இன்றைய புனிதர்
புனித அலெக்ஸிஸ்
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித அலெக்ஸிஸ், கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரோம் நகரில் செல்வச் செழிப்பு மிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். தமது வாழ்வை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். திருமண நாளன்றே, எவரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, இடேசா (Edessa) நகருக்குச் சென்றார். அங்கு புனித மரியன்னை ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து வாழ்ந்தார். தமக்குக் கிடைத்த உணவையும் ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டார். துன்புறும் மக்களுக்காக தினமும் இறைவனிடம் மன்றாடியதோடு, நோயுற்றோருக்கு உதவி செய்து அவர்களுக்கு ஆறுதலாகவும் இருந்தார். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உரோம் நகருக்குத் திரும்பியபோதும், அவரை அவரது பெற்றோர் உட்பட யாரும் அடையாளம் காணவில்லை. எனவே, தமது சொந்த வீட்டிலேயே பணியாளராகத் தங்கி, மாடிப்படிக்குக் கீழ் மிகுந்த எளிமையுடனும் மறைவான வாழ்வுடனும் மேலும் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்தார். தமது உழைப்பில் கிடைத்த வருமானத்தையும் ஏழைகளுக்கே வழங்கினார்.
தாம் யார் என்பதையும், தமது வாழ்வின் உண்மையையும் ஒரு குறிப்பாக எழுதி வைத்தார். அவர் இறைவனடி சேர்ந்த பிறகு அந்தக் குறிப்பு வாசிக்கப்பட்டபோதுதான், இறந்தவர் அவர்களுடைய மகனான அலெக்ஸிஸ் என்பதும் அனைவருக்கும் தெரியவந்தது. தமது வாழ்வை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்து, ஏழைகளுக்குச் சேவை செய்து, ஜெப வாழ்வில் நிலைத்திருந்த புனித அலெக்ஸிஸை திருஅவை புனிதராக உயர்த்தியது. அவர் பிச்சை எடுத்து வாழ்பவர்களுக்கும், திருப்பயணிகளுக்கும் பாதுகாவலர் என்று போற்றப்படுகிறார்.
"கடவுளின் மனிதர்" என்று அழைக்கப்படும் புனித அலெக்ஸிஸின் திருவிழாவைக் கொண்டாடும் நாம், குடும்பங்களை விட்டு பிரிந்து வாழும் அனைவரும் விரைவில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்து வாழ இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.