தேடுதல்

கர்தினால் மத்தேயு சூப்பி கர்தினால் மத்தேயு சூப்பி 

உக்ரைனில் போர்க் கைதிகளைச் சந்தித்த கர்தினால் சூப்பி!

திருத்தந்தை அவர்களின் தூதுவராக உக்ரைனுக்கு இரண்டாவது அமைதிப் பயணம் மேற்கொண்ட இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு சூப்பி, ல்விவ் மாநிலத்தில் உள்ள ஜகித்-1 தடுப்புக் காவல் மையத்தில் போர்க் கைதிகளைச் சந்தித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை அவர்கள் அனைவருக்காகவும், போர் விரைவில் முடிவுக்கு வருவதற்காகவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு சூப்பி அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தூதுவராக, கர்தினால் சூப்பி அவர்கள், உக்ரைனுக்கான தனது இரண்டாவது அமைதிப் பயணத்தை, ல்விவ் (Lviv) மாநிலத்தில் அமைந்துள்ள ஜகித்-1 (Zakhid-1) தடுப்புக் காவல் மையத்தில், ரஷ்ய இராணுவத்திற்காகப் போரிட்டபோது சிறைபிடிக்கப்பட்ட வீரர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கர்தினால் சூப்பி அவர்கள், கைதிகளுக்கு மூன்று அடையாளப் பரிசுகளை வழங்கியதுடன், அவர்கள் விரைவில் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக ஒரு சாவிக்கொத்தும், அனைவருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக சாலுஸ் போபுலி ரோமானி (Salus Populi Romani) அன்னையின் திருஉருவ அட்டையும், திருத்தந்தை அவர்களின் புகைப்படத்தையும் வழங்கி, அமைதி நிலவவும் போர் முடிவுக்கு வரவும் திருத்தந்தை அவர்களுக்காகச் செபித்து வருவதாகத் தெரிவித்தார்.

இப்பயணம், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கர்தினால் சூப்பி அவர்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணியின் தொடர்ச்சியாகும். அப்பணியில் போர்க் கைதிகள் பரிமாற்றம், வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட உக்ரைனிய குழந்தைகளை மீட்டெடுத்தல் மற்றும் போரில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகத்திற்கு மீள அனுப்புதல் போன்ற முயற்சிகள் இடம்பெற்றிருந்தன.

உக்ரைனுக்கான திருத்தூதர் பேராயர் விஸ்வால்தாஸ் குல்போகாஸ் மற்றும் திருப்பீடத்திற்கான உக்ரைன் தூதர் ஆன்த்ரி யுராஷ் ஆகியோருடன் கர்தினால் சூப்பி அவர்கள், அந்தத் தடுப்புக் காவல் மையத்தைப் பார்வையிட்டு, 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கைதிகளை சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிந்தார்.

இறுதியாக,  நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி முன்னேறவும், விரைவில் தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப இறைவன் அருள்புரிவாராக என்று இறைவேண்டல் செய்வதாகவும் கூறிய கர்தினால் சூப்பி அவர்கள், வெறுப்பும் தீமையும் தங்கள் இதயங்களில் வேரூன்ற இடமளிக்காமல், நம்பிக்கையுடனும் புதிய வாழ்வை நோக்கியும் முன்னேறுமாறு கைதிகளை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூலை 2026, 12:35