விளிம்புநிலை மக்களுக்கான யுஐஎஸ்ஜி (UISG) சகோதரிகளின் சேவையை பாராட்டிய ராணி கமிலா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இலண்டனில் உள்ள அரச இல்லமான கிளாரன்ஸ் இல்லத்தில் ராணி கமிலாவை சந்தித்தனர்.
வத்திக்கானில் இடம்பெற்ற முதல் சந்திப்பைத் தொடர்ந்து மீண்டும் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், உலகின் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குச் சேவை செய்யும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் அர்ப்பணிப்பைப் ராணி கமிலா பாராட்டினார்.
திருப்பீடத்திற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் இடைக்காலப் பொறுப்பு அதிகாரி முனைவர் அனபெல் இங் அவர்கள், இந்தச் சந்திப்பை ஒரு "சிறப்புவாய்ந்த மற்றும் மகிழ்ச்சியான தருணம்" என்று விவரித்தார். மோதல் இடம்பெறும் பகுதிகளிலும், விளிம்புநிலை சமூகங்களிலும் சகோதரிகள் செய்யும் தாழ்மையான மற்றும் தைரியமான சேவையை ராணி மனதாரப் பாராட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன், லெபனோன் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளில் போர் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் மக்களுடன் தங்கியிருக்கும் சகோதரிகளின் அனுபவங்களை யுஐஎஸ்ஜி (UISG) அமைப்பின் நிர்வாகச் செயலாளரான சகோதரி ராக்ஸான் ஷேர்ஸ் அவர்கள் பகிர்ந்து கொண்டார். குண்டுவீச்சுகளின் போது பயந்துபோன குழந்தைகளை ஒரு சகோதரி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதையும், குண்டுகளின் சத்தத்திற்கு மத்தியில் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க திருவிவிலியத்தை வாசித்த நிகழ்வையும் கேட்ட ராணி கமிலா அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தார்.
110-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித வர்த்தகத்திற்கு எதிராக தடுப்பு, கல்வி, வழக்காடுதல் மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் மூலம் போராடும் 'தலித்தா கும்' (Talitha Kum) அமைப்பின் பணிகளை சகோதரி அப்பி அவெலினோ எடுத்துரைத்தார்.
மேலும் "இந்த அமைப்பு 2025-ஆம் ஆண்டில் 12 இலட்சம் மக்களுக்குச் சேவை செய்துள்ளது" என்றும்" இந்த முயற்சி இளைஞர்களை மனிதக் கடத்தலுக்கு எதிரான தூதர்களாக பயிற்றுவிக்கிறது" என்றும் அந்த சகோதரி எடுத்துரைத்தார்.
காலநிலை மாற்றம், இடம்பெயர்வு மற்றும் மனித வர்த்தகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலியுறுத்திய சகோதரி மாமலிஃபர் போரேகு அவர்கள், பெண்கள், சிறுமிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக வளங்குன்றா வேளாண்மை போன்ற வாழ்வாதாரத் திட்டங்களை அங்கு பணி செய்யும் சகோதரிகள் ஊக்குவிப்பதையும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.