தேடுதல்

கராச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவர் (கோப்புக் காட்சி) கராச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவர் (கோப்புக் காட்சி)  (ANSA)

கராச்சியில் கிறிஸ்தவக் குடும்பத்தைக் காத்த மதநல்லிணக்க ஒற்றுமை!

பாகிஸ்தானின் கராச்சியில், குர்ஆன் அவமதிப்பு குறித்த சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டால் ஏற்பட்ட பதற்றத்தின் மத்தியில், உள்ளூர் அதிகாரிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தினரின் விரைவான தலையீட்டால் கிறிஸ்தவக் குடும்பம் மீதான வன்முறை தடுக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம்‌ - வத்திக்கான்

பாகிஸ்தானின் கராச்சியில், கடந்த ஜூலை 9 ஆம் நாள் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளால் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள், இஸ்லாமிய மதப்பள்ளி மாணவர்கள் மற்றும் சமூகத்தினரின் விரைவான நடவடிக்கையால் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு எதிராக நடக்கவிருந்த வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டது.

அமைதி மற்றும் நீதிக்கான கத்தோலிக்க ஆணையத்தின் (CCPJ) நிர்வாக இயக்குனர் நயீம் யூசுப் கில் அவர்களின் கூற்றுப்படி, அங்கு குடியிருக்கும் கிறிஸ்தவரான அஸீம் ஜாவேத் மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்கள் அடங்கிய குர்ஆனின் அவமதிக்கப்பட்ட பக்கம் ஒன்று, அங்குள்ள ஒரு கடைக்காரருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று பால்டியா நகரில் உள்ள அந்த குடும்பத்தின் வீட்டை முற்றுகையிட்டது.

அரசும் காவல்துறையும் விரைந்து செயல்பட்டு, இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்ததால் நிலைமை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாக கில் அவர்கள் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ சமூகத்திற்கு ஆதரவாக நின்ற இஸ்லாமிய மதத் தலைவர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு பெரும் வன்முறையைத் தடுத்து நிறுத்தியது பெரிதும் பாராட்டப்பட்டது.

குடிமைப் பணி அதிகாரிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பால் ஜரன்வாலா மற்றும் கோஜ்ராவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைப் போன்ற பெரும் துயரங்களைத் தடுக்க முடியும் என்று கில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் தங்களை இன்னமும் பாதுகாப்பற்றவர்களாகவே உணர்வதால், இந்த ஒரு நிகழ்வு ஒரு நிரந்தர மாற்றத்தைக் குறிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பல ஆண்டுகால மதநல்லிணக்க உரையாடல்களும், சுமூகமான சமூகவலைப்பின்னலும் தான், இந்தச் சம்பவத்தின் போது அமைதி மற்றும் நீதிக்கான கத்தோலிக்க ஆணையம் மிக விரைவாகச் செயல்பட உதவியது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவறான குற்றச்சாட்டுகள் வன்முறையாக மாறுவதைத் தடுக்க பள்ளிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நாடு தழுவிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கில் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அமைதியான முடிவை வரவேற்ற அதே வேளையில், பாகிஸ்தானில் உள்ள பல கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பாகுபாடு, வெறுப்பு மற்றும் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய கில் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான பெரும்பாலான தாக்குதல்கள் நடந்துள்ள பஞ்சாப் மாநிலத்தை விட, சிந்து மாநிலம் அதிக மத சகிப்புத்தன்மை கொண்டதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூலை 2026, 12:47