையின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வாக ஜூலை 19, ஞாயிறன்று இடம்பெற்ற திருப்பலியில் "இளைஞர்களுடனான அமேசியா-வின் (AMECEA) கூட்டொருங்கியக்கப் பயணம்: ஒன்றிப்பு, நம்பிக்கை, நீதி மற்றும் நல்லாட்சிக்கான பாலங்களை உருவாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 140 ஆயர்கள் பங்கேற்றனர்.

தனது மறையுரையில் "புளித்த மாவு, கோதுமை மற்றும் களைகள், கடுகு விதை ஆகிய நற்செய்தியின் உவமைகளைப் பற்றிச் சிந்தித்த கர்தினால் செர்னி அவர்கள், கிறிஸ்தவர்கள் அங்கீகாரத்தையோ அல்லது அதிகாரத்தையோ தேடுவதை விட, சமுதாயத்தை உள்ளிருந்து அமைதியாக மாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப் பிட்டுள்ளார்.

மேலும் "புளித்த மாவைப் போல, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்களின் பற்றுறுதி மிக்க அன்றாட  சான்று வாழ்வு மற்றும் கடவுளுடனான ஆழ்ந்த ஒன்றிப்பின் மூலம் இந்த உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

"குறிப்பாக, இளைஞர்கள் தங்களின் கிறிஸ்தவ அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் உண்மையான ஒற்றுமையை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்" என்று ஊக்குவித்த கர்தினால் செர்னி அவர்கள், பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி " அவசர முடிவுகள் மற்றும் விரைவான தீர்வுகள் ஏற்கனவே வளர்ந்து வரும் நன்மைகளை அழித்துவிடக்கூடும்"  என்றும் எச்சரித்துள்ளார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) என்னும் திருத்தூது மடலை மேற்கோள் காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், கிறிஸ்தவர்கள் சோர்வடைந்து பின்வாங்காமல், தீமையை தைரியமாகக் கண்டிக்கவும், மிகச்சிறிய விதைகளிலிருந்து சிறந்த பலன்களைக் கொண்டுவர கடவுளால் முடியும் என்று நம்பி, தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தினார்.

இறுதியாக ஒன்றிப்பு, நம்பிக்கை, நீதி மற்றும் நல்லாட்சிக்கான பாலங்களை உருவாக்குவதற்கான அருளை வேண்டி இறைவேண்டல் செய்து தனது மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஜூலை 2026, 13:15